பொருளடக்கம் 265 / 300
இம்மைப் பிறப்பில்
அச்சுப் பக்கம் 566–567 · ஸ்கேன் 583–584 · அதிகாரம் 132 (புலவி நுணுக்கம்) — குறள் 1315
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
நீல வானத்தில் நிலவுத் தேரினை நட்சத்திரங்கள் வடம் பிடித்து நிதானமாக இழுத்துக்கொண்டிருக்கின்றன!
அருவித் தாவணியால் மலைமேடுகளை மறைக்க முடியாமல் நிலப்பெண்ணாள் தழைக்காடுகளில் தன் முகத்தைப் புதைத்துக்கொள்கிறாள், வெட்கத்தால்!
இயற்கையின் அற்புதத்தைக் கற்பனைத் தேனெடுத்து எழுதிக் காட்டி, அதற்குப் பரிசாகக் காதலியின் இதழ்த்தேனைப் பெற்றுக்கொள்கிறான், காதலன்.
மலர்களால் கோலம் வரையப்பட்ட அந்தச் சோலையில், எங்களைவிட எழிற்கோலமோ இதுவென அறைகூவல் விடுத்து, ஆரத்தழுவிக் கிடக்கின்றனர் கண்ணொத்த காதலனும் - கண்மணியாம் காதலியும்!
அவள் சுருண்ட கூந்தலைக் கோதுகிறான்; அவளோ அவனது அகன்ற மார்பினில் சாய்கிறாள்! அவள் விழியழகில் மயங்கிடும் வண்டு அவன்! அவளோ அவன் இதழ் நடுவில் தன் இதழை இணைத்திடத் துடிப்பவள்! உச்சி முதல் உள்ளங்கால் வரையில் விரல்களால் வருடி - அந்த இன்பத்தில் அவள் மெய்மறந்து கிடப்பதைச் சுவைப்பதுதான் அவனுக்குச் சொர்க்கம்! “சொர்க்கமென ஒன்றிருந்தால் இருக்கட்டும்;
அப்படியொன்றில்லையேல் அதை நாம் இங்கே படைத்திடுவோம் அத்தான்” என்று அவன் மேனி முழுதும் அவள் உதடுகளை மேயவிட்டாள்!
அந்தக் காதல் புறாக்களின் கலவியரங்கம்தான் அன்றைய மலர்ச் சோலையின் சிறப்புக் காட்சி!
“தந்தத்தால் ஆனதோ இந்த உடல் கண்ணே!”
“உங்களுக்குத் தந்திட்டதான் பெற்றார்கள் என்னை; கண்ணா!”
“மாங்கனிகள் பறிக்கலாமா?”
“மரத்தில் வைத்தே சுவைக்கலாமே!”
கொஞ்சுமொழி! கோடியின்பம்! சோலையெனலாம் மஞ்சமாடே! இடை அணைத்து இடையிலோர் இழை நூலும் புகவிடாமல் இன்பத்தின் உச்சிக்குச் சென்றபோது, “என் பிரியமுள்ளவளே” என்றான்! “பிரியமாட்டேனே எப்போதும்!” என்றாள் அவள்!
“இப்பிறவியில் யாம் பிரியவே மாட்டோம்!”
என்று மேலும் கட்டிக்கொண்டான்! அவளோ, கண்ணீர் வடித்தாள்!
“பிறப்புக்கள் பல உண்டு” என நம்பும் அறியாமை, அவளுக்கு உண்டு! அதனாலே அவள் அழுதாள்! கட்டிக் கிடந்தவன் கன்னத்தில் நீர் ஊர்ந்திடவே, திடுக்கிட்டுக் கேட்டான்; “தினைமாவு தின்னும்போது விக்கலென்ன வந்ததென்று!”
“எத்தனையோ பிறப்புக்கள் உண்டே! இப்பிறப்பில் மட்டும் பிரியமாட்டேன் என்கிறீரே!”
எனக் கூறி அழுதாள்! எழுந்தாள்! காற்றில் பறந்து நீருற்றுக்கருகே கிடந்த ஆடைகளை எடுத்து உடுத்திக்கொள்ள ஆயத்தமானாள்! அவன்; அவளுக்காக - மறுபிறப்புகளை ஒப்புக்கொண்டு எப்பிறப்பிலும் உன்னைப் பிரியமாட்டேன் என்று கூறியபிறகே, ஊடல் தவிர்த்துக் கூடலுக்கு விணையானான்!
“இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்ணிறை நீர்கொண் டனள்.”
அதிகாரம் - 132 - புலவி நுணுக்கம்; பாடல் - 1315
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்