பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 256 / 300

ஆகாறு அளவிட்டி

அச்சுப் பக்கம் 547548 · ஸ்கேன் 564565 · அதிகாரம் 48 (வலியறிதல்) — குறள் 478

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

அடிப்பாகம் அகலமாகவும், உச்சிப்பகுதி குறுகலாகவும் அமைக்கப்பட்டுள்ள கோபுரங்களுக்கு நேர்மாறாக, அடிப்பகுதியைக் குறுகிய அளவில் அமைத்து, மேலே போகப்போக உச்சிப்பகுதியை விரிவாக்கிக் கோபுரம் ஒன்றை உருவாக்கினால் என்னவென்று ஓர் ஊரார் சிந்தித்தார்கள். சிந்தனைக்குச் செயலவடிவம் தருவதற்கு முற்பட்டார்கள். இயல்பாகக் கோபுரங்கள் ஆங்கிலத்தில் உள்ள “A” என்ற எழுத்துப்போலத்தானே இருக்கும்! ஆனால் அந்த ஊரார், ஆங்கிலத்தில் உள்ள “V” என்ற எழுத்தைப் போலக் கோபுரத்தைக் கட்டத் தொடங்கினார்கள். அதற்கான கருங்கற்கள், செங்கற்களை அடுக்கினார்கள். விளைவு தோல்வியில் முடிந்து கட்டிடத் தொழிலாளர் பலர் காயமுற்றுக் கால்கள் முறிந்து, உலவிட முடியாமல் ஊனமுற்றனர்.

கருமுகில்கள் வடித்த கண்ணீர், மலைக்கன்னங்களில் அருவிகளென வழிந்து சிற்றாறுகளாக உருவெடுத்து, அவையனைத்தும் இணைந்து பேராறு ஒன்று பெருகி கடல் நோக்கி ஓடிக்கொண்டிருந்த காட்சியைக் கண்டான் அந்தக் காலத்து அறிவார்ந்த மனிதன். எவ்வளவு தண்ணீர் வீணாகச் சென்று கடலில் வீழ்கிறது எனக் கவலை கொண்டான். அந்த ஆற்றுக்கோர் அணை கட்டித் தேக்கினால் என்ன என்ற கேள்வி எழுந்தது, அவன் நெஞ்சத்தில்! அவ்வாறே அணை எழுப்பினான். “அடடே! ஆற்றுத் தண்ணீரை ஏன் தடுக்கிறாய்?” எனச் சிலர் கேட்டத்தான் செய்தனர்! “வருகிற நீர்

அனைத்தும் நஞ்சை புஞ்சை நிலங்களை வளமாக்குவதற்குப் பயன்பட வேண்டுமல்லவா? அதனால்தான் அணைகட்டி, நீரைத்தேக்கி, தேவைப்படும் காலத்தில் தேவைப்படும் பகுதிகளுக்கு வழங்குவதற்கேற்ப நீரைச் சிக்கனப்படுத்தலாம் என்று திட்டமிட்டுள்ளேன்” என்றான், அணை கட்டியவன்.

காட்டாற்று வெள்ளம் - கரை கண்டு, அணையும் கண்டு, நிலபுலங்களில் வளமும் காணப் பயன்படுவதுணர்ந்து உழவர்கள் உவகை பூத்தனர்.

ஒரு குடும்பம்: கணவன், மனைவி, குழந்தைகள் இருவர்! திங்கள்தோறும் ஆயிரம் வெண் பொற்காசுகள் வருமானம்! ஆனால், கணவனும் மனைவியும் போட்டி போட்டுக்கொண்டு செலவுசெய்தனர். ஊர்ப்பயணங்கள் என்ன - உல்லாசக் கேளிக்கைகள் என்ன - விதவித உடைகள் என்ன - வருவாய்க்கு மீறிய செலவு! வாங்கிய கடன்களைத் திருப்பித்தர முடியவில்லை. வாழ்ந்த வீட்டை விற்றும் - பாட்டன் காலத்துக் கழனிச் செல்வத்தை விற்றும் - கடன் கொடுத்துவிட்டுக் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு முழித்தனர்.

இன்னொரு குடும்பம்: இதேபோலக் கணவன் - மனைவி - இரு குழந்தைகள் தான்! வருமானமோ; எண்ணூறு வெண் பொற்காசுகள்தான்! வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டிக் கருமிகளாக வாழாமல், தேவையான செலவுகளைச் செய்து மாதந்தோறும் நூறு வெண் பொற்காசுகளை மிச்சப்படுத்தி, மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். கடன் தொல்லையில்லை. கவலையின் சாயல்கூட அவர்கள் வாழ்க்கையில் தலைகாட்டவில்லை.

அடித்தளம் குறுகி - மேல் பகுதியை ஆகாயமளாவிட விரிவுபடுத்தினால் கோபுரம் சரிகிறது!

ஆற்று நீரைத்தேக்கி வைத்து, வகைப்படுத்தி, அளவுடன் பயன்படுத்தா விட்டால், பயிர் பச்சைகளைக் காணமுடியாது!

வருவாய் குறைவாக இருந்தாலும் செலவு அதிகமாகாமல் பார்த்துக் கொண்டால், அதனால் தீமை ஏற்படுவதில்லை!

இதனை விளக்குவதே இந்தக் குறள்:

“ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை”

அதிகாரம் - 48 - வலியறிதல்; பாடல் - 478

ஆகாறு = வருவாய்க்கான வழி அளவு இட்டது = அளவில் சிறிது போகாறு = செலவிடும் வழி

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்