பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 264 / 300

பிறப்பொக்கும் எல்லா

அச்சுப் பக்கம் 564565 · ஸ்கேன் 581582 · அதிகாரம் 98 (பெருமை) — குறள் 972

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே “பிறப்பொக்கும்” என்று வள்ளுவர் அழுத்தம் திருத்தமாகக் கூறவேண்டியிருந்திருக்கிறது. ஏன்? இந்த இருபதாம் நூற்றாண்டில், சமுதாயம் நூற்றுக்கணக்கான - ஆயிரக்கணக்கான சாதிப் பிரிவுகளால் சிதறுண்டு கிடப்பது போலவே, அன்றும் வள்ளுவர் காலத்திலும் பிறப்பால் உயர்வு தாழ்வு மனப்பான்மை பாராட்டப் பட்டிருக்கிறது. அந்த வேதனையைத் தாங்க முடியாமல்தான் வள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று குறள் தீட்டியுள்ளார்.

எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவர் குறிப்பிட்டவுடன், விலங்கினங்களும் பறவையினங்களும் ஊர்ந்து சென்றிடும் புழு பூச்சி இனங்களும் - அவரைப் பார்த்துக் கேள்விகளை அடுக்கின.

“எங்களுக்குள் சாதிப் பூசல்களே என்றைக்கும் இருந்ததில்லை. சாதி உணர்வுகள் தலைதூக்கி அதன் காரணமாக நாங்கள் அமளிகளை உருவாக்கியதே இல்லை! அங்ஙனமிருக்க ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று எம்மையும் சேர்த்து இழிவுபடுத்துதல் முறையாதோ?”

இவ்வாறு மிருகங்கள் கேட்டன! பறவைகள் கேட்டன! ஊர்வன கேட்டன!

“உயிர்கள் என்று பொதுவாகச் சொன்னதால் எல்லா உயிர்களையும் குறிப்பிடுமெனினும் - உங்களுக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவு இல்லாத காரணத்தால் உங்களிடையே சாதிப்பூசல்கள் எழுவது இல்லை! பகுத்தறிவுள்ளவர்களாகக் கூறிக் கொள்ளும் மனிதர்களிடையேதான் பல்வேறு சாதிகள்! குலங்கள்! உயர்வு தாழ்வு உணர்வுகள்! குறளைப் படிக்கக்கூடியவர்களுக்காகத்தான் இதனை எழுதினேன். நீங்கள் படிக்க இயலாதவர்கள். உங்களுக்காக, இதனை நான் எதற்காக எழுதப்போகிறேன்! எனவே நான் ‘உயிர்கள்’ என்று குறிப்பிட்டிருப்பது இந்தக் குறளைப் பொருத்தவரையில் மனிதர்களை எண்ணித்தான்!”

வள்ளுவர் விளக்கமளித்துவிட்டு, வேறு வழியாகப் பயணம் தொடர்ந்தார். அங்கே இருவர், விவாதித்துக் கொண்டிருந்தனர்.

ஒருவர் : பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லையென்று குறள் கூறினாலுங்கூட அவரவர் செய்கிற தொழில்களின் வேற்றுமையால், சிறப்பு இயல்புகள் மாறுகின்றன என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. அதனால் இசைவாணனாகிய நான் ஆசிரியத் தொழில் புரியும் உம்மைவிடச் சிறப்புடையவன்.

மற்றவர் : இல்லை! மறுக்கிறேன்! ஆசிரியர் தொழிலே சிறந்தது! அதற்கு ஒப்பிட்டுக்கூடியதுகூட அல்ல உமது இசைத்தொழில்!

இருவரின் உரையாடல் சூடேறுவதற்கு முன்பு, வள்ளுவர் குறுக்கிடுகிறார்.

“சொற்போரை நிறுத்திடுக! நான் தொழிலுக்குத் தொழில் உயர்வு தாழ்வு இருப்பதாகவோ - சிறப்பு இயல்புகள் மாறுவதாகவோ - கூறிடவில்லை! ஒவ்வொரு தொழிலுமே அதனைச் செய்வோரைப் பொறுத்து வேறுபடுகின்றன. இதோ உங்களையே எடுத்துக் கொள்வோம்! ஓர் இசைவாணன், பாடினாலே ஊரார் காது கொடுத்துக் கேட்க மறுத்து வேறு அலுவல்களைக் கவனிப்பார்! மற்றொரு இசைவாணனின் இனிய இசையை விடிய விடியக் கேட்டு மகிழ்வார்! அது போலத்தான் ஓர் ஆசிரியர் மாணவரிடையே கேலிப் பொருளாக விளங்குவார்! இன்னோர் ஆசிரியரோ மாணவரால் மதிக்கத்தக்க மாண்புடையவராகத் திகழ்வார்! ஆகையால் தொழிலுக்குத் தொழில் வேறுபாடுகாண நான் விழைந்திடவில்லை. செய்யுந் தொழில் எதுவாயினும் அதிலே எய்துகிற சிறப்புகள் வேறுபடுகின்றன; செய்பவரின் அறிவாற்றலைப் பொறுத்து! இப்படித்தான் என் கருத்துக்கு விளக்கம் பெற வேண்டுமேயல்லாமல் நீங்கள் மோதிக்கொள்வது முறையல்ல.”

குறள் தந்த கோமானின் விளக்கவுரை கேட்டு, இசைவாணரும் ஆசிரியரும் மகிழ்ந்து வணங்கினர்!

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்”

அதிகாரம் - 98 - பெருமை; பாடல் - 972

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்