பொருளடக்கம் 260 / 300
மருவுக மாசற்றார்
அச்சுப் பக்கம் 555–556 · ஸ்கேன் 572–573 · அதிகாரம் 80 (நட்பாராய்தல்) — குறள் 800
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
திரை கடலோடி பொருளீட்டிடும் பெருவணிகன் ஒருவன். உதியன் அவன் பெயர். கடலில் மிதந்த கலங்கள், வெளிநாடுகள் பலவற்றுடன் தமிழகத்திற்கு இருந்த வாணிகத் தொடர்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. அந்தக் கலங்கள் சிலவற்றுக்கு உதியன் உரிமையானான். அவனுக்கோர் நண்பன் உண்டு. பெயர் நன்னன். இருவரும் இணைபிரியாத உயிர்க்குயிரான தோழர்கள் என்று உலகம் பாராட்டியது.
ஒருநாள் உதியன், நண்பன் நன்னனுடன் கடற்கரையில் அமர்ந்து இனிய உரையாடிக் கொண்டிருந்தபொழுது, இடியென ஒரு செய்தியை அவனது ஊழியன் கொண்டு வந்தான். கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பால், பெரும் சூறாவளியால் கலங்கள் அனைத்தும் மூழ்கிவிட்டன. வெளிநாட்டு வாணிபத்துக்கு மிளகு, முத்து, மயில்தோகை, அரிசி போன்ற பொருள்களை ஏற்றிச்சென்ற அந்தக் கலங்கள், நடுக்கடலில் சிதறிச் சின்னாபின்னமாயின.
இச்செய்தி கேட்ட உதியன், நெஞ்சு வலியால் துடித்து மணலில் சாய்ந்தான். நன்னன், அவனை உடனே மருத்துவர் வீட்டுக்கு எடுத்துச் செல்லுமாறு அங்கு வந்த ஊழியனிடம் கூறினான். கடற்கரையில் ஒரு பகுதியில் மருத்துவர் உலவிக்கொண்டிருப்பதாகச் சொல்லிவிட்டு, அவரை அழைத்து வருவதாக ஊழியன்
ஓடினான். நினைவற்ற நிலையில் இருந்த உதியனை உற்றுப்பார்த்தான் நன்னன். அவன் விரல்களில் மின்னிக்கொண்டிருந்த பச்சைக் கல் கணையாழியும் சிகப்புக்கல் கணையாழியும் விலை உயர்ந்தவை என்பது அவனுக்குத் தெரியும். ஊழியன் திரும்புவதற்குள் அந்தக் கணையாழிகளைக் கழற்றிக்கொள்ள நன்னன் துணிந்தான். முயற்சி செய்தான். உதியன் முனகினான். நன்னன் நல்லவனைப் போல் இருந்துவிட்டான்.
அதற்குள் ஊழியன், மருத்துவருடன் அங்கு வந்தான். உதியனை மருத்துவர் இல்லத்திற்குத் தூக்கிச் சென்றனர். சிறிது நேர சிகிச்சைக்குப் பிறகு உதியன் கண் விழித்தான். உயிர் பிழைத்தான் என மருத்துவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பின்னர் உதியன், நன்னன், ஊழியன் மூவரும் உதியன் இல்லம் திரும்பினர். நன்னன், உதியனைக் கட்டித் தழுவி வாழ்த்திவிட்டுத் தன் வீட்டுக்குச் சென்றான்.
அவன் சென்ற சில நாழிகை கழித்து, அவனுக்கு ஒரு மடல் வந்தது.
“அன்புள்ள நன்னனுக்கு, நீ என்னபால் கொண்டுள்ள நட்பு எவ்வளவு போலியானது என்பதை எனது ஊழியன் பலமுறை சொல்லியும் நான் கேட்டதில்லை. என் ஊழியனின் திட்டப்படி, நேற்று மாலை எல்லாம் நடந்தது. கடலில் எனது கலங்கள் மூழ்கி விட்டன என்ற செய்தியும் பொய்! எனக்கு நெஞ்சு நோய் ஏற்பட்டு மயங்கியிருந்ததும் பொய்! என் விலை உயர்ந்த கணையாழிகளை நீ கழற்ற முனைந்தாயே; அதுதான் மெய்!
ஒத்த பண்பில்லாதவருடைய நட்பை எந்த விலை கொடுத்தாயினும் விலக்கிக் கொள்க என்ற குறள் மொழிப்படி, நீ விரும்பிய கணையாழிகளை உனக்கு அன்பளிப்பதின் வாயிலாக உன் நட்பை இன்று முதல் விலக்கிக் கொள்கிறேன்.
என் நலம் நாடிடும் எனது ஊழியனின் நட்பு, உன் நட்புடன் ஒப்பிடும்போது, நீ மடு! அவன் மலை! அவன் போன்றோர் நட்பையே நான் நாடுகிறேன்.
வணக்கம். உதியன்.”
“மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு.”
அதிகாரம் - 80 - நட்பாராய்தல்; பாடல் - 800
மருவுக = பழகுக ஒருவுக = விட்டுவிடுக ஈத்தும் = கொடுத்தும்
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்