பொருளடக்கம் 262 / 300
ஏந்திய கொள்கையார்
அச்சுப் பக்கம் 560–561 · ஸ்கேன் 577–578 · அதிகாரம் 90 (பெரியாரைப் பிழையாமை) — குறள் 899
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
ஏந்திய கொள்கையார் அவர் - ஆம்! உயர்ந்த கோட்பாடுகளை உலக மக்களுக்கு எடுத்துக்கூறி, அவர்தம் உள்ளத்திலே அந்தக் கோட்பாடுகளைப் பதிய வைத்திடப் பணியாற்றினார். மனிதரில் நீயுமோர் மனிதன் - மண் அன்று! மனித சமத்துவம் இல்லாத நாடு, விலங்குகள் வாழும் காட்டிலும் கேடுடையதாகும்! மனிதனை மனிதன் சுரண்டுவது - மனிதனை மனிதன் ஏமாற்றுவது - பகை நெஞ்சுடன் எதனையும் பார்ப்பது - பழி வாங்கும் உணர்வுடன் அலைவது - இவை மனிதப் பண்பாடுகளே அல்ல! அறிவுச் சுடர்விளக்கை சகதியில் வீசிவிட்டு, மூட நம்பிக்கை இருளில் முட்டிக்கொள்வது பைத்தியக்காரத்தனமாகும்! தன்னைத்தான் எள் முனையளவு கருதாமல், தன்மானத்தை உயிரெனப் போற்றிடும் உறுதி வாய்ந்த நெஞ்சம் தேவை!
இவற்றை அவர் அழுத்தம் திருத்தமாக அறிவுறுத்தி, அவரையொத்தக் கொள்கையுடைய அறிவுப் படையொன்றையே திரட்டினார்.
அந்தப் படையின் எண்ணிக்கைப் பெருகிற்று! அவரது கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத - அல்லது உணராத சிலரும் அந்த அணியில் கலந்து கொண்டனர்!
அவரது கொள்கைகளே நாட்டில் செல்வாக்குப் பெறக்கூடியவையென்று கணக்கிட்டுப் பார்த்து, அந்த ஆதாயத்தைத் தேடுவதற்காக அந்த அணியில் கலந்துவிட்டோரும் உண்டு!
அந்தச் சிலரின் குறிக்கோள், அந்தக் கொள்கைகளை வைத்துத் தங்களது சுயநல ‘மாளிகையைக் கட்டிக்கொள்வதுதான்!’
அதில் அவர்கள் வெற்றியும் பெற்று, அவர்களில் ஒருவனை ஆட்சிக் கட்டிலில் அரசனாகவும் ஏற்றி வைத்தனர்.
கொள்கையாளர்கள் குழுவில் இருந்தவன்; கொற்றவனாகிவிட்டானே என்று கொள்கை அணியினர், மகிழ்ந்து கொண்டனர்!
அரசின் ஆதரவும் தமது கொள்கைகள் விரிந்து பரந்து மக்களை விழிப்புறச் செய்யுமென எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், அந்த அரசனோ; தனது அதிகாரத்தை நிலை நாட்டிக்கொள்ள, அவன் ஏற்றுக்கொண்டதாகக் கூறிக் கொண்டிருந்த கொள்கைகளைக் காற்றிலே பறக்க விட்டான்.
அவன், அந்தக் கொள்கைகளை வளர்த்திட ஒரு சொட்டுக் குருதி சிந்தியவனல்ல! களம் கண்டவனல்ல! கொள்கையின் முழு வடிவத்தையும் அறியாதவனுங்கூட!
கொள்கைகள் குழிதோண்டிப் புதைக்கப்படுவது கண்டனர், அந்தக் கொள்கைகளுக்காக உயிர் துறவும் முன் வந்தோர்! அந்தக் கொள்கைகளுக்காக ஆயிரம் தழும்புகளை உடலில் ஏற்றோர்!
குடை நிழலில் இருந்தவனிடம் படை பலம் உண்டு! கொள்கையைப் படைக்கலனாகக் கொண்டோரிடம் அவனது படை வலிமை என் செய்யும்?
வெட்டிச் சாய்க்கும்! சுட்டுத்தள்ளும்! கொள்கை வீரர்களின் உறுதியைக் குலைக்குமோ?
எழுந்தனர், அவர்கள் எரிமலைகள் போலே!
நடந்தனர், அவர்கள் புயல் காற்று போலே!
கொள்கைப்படை முன்னே, அரசனின் கோழைப்படை நிற்கவில்லை! அவை குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படையென பலவகைப் படையாயினும் - கொள்கை மறவர் திரட்டிய மக்கள் படையின் முன்னே தோற்றோடிப்போயின!
கொள்கையற்ற அரசு, குடைசாய்ந்து போயிற்று! அதைத்தான் குறள் இப்படிக் கூறுகிறது! எப்படி?
“ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும்”
“உயர்ந்த கொள்கையுடைய உறுதியாளர்கள் சீற்றம் கொண்டால், அரசன் இடையிலேயே அரசப் பொறுப்பை இழந்து கெடுவான் என்பது பொருளாகும்.”
அதிகாரம் - 90 - பெரியாரைப் பிழையாமை; பாடல் - 899
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்