பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 257 / 300

மக்கள்மெய் தீண்டல்

அச்சுப் பக்கம் 549550 · ஸ்கேன் 566567 · அதிகாரம் 7 (மக்கட்பேறு) — குறள் 65

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

சாரைப் பாம்பு போல நீண்டு வளைந்து நெளிந்திருக்கும் தெரு! இருட்டும் கப்பிக் கொண்டிருந்தமையால் “சாரைப்பாம்பு போல” என்பது பொருத்தமான உவமையாகவே அமைந்தது. அந்தத் தெருவுக்கும் அதில் உள்ள வீடுகளுக்கும் நிரம்பத் தொடர்பு! அதனால்தான் வீட்டுக்குள் இருக்க வேண்டிய பல பொருள்கள் தெருவிலும் கிடந்தன. தெருவில் இருந்திடும் தூய்மையற்ற நிலை வீடுகளுக்குள்ளும் இருந்தது. வீடுகள் என்பதே தவறு! குருவிக்கூடுகள்! மனிதப் பறவைகள்தான் வசித்தன! பறவைகள் என்றால் இறக்கைகள் வேண்டுமே! கள்ளோ சாராயமோ இரண்டிலொன்றைத் தோள்பட்டைகளின் இரத்த நாளங்களில் ஓடவிட்டு, இறக்கைகளை முளைக்க வைத்துக்கொண்டு தெருப்புறத்தில் படுத்தபடியே திசை பெட்டும் பறந்து கொண்டிருந்தனர். “மினுக் மினுக்” என்று பல்லை இளித்துக் காட்டியவாறு அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில “சிம்னி” விளக்குகள், தங்களின் வெளிச்சப் பெருமையை விளம்பரப்படுத்திக் கொண்டு காற்றில் கூத்தாடின!

அந்தத் தெருவைக் கடந்துதான் அந்தப் “பெரிய” மாநகரில் மிக அகன்ற வீதியை அடுத்துள்ள அழகிய பூங்காவுக்குச் செல்ல வேண்டும். பணி முடிந்து இல்லம் திரும்பிய பகலவனும் அவன் துணைவி பாவையும் ஓய்வாகவும் உற்சாகமாகப் பேசிக் களிப்பதற்காகவும் அந்தப் பூங்கா சென்றிட விரும்பினர். அவர்கள் செல்லும் வழியிலேதான் அந்தச் “சிங்காரத் தெரு!”

அளவுக்கும் குறைவாக மூச்சை இழுத்து, அதற்கு அதிகமாகவே வெளியே விடுத்துக்கொண்டு அந்தத் தெருவில் நடந்தனர் இருவரும். ஓர் குடிசையின் வாசலில் நாற்பது வயதுடைய ஒரு ஆடவன் - முப்பதைத் தொட்டிடாத வயதுள்ள ஒரு பெண் - பத்து வயதிலிருந்து இரண்டு வயது வரையுள்ள ஐந்து குழந்தைகள், அவர்களைச் சுற்றிப் பூனையின் மீது குட்டிகள் உராய்வது போலச் சிரித்தும் அழுதும் சப்தமிட்டுக்கொண்டும்

மடியிலும் முதுகிலும் புரண்டு கொண்டிருந்தனர். அந்தப் பெண்ணின் மார்பைச் சுவைத்தவாறு கைக்குழந்தை! தற்காலிகமாகக் கடைசிக் குழந்தை போலும்!

பாவை, அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டுப் பகலவனை நோக்கினாள்.

பகலவன் கேலியாகச் சொன்னான்: இருவரும் தமிழ் இலக்கியம் பயின்றவர்கள். அதனால் பாவைக்கு எளிதில் விளங்குமென்ற நம்பிக்கையோடு சொன்னான்.

“பெற்றெடுத்த மக்கள் பெற்றோரின் உடலைத் தொடுதல், உடல் முழுமைக்கும் இன்பம்! அந்த மக்களின் மழலையைக் கேட்பது செவிக்கு இன்பம்! என்பதாக வள்ளுவர் எழுதியிருக்கிறாரே; அதுதான் இந்தக் காட்சி.”

“அத்தான்! வள்ளுவர் மக்கள் என்று சொன்னதால், ஒரு மக்கள் பேரணியே பெற்றோரை முற்றுகையிட்டு, மெய்தீண்டி இன்பம் தரவேண்டுமா? அல்லது கூச்சல் போட்டுச் செவிக்கு இன்பம் தர வேண்டுமா? அதோ பாருங்கள், அந்தப் பெற்றோரின் முகத்தை! எத்துணை சலிப்பு! எவ்வளவு சுளிப்பு! அவர்களின் மெய்தொட்டு, மழலை பேசும் குழந்தைகள் இரண்டாக மட்டும் இருந்தால் - உண்மையிலேயே இந்த ஏழை வீட்டிலேகூட இன்பம்தான் பொங்கிடும்!”

பாவைக்குப் பகலவன் பதில் கூறத் தயங்கவில்லை: “பிறகேன் வள்ளுவர் அளவுடன் பெற்று வளமுடன் வாழ்க - என்று கூறிடவில்லை! இரண்டே போதும், அதுவே இன்பம்! என்று அவர் குறளில் குறிப்பிட்டிருக்கலாம் அல்லவா?” என்றான், கேலிச் சிரிப்பைப் பொழிய விடுத்து!

“அத்தான்! குழல் இனிது யாழ் இனிது - என்ற குறளின் வாயிலாக வள்ளுவர் இரண்டு மக்களைத்தான் குறிப்பிட்டிருக்கிறார் என்று நாம் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?”

“எப்படி? எப்படி?”

“ஆமாம் அத்தான்! குழல் பொதுவாக ஆண்களுக்குரிய இசைக்கருவி! யாழோ, பெரும்பாலும் பெண்களே மீட்டிடும் இசைக்கருவி! அந்த இரண்டு இசைக் கருவிகளைப்போல் குழலைத் தோற்கடிக்கும் மழலை பேசிட ஓர் ஆணும் - யாழைத் தோற்கடிக்கும் மழலை மொழிந்திட ஒரு பெண்ணும் போதும் என்று குறள் குறிப்பிடுவதாகச் சொல்லலாம் அல்லவா? ஏகாலத்தில் பல குழந்தைகளின் கூச்சல் செவியைப் பிளக்கவேண்டும்; அதுதான் இனிது என வள்ளுவர் எண்ணியிருந்தால் குழல், யாழ் என்ற இரு இசைக்கருவிகளைச் சொல்லாமல் - ‘வாத்தியக்குழு இனிது’ என்ற கருத்துப்பட அல்லவா வர்ணனை செய்திருப்பார்?”

பகலவன், பாவையின் திறமையை வியந்தான். இருவரும் மகிழ்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்த வண்ணம் பூங்காவை நெருங்கினர். அங்கிருந்து விரைவில் வீடு திரும்பினர். தாழ்வாரத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த பத்து வயது மகன், “அப்பா! அம்மா!” என்றவாறு ஓடி வந்து கட்டிக்கொண்டான்! “வாடா வா! குழலிசை தோற்றது உன் குரலிசையின் முன்னே!” என்றான் பகலவன்! ஒலி கேட்டு ஓடிவந்தாள் ஐந்து வயதுப் பெண்! “அப்பா! அம்மா!”

“என்னம்மா கண்ணு; நீ யாழைத் தோற்கடித்துவிட்டாய்!” என்று அணைத்துக் கொண்டான். இரண்டு மக்களும் பெற்றோரை இறுகத் தழுவிக் கொண்டனர்.

“மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.”

அதிகாரம் - 7 - மக்கட்பேறு; பாடல் - 65

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்