பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 267 / 300

சொற்கோட்டம் இல்லது

அச்சுப் பக்கம் 570571 · ஸ்கேன் 587588 · அதிகாரம் 12 (நடுவு நிலைமை) — குறள் 119

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

இன்னா செய்யும் இம்மன்னவன் இனியும் ஆட்சியில் இருந்தலாகாதென்று எதிர்நாட்டார் பலர் கூட்டாகச் சேர்ந்து, பெரும் படைகொண்டு வளைத்தனர். வளைத்துச் சூழ்ந்தவர்களோ சிறு சிறு கோட்டங்களுக்கு வேந்தர்கள்! சிற்றரசர் நிலையில் இருந்தவர்கள்! எனினும் சிறுதுளி பெரு வெள்ளமென அவர்தம் படைப் பெருக்கம், பேரரசின் கோட்டையைத் தாக்கியது. திடீர்த்தாக்குதலால் நிலை குலைந்த பேரரசன், கோட்டையைப் பகைவர் வசம் விடுத்துத் தனது வீரர்கள் சிலருடனும் ஓரிரு தளபதிகளுடனும் தப்பிப்பிழைத்து ஓடிவிட்டான்.

மலைகள் மொய்த்துக் காடுபடர்ந்த பள்ளத்தாக்குப் பகுதி குகையொன்றில் பேரரசனின் குடும்பமும் அவனது தளநாயகர்களும் வீரர்களும் மறைந்து வாழ்ந்தனர். இழந்த நாட்டை மீட்க வேண்டும்; பறிக்கப்பட்ட அரசை மீண்டும் கைப்பற்ற வேண்டும் - இந்த எண்ணக் கனவுகளால் பேரரசனின் இதயம் கனத்துப்போனது!

அவனை வீழ்த்தி அரசைக் கைக்கொண்டவர்களோ - அவர்களுக்குள் ஒற்றுமையின்றி அடிக்கடி ஒருவருக்கொருவர் போர் தொடுத்த வண்ணம் இருந்தனர். எந்நேரமும் “போர்! போர்!” என்ற கூச்சலால் குடிமக்கள் நிம்மதி இழந்து தவித்தனர். அந்நிலையை மாற்றிடவேண்டுமெனத் திடமனம்கொண்டு குடிமக்கள், தங்களுக்கோர் தலைவனைத் தேர்ந்தெடுத்தனர்.

அந்தத் தலைவன், அடவியில் ஒளிந்து வாழும் பேரரசனைப்போய்ச் சந்தித்தான். அவனைப் பேரரசன் மிக்க அன்புடன் வரவேற்று, ஏதோ ஒரு சூழ்நிலையில் மக்களைப்பற்றிக் கவலைப்படாமல் ஆட்சி நடத்தியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டான். பேரரசனைப் பார்த்து, அந்தத் தலைவன் சொன்னான்.

“அரசே! அருகிலிருந்தோர் போட்ட தூபத்தில் அநியாயங்களுக்கு ஆதரவு அளித்தீர்! நச்சுமனத்தினர் ‘அறிவுரை’ கேட்டு நல்லோர் பலரை பகைவராக்கிக் கொண்டீர்! அதன் விளைவாகக் கொடி இழந்தீர்! கோல் இழந்தீர்! ஆனால், உம்மை வீழ்த்தியவர்கள் அவர்களுக்குள் சீறிப்பாய்ந்து ஒருவரையொருவர் அழித்திட முனைகின்றனரேயன்றி, மக்கள் நலம் காத்திடத் தயாராக இல்லை!”

தலைவனின் உரைகேட்டுத் தலைகுனிந்திருந்த பேரரசன்; அவனது இரு கரங்களையும் பிடித்துக்கொண்டு -

“நண்பனே! உன் உறுதியை நானறிவேன். நட்புக்கொண்டாலும் பகை கொண்டாலும் ஒரு நிலையில் நிற்பவன் நீ! என்னை நம்பு! மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக நான் வருந்துகிறேன். மீண்டும் மக்களின் சார்பில் உன் துணை இருந்தால், இழந்த அரசைப்பெற்று என்றென்றும் நன்றி மறவாது உன் நட்பைப்போற்றி, மக்களையும் காப்பாற்றுவேன்.”

என்று உருக்கமாகக் கூறினான். தலைவனின் மனம் உருகியது. பேரரசனுக்குத் துணை நிற்பதாகக் கூறி, அதனை உடனடியாக நாட்டு மக்களிடமும் அறிவித்தான்.

குடிமக்கள் தன் பக்கமிருந்ததால், தனது நாட்டைப் பிடித்துக்கொண்டவர்கள் மீது படையெடுத்துச் செல்வது பேரரசனுக்கு எளிதாயிற்று! அதற்குள் சிற்றரசர்களும் ஒற்றுமையின்றிச் சிதறிவிட்டனர். நடைபெற்ற பெரும் போரில், பேரரசன் வெற்றிமாலை சூடினான்.

ஆனால், அந்த வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தானே - மலைக் குகையில் மறைந்து கிடந்தபோது வலியவந்து வலிமை சேர்த்துக் கொடுத்தானே - அந்த மக்கள் தலைவனுக்கு அளித்த வாக்குறுதியைப் பேரரசன் மதிக்க மறந்துவிட்டான். அதனால் ஏமாற்றமடைந்த அந்தத் தலைவனைப் பார்த்து ஒரு சிற்றரசன் எகடியமாகவும் இரக்க சிந்தையோடும் கேட்டான்:

“இப்போதாவது தெளிவு பிறந்ததா? உண்மை புரிந்ததா?” என்று!

“என் செய்வது! உங்களுக்குள் ஒற்றுமையில்லை! அதனால் வந்த வினை!” என விடையளித்த தலைவன், மற்றொரு விளக்கமும் கூறினான்:

“உள்ளத்தில் கோணல் இல்லாத உறுதி வாய்ந்தவர்களுக்குத்தான் சொல்லிலும் கோணல் இல்லாமல் இருக்கும். அதன் பெயரே நடுவு நிலைமை என்ற அறநெறியாகுமென வள்ளுவர் கூறியுள்ளார்.”

“சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின்”

அதிகாரம் - 12 - நடுவு நிலைமை; பாடல் - 119

செப்பம்=நடுவுநிலைமை கோட்டம்=கோணுதல் ஒருதலையா=உறுதியாக

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்