பொருளடக்கம் 261 / 300
கண்டொடு கண்ணிணை
அச்சுப் பக்கம் 557–559 · ஸ்கேன் 574–576 · அதிகாரம் 110 (குறிப்பறிதல்) — குறள் 1100
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
“நான் உன்னிடம் ஒன்று கேட்கலாமா?”
“கேளுங்களேன்! நான்கூட உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும்.”
“நீ என்ன கேட்க விரும்புகிறாய் என்னிடம்?”
“நீங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் என் கேள்வியிருக்கும்.”
“ஓகோ! கேள்விதான் கேட்கப் போகிறாயா?”
“அப்படியானால் நீங்கள் கேட்க எண்ணியது என்னவோ?”
“நானும் கேள்விதான் கேட்க நினைத்தேன்! இருந்தாலும் என்னை ஒரு தயக்கம் தடுத்து நிறுத்துகிறது.”
“தயக்கம் உங்களுக்கு மட்டுமா? எனக்கும் கூடத்தான்!”
“முதலில் நான் உன் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?”
“காவிரி!”
“நல்ல வளமான பெயர்!”
“உங்கள் பெயரை வெளியிடலாமா?”
“தெரிந்துதான் கேட்கிறாய்! இருந்தாலும் சொல்லிவிடுகிறேனே; என் பெயர் கரிகாலன்! காவிரிக்கும் கரிகாலனுக்கும் நீங்காத தொடர்புண்டல்லவா?”
“ஆமாம்! கருநாடகத்தில் தோன்றி, கரிகாலனைத் தேடிப் பூம்புகார்ப் பட்டினம் வரை வந்தவள் அல்லவா காவிரி! வரலாற்றை மறைக்கமுடியுமா?”
“வரம் கேட்க வந்தேன்! வரலாற்றுச் சிறப்பின் பக்கம் என்னைத் திசை திருப்பிவிட்டுப் பார்க்கிறாய்!”
“வரம் கேட்கத் தவம் இருப்பவரிடம், வரம் கேட்க வருவது விந்தையல்லவா?”
“என்ன வரம் கோரித் தவம் புரிகிறாய்? யாரிடம்?”
“நீங்கள் கேட்க வந்த வரம் யாதோ?”
“இன்னுமா புரியவில்லை! மெருகேற்றிய பொன்னுமா மின்னவில்லை!”
“மின்னுவதெல்லாம் பொன்னல்லவென்று பழமொழியொன்றுண்டே!”
“அழகாகப் பேசுகிறாய்!”
“உங்களைப் பார்த்ததால் ஏற்பட்ட பயன் போலும்!”
“என்னை அந்த அளவுக்கு மதிக்கிறாயா?”
“ஒருவரையொருவர் மதிப்பதுதான் நல்ல பண்பாடு!”
“காவிரி! வெளிப்படையாகவே கேட்டுவிடத் துடிக்கிறேன்!”
“அதற்குத் துடிப்பானேன்! துணிந்து கேளுங்கள்!”
“கேட்டால், நீ - சிறும் புலியாக மாறிவிடமாட்டாயே!”
“கேட்பது உங்கள் உரிமை! கொடுப்பதும் கொடுக்காததும் என் நிலைமை!”
“சந்தேகச் சூழலில் என்னைத் தள்ளிவிடுகிறாயே!”
“அன்புச் சூழலில் அகப்பட்டு நான் தவிப்பது புரியவில்லையா?”
“காவிரி! நான் வேண்டிய வரம் எனக்குக் கிட்டி விட்டது! என் மெளனம்? அடடா எவ்வளவு நாணம்! எங்கே....எங்கே....!”
காதலர் இருவர், தங்கள் உள்ளங்களில் அலைமோதிக்கொண்டிருந்த அன்பினை வெளிப்படுத்தி, ஈருயிர் ஒருயிராகிட இவ்வளவு பேசிய காட்சிதனைக் கண்டோம்! அதுவும் யாருமில்லாத இடத்தில், கிடைத்த தனிமையைப் பயன் படுத்திக்கொண்டு!
ஆனால், வள்ளுவர் கூறுகிறார்; இந்தத் தனியான இடமும் தேவையில்லை - வாய்ச்சொற்களை இவ்வளவு நேரம் செலவழிக்கவும் வேண்டியதில்லை; வாய்ச்
சொற்களின்றியே ஒரு கணத்தில் இரண்டு நெஞ்சங்களைப் பேசவிடுவதற்கு அற்புதமான கருவிகள் உண்டென்று!
அந்த அரிய கருவிகள்தான் எவை?
தடாகத்தில், மகளிர் பலர், தாமரைகளாய்த் தோன்றி நீராடுகின்றனர்! வேறொரு பக்கத்தில் காளையர் நீராடுகின்றனர்! அங்கே ஒரு காவிரியும் கரிகாலனும் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்வோம். காவிரியின் பார்வை கரிகாலன் பார்வையில் திடீர்ப் பாய்ச்சல் நடத்துகிறது. கரிகாலன் பார்வையும் அவ்வண்ணமே காவிரியின் பார்வையில் மோதுகிறது. தயங்கித் தடுமாறி, நடுங்கி நாக்குழறி மெல்ல மெல்ல வாயினால் வெளிப்படுத்தப்பட்ட காதல் நெஞ்சினை; அந்தப் பார்வைகள் ஒரே நொடியில் வெளிப்படுத்தி, ஆயிரம் கதைகளைப் பேசி முடித்துவிடுகின்றன.
ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால்; வாய்ச்சொற்கள் எந்தப் பயனுமில்லையென்கிற அளவுக்குத் தேவையற்றுப் போகின்றன. அதற்கு இதோ குறள்:-
“கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல”
அதிகாரம் - 110 - குறிப்பறிதல்; பாடல் - 1100
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்