பொருளடக்கம் 259 / 300
மாலையோ அல்லை
அச்சுப் பக்கம் 553–554 · ஸ்கேன் 570–571 · அதிகாரம் 123 (பொழுதுகண்டு இரங்கல்) — குறள் 1221
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
பொழுது நோக்கி வாழ்த்திய பூவைபொருத்தி, இன்று அந்தப் பொழுது நோக்கி வசைபாடுகிறாள். “வாழி பொழுது” எனப் பல நாள் அவள் வாழ்த்தியது உண்டு. வைகறைத் துயில் எழுந்தவுடன் அவள், இனித்திட்ட இரவைச் சுவைத்திட்ட மகிழ்ச்சியுடன் நீராடிச் சீராடை பூண்டு, நெற்றிக்குப் பொட்டிட்டு, நல்ல குடும்பமெனும் பல்கலைக்கழகத்துப் பணிகளில் அயராது ஈடுபடுவாள். அதன் பின்னர் மாலைநேரம் எப்போது வருமென்று ஏங்கித் தவிப்பாள். மாலைப் பொழுதுதானே, இரவுப் பொழுதெனும் யானை வரப்போவதை அறிவிக்கும் மணியோசை! வணிகர் வீதியில் அலுவல் முடித்துவிட்டு, நாள்தோறும் அந்த மாலையில்தானே அவள் கண்நிறைந்த கண்ணாளன் வந்திடுவான். அந்திசாயும் நேரம் அடுக்களை வேலையை முடித்து, ஆனந்தமாகக் குளித்து, குங்குமத்தால் பொட்டிட்டு, கூந்தல் நிறைய மலரிட்டு, திண்ணையிலே தூண் ஓரத்திலே நின்று கண்ணை இமைக்காமல் கணவன் வருகைக்காகக் காத்து நிற்கிற பெண்ணைப் படைத்த நாடல்லவா தமிழ்நாடு. அந்தத் தமிழ்நாட்டுத் தங்கச்சிலைதான், மாலையெனும் ஒரு பொழுதை வழங்குகின்ற மொத்தப் பொழுதையும் வாழ்த்துகிறது! “வாழி பொழுது!” என்று அந்த வண்ணத்தமிழ் ஓவியம் வாழ்த்துவதிலேகூட இரு மாறுபட்ட உணர்வுகள்!
கரிய இரவைக் கனிச்சாறு - காதற்சாறு பருகும் இனிய இரவாக்க - முன்னறிவிப்புக் கொடுக்கும் மாலைப்பொழுதை நாள்தோறும் அவள் வாழ்த்தியிருக்கிறாள். ஆனால்,
இன்று அவள் வாழ்த்தமாட்டாள். வாழ்த்துவதுபோல “வாழி பொழுது!” என்று முணுமுணுக்கிறாள். ஆனால் அது வாழ்த்து அல்ல! வாழ்த்து என்றால், அந்த வார்த்தாமரைமுகம் வாடிக்கிடப்பானேன்! மேலுதடு, கீழ்உதட்டை அழுத்துவானேன்! கீழ் உதட்டை அந்த முத்துப்பற்கள் கடிப்பானேன்! அகன்று விரிந்து தொலைதூரம் பாய்ந்து தனது ஆளனின் தோள் தொக்கிவரும் அந்த விழிகள், இமைக் கதவுகளுக்குள் மறைந்து கிடப்பானேன்!
இன்றைய மாலை நேரம் அவள் மகிழ்வுடன் வாழ்த்துவதற்குரியதல்ல! காரணம்; அவன் ஊரில் இல்லை! அவன் வருகிற அழகைக் காணமுடியாத மாலைப் பொழுதும் தருகின்ற இன்பத்தை நுகரமுடியாத இரவுப் பொழுதும் அவளால் வரவேற்க முடியாதவை! இதயமார வாழ்த்துவதற்கு முடியாதவை!
அதனால் அவள், மாலைப்பொழுதை மாலைப்பொழுது என்று ஏற்றுக் கொள்ளவே தயாராக இல்லை! கதிரவன் மேற்கிசையில் ஆழ்ந்து கொண்டிருக்கிறான். வானம், தங்கத்தை உருக்கியது போல் காட்சி தருகிறது. மணம் சுமந்து வரும் தென்றலும் வீசுகிறது. சிறகடித்துப் பறவைகள் மரக்கிளைகளை நோக்கிப் பறக்கின்றன. சிறார், வீதிகளில் விளையாடி மகிழ்கின்றனர். ஆனால், அவள் மட்டும் அதை மாலைப் பொழுதாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
“ஏ, பொழுதே! நீ மாலையல்ல, பிறகென்ன தெரியுமா? மணந்தவரைப் பிரிந்து வாழும் நிலை இன்று எனக்கு ஏற்பட்டிருப்பதால், என்னைப்போல் கணவனைப் பிரிந்து அவன் வருகைக்காகத் துடித்துக் கொண்டிருக்கும் மகளிரின் உயிரை உண்ணக்கூடிய வேற்படையாக நீ விளங்குகிறாய்! அதுதான் உனக்கு மகிழ்ச்சியென்றால் வாழ்ந்துவிட்டுப் போ!”
இப்படிக் கடிந்து கொள்கிறாள் மாலைப்பொழுதினை!
“வாழி பொழுது” என்றும் கூறி, அந்தப் பொழுது தரும் வாட்டத்தையும் காட்டுகின்ற குறள்தான் இது!
“மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது.”
அதிகாரம் - 123 - பொழுதுகண்டு இரங்கல்; பாடல் - 1221
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்