பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 258 / 300

அ. உற்றவன் தீர்ப்பான் / ஆ. மருந்தென வேண்டாவாம் / இ. நோய்நாடி நோய்முதல்

அச்சுப் பக்கம் 551552 · ஸ்கேன் 568569 · அதிகாரம் 95 (மருந்து) — குறள் 950, 942, 948

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு உலகப்பொது ஞாயிறு எனத்தக்க வகையில் ஒளியுமிழ்ந்து தோன்றியது திருக்குறள். அந்தக் குறளுக்கு நான் ஓவிய உரை தீட்டிடும் இந்நாள், மக்கள் வாழ்வுடன் ஒன்றியிருக்கும் எத்தனையோ நிலைமைகள் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே வள்ளுவரால் ஆராய்ந்து அறிவிக்கப்பட்டுள்ளன என்பதை எண்ணும்போது, வியப்பே மேலிடுகிறது.

இந்நாள், ஒரு மருத்துவமனைக்குச் செல்வதாகக் கற்பனை செய்துகொள்வோம். அங்கே ஓர் அறையில் நமக்கு நண்பரோ அல்லது உறவினரோ நோயுற்றுப் படுத்திருக்கிறார். அவர் படுத்திருக்கும் அறைக்குள் நுழைகிறோம். ஆங்கில மொழியில் ‘டாக்டர்’ எனப்படும் மருத்துவர், நோயுற்றவரைப் பரிசோதித்துக் கொண்டிருக்கிறார். நாம் சற்றுத் தொலைவில் நின்று கவனிக்கிறோம்.

பரிசோதனை முடிந்தபிறகு அருகே நிற்கும் ‘நர்ஸ்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் செவிலியரை மருத்துவர் நெருங்கி, அவர் காதில் மட்டுமே கேட்கும்படியாக ஏதோ சொல்கிறார். செவிலியர், சில மருந்துப் புட்டிகளையும் மாத்திரைகளையும் மருத்துவரிடம் காட்டுகிறார். பிறகு மருத்துவர் போய் விடுகிறார். செவிலியர், நோயுற்றவரை மெதுவாகத் தூக்கி, அவரது வாயில் ஒரு மாத்திரையைப் போட்டுச் சிறிது தண்ணீரையும் ஊற்றுகிறார்.

எத்தகைய நோய் எனினும் - நோயுற்றவர், மருத்துவர், மருந்து, உடனிருந்து மருந்தளிப்பவர் என்ற அடிப்படையான இந்த நான்கு கூறுகளை உடையதாகவே இருக்கும் மருத்துவ முறை!

அதை இந்தக் காலத்திலே காணுகிறோம். இந்த அடிப்படையான பாகுபாட்டினைக் கொண்டுதான் மருத்துவ முறையாகும் என்று விளக்கத்தை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குறள் தந்திருக்கிறது.

“உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து.”

உற்றவன் என்பது நோயுற்றவரையும் தீர்ப்பான் என்பது மருத்துவரையும் மருந்து என்பது நோய்க்கேற்ற மருந்தையும் உழைச்செல்வான் என்பது உதவியாக அருகில் இருப்பவர் என்பதையும் குறிப்பிடுவதோடு - இந்த நான்கு அடிப்படைக் கூறுகளே மருந்து எனப்படும் மருத்துவ முறையென்றும் வகுத்துச் சொல்லுகிறது வள்ளுவம்!

அளவுக்கு மீறி உண்ணாமல் இருந்தாலே பெரும்பாலான நோய்களைத் தடுத்துவிட முடியும் என்பதை, எத்துணை நயமாகவும் தெளிவாகவும் தீர்க்கமாகவும் குறளார் கூறுகிறார் தெரியுமா?

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.”

முதலில் அருந்திய உணவு செரித்துவிட்டதா என்பதை உணர்ந்து, அப்படிச் செரித்து இருந்தால் அதற்குப்பிறகு தக்க அளவு உண்டால்; அத்தகைய வழக்கத்தைக் கடைப்பிடிப்பவரின் உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை என்பது இதன் பொருள்.

நோய் தீர்ப்பதற்கு எந்த வழியைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறாரோ; அந்த வழி சமுதாயத்தில் ஏற்படுகிற பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் ஏற்ற வழியாக அமைந்திருக்கிறது!

கிளர்ச்சிகள், வன்முறைகள், போராட்டங்கள், அடக்குமுறைகள் - இப்படி நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலைமைகளை மேலெழுந்தவாரியாக ஆராய்ந்து முடிவெடுப்பதில் பயனில்லை அல்லவா?

நோயின் அடையாளங்களை வெளித் தோற்றத்தால் மட்டும் கண்டுபிடித்துச் சிகிச்சையளித்துப் பயனில்லை.

நோய் இன்னதென்று ஆராய்ந்து - அந்த நோய்க்கான காரணங்களையும் ஆராய்ந்து - அதனைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து பொருத்தமான சிகிச்சை - அதாவது நோயுற்றவரின் உடலுக்கேற்றவாறு சிகிச்சை அளிக்க வேண்டுமென்கிறார் வள்ளுவர்.

இது உடல் நோய்க்கு மட்டுமல்ல; மனித சமுதாயத்தில் எழுகிற எல்லாவிதப் பிரச்சினைகளுக்கும் பொருந்துகிற குறள் அல்லவா?

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.”

அதிகாரம் - 95 - மருந்து; பாடல்கள் - 950, 942, 948

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்