பொருளடக்கம் 263 / 300
தற்காத்துத் தற்கொண்டான்
அச்சுப் பக்கம் 562–563 · ஸ்கேன் 579–580 · அதிகாரம் 6 (வாழ்க்கைத் துணைநலம்) — குறள் 56
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
அறிவில் சிகரமாய் - ஆற்றலில் சிங்கமாய் - அன்பின் அருவியாய் - அடிமைத் தளை அறுக்கும் வீர உருவமாய் அவர் இருந்தார். இளமைப் பொலிவு மிகுந்த பருவத்தில், இந்தியத் திருநாட்டின் விடுதலைக்குக் களம் பல கண்டார். பண்டித நேரு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்களின் வரிசையில் இடம்பெற்ற தளநாயகர் அவர், சிறைக் காவல் மீறி தப்பித்து வெளியேறியதும் உண்டு. ஜெயபிரகாஷ் நாராயண் என்பது அந்தப் புகழ் பெற்ற மாவீரரின் பெயர். அந்தத் தீரமிக்க வாலிபரைத் திருமணம் செய்துகொள்ளுமாறு காந்தியடிகளே வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார். முதலில் மறுத்தவர், முடிவாக ஒரு நிபந்தனையைக் கூறி இறுதியாகத் திருமணத்திற்கு ஒப்புதல் அளித்தார். நாடு விடுதலை பெறும்வரையில் கணவனும் மனைவியும் உடல் உறவு இல்லாமலே வாழ்வோம் என்றார். அவரது நிபந்தனையை ஏற்றுக்கொண்டு, பிரபாவதி எனும் பெண்மணி மணம் புரிந்துகொண்டார்.
வசந்தகாலமெனும் வாலிபம் விடைபெற்றுக்கொள்கிற வரையிலே இந்தியாவுக்குச் சுதந்திரமும் வரவில்லை. இருவரிடையே உடலுறவும் ஏற்படவில்லை.
இரு உள்ளங்களும் இந்திய நாட்டு விடுதலைக்காக ஏங்கித் தவித்தன! இரு உள்ளங்களும் அந்த விடுதலைப் போர் வெற்றிக்காக உழைத்தன!
பிரபாவதி அம்மையார் கற்பரசியாகத் தன்னையும் காத்துக்கொண்டு, தாய்நாடு மீட்கும் களத்தில் நின்று தன் கணவனுக்கும் உறுதுணையாக இருந்து அவரையும் காத்துக்கொண்டு, அளித்த வாக்கில் சற்றும் உறுதிநிலை தவறாமல் வாழ்ந்து, தகுதி வாய்ந்த புகழுக்கும் உரியவராகத் திகழ்ந்து, ஜெயப்பிரகாஷ் அவர்களுக்குப் பெருமை சேர்த்தார்.
தனக்கு வாய்த்த உறுதிநிறைந்த பெண்மணியின் துணையினால், ஜெயப்பிரகாஷ் எத்தனையோ இன்னல்களையும் கொடுமைகளையும் புன்னகையுடன் தாங்கிக் கொள்ள முடிந்தது.
இயற்கை உணர்வை அடக்கி - அல்ல; அல்ல. அப்படியொரு உணர்வே அவர்களை அணுக முடியாத நிலைபெற்று நாட்டுப்பற்றில் ஆழ்ந்திருந்த அந்த வீரரையும் வீராங்கனையையும் எண்ணும்போதெல்லாம் இளைய தலைமுறை யினர் தியாகச் சுடர்களாக மாற்றிடுவர் என்பது திண்ணமன்றோ!
“பெண் யார்? அவள் எப்படி இருக்கவேண்டும்?”
வள்ளுவர் வகுத்த அந்த இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்த பெண்ணன்றோ; பிரபாவதி தேவியார்!
“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்”
அதிகாரம் - 6 - வாழ்க்கைத் துணைநலம்; பாடல் - 56
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்