பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 266 / 300

நிலத்தில் கிடந்தமை

அச்சுப் பக்கம் 568569 · ஸ்கேன் 585586 · அதிகாரம் 96 (குடிமை) — குறள் 959

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

தோல் சுருங்கிய மாம்பழம் போல அந்தக் கிழவர், ஊர்க் கோடியில் உள்ள மேடையில் உட்கார்ந்திருந்தார். இளஞாயிறு போல முகம் படைத்த சிறார் சிலர் அவரைச் சுற்றிப் புன்னகைப் பொலிவுடன் நின்றிருந்தனர். அவர்களுடைய கரங்களில் நெற்கதிர் - மாங்கனி - மலர்க்கொத்து - இப்படிப் பல பொருள்கள் இருந்தன.

“தாத்தா! இந்த நெற்பயிர் எந்த நிலத்தில் விளைந்தது சொல்லுங்கள்!” - ஒரு சிறுவன் கேட்டான். கிழவர் அதை வாங்கி உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னார்; “கொழு கொழு என்று பயிரும் - கொத்துக் கொத்தாகக் கதிரும் இருப்பதால் இது; ஆற்று வண்டல் படிந்திடும் நிலத்தில்தான் விளைந்திருக்க வேண்டும்.” என்று!

“தாத்தா! இந்த மாங்கனி தரும் மாமரம் எங்கேயிருக்கிறது?”

இன்னொரு சிறுவன் கேட்டான்.

“அடேடே! ஒட்டுமாங்கனி ஆயிற்றே இது! இது நேர்த்தியாகக் காய்க்கக் கூடிய மண்வாகு சேலம் பகுதியில்தான் இருக்கிறது.”

கிழவரின் பதில் கேட்டுத் தலையசைத்துக் கொண்ட சிறுவர்கள்; ஒரு மலர்க்கொத்தை அவரிடம் கொடுத்து,

“இது எங்கே பூத்தது?”

எனக் கேட்டனர்.

“இதுவா? இந்த மலர்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன! ஆனால், கொஞ்சம் கூட மணம் இல்லை பார்த்தீர்களா? இவைகள் குளிர்ப்பகுதிகளான மலைப்பகுதிகளில்தான் மலர்ந்திருக்க வேண்டும்! குளிர் பாயும் நிலத்தில் பூக்களுக்கு மணம் இருப்பதில்லை!”

இப்படி விளக்கமளித்தார் கிழவர். அதுவரையில் அந்த மேடையில் வேறொரு மூலையில் சுருட்டுப் புகைத்தவாறு உட்கார்ந்திருந்த ஒரு தடித்த உருவத்தினன்; கிழவரை நோக்கி நடந்து வந்தவாறு, “அடே கிழவா! நீ என்னடா பெரிய ஆராய்ச்சி மேதையோ?” எனக் கேட்டுக் கலகலவெனச் சிரித்தான்.

கிழவர்; தன்னைச் சுற்றியுள்ள சிறுவர்களைப் பார்த்து, “இந்த மனிதர் நற்குடியில் பிறந்தவரல்ல! இழிவான ஒரு குடியில் பிறந்தவர்!” என்றார். உடனே அந்தத் தடிமனிதன், கிழவரை அடிப்பதற்குப் பாய்ந்தான். ஆனால், அந்தச் சிறுவர்கள் அவனைச் சூழ்ந்துகொண்டு எதிர்த்து விரட்டிவிட்டனர்! அவர்களில் ஒரு சிறுவன் கிழவரைப் பார்த்து, “தாத்தா! அவன் கீழான குடியில் பிறந்தவன் என்று எப்படி அவ்வளவு விரைவில் கண்டுபிடித்தீர்கள்?” என்று கேட்டான்.

“தம்பீ! இதோ இந்த நெற்கதிரும் மாங்கனியும் மலர்க்கொத்தும் எந்த நிலத்தில் விளைந்தவை என்று இவைகளைப் பார்த்தே கண்டுபிடிக்க முடிகிறதல்லவா? அதைப் போலவே ஒருவன் எப்படிப்பட்ட குடியில் உதித்தவன் என்பதை அவனது வாய்ச்சொற்கள் வாயிலாகவே கண்டுபிடித்துவிட முடியும்.”

கிழவரின் விளக்கத்திற்கு இதோ; இந்தக் குறள்:

“நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்”

அதிகாரம் - 96 - குடிமை; பாடல் - 959

கால் = பயிரின் முளைப்பு

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்