பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 255 / 300

மணியில் திகழ்தரு

அச்சுப் பக்கம் 544546 · ஸ்கேன் 561563 · அதிகாரம் 128 (குறிப்பறிவுறுத்தல்) — குறள் 1273

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

கோத்த மணிகளையும் கோத்திடாத மணிகளையும் விற்பனை செய்யும் தொழில் மேற்கொண்டு, காலை முதல் மாலை வரையில் ஊர் ஊராக அலைபவன் அழகன். அந்தப் பெயர், அவனுக்குக் காரணப் பெயராகக்கூட அமைந்துவிட்டது எனலாம். மீன்குஞ்சுகளைப் போன்ற மீசை! தேக்குமரம் கடைந்து செய்யப்பட்டது போன்ற தேகம்! அகன்ற - கூரிய - ஆனால், குளிர்ச்சி பொருந்திய கண்கள்!

ஊரெல்லாம் அலைந்து திரிந்து மணி வியாபாரம் நடத்தும் அவன், நாலு நாட்களுக்கு ஒரு முறை எப்படியும் திங்களூர் வீதிகளுக்கு வந்துவிடுவான். அவன் வருகையை அந்த ஊரில் எல்லோரையும்விட, அவள் ஒருத்தி மட்டும் அதிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பாள். அவளுக்கும்கூடப் பெயர் பொருத்தம்தான். அழகி, அவளது பெயர்.

வழக்கம்போல் அழகன் அன்று திங்களூர் வந்தான். மாலை நேரம்; வியாபாரம் அப்படியொன்றும் அவனுக்கு மன நிறைவாக இல்லை. அதனால் பரவாயில்லை; அவளைச் சந்திப்பதுதானே அந்த ஊர் வருகையின் தலையாய நோக்கம்!

ஏமாற்றமே அவனுக்குக் காத்திருந்தது. ஒவ்வொரு வீடாகச் சென்று மணி விற்பனையை நடத்திவிட்டு, வேக வேகமாக அவள் வீட்டுப் பக்கம் வந்தான்.

ஒவ்வொரு தடவையும் அவள், வாயிற்புறம் நின்று அவன் கொண்டு வரும் மணிமாலைகளையும் மணிகளையும் பார்த்துவிட்டு அவனையும் விழிகளால் ஆசை தீரப் பருகிவிட்டு - ஏதாவது ஒன்றிரண்டு மணிகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்குள் சென்றுவிடுவாள். அதற்கு மேல் வீதிப்பக்கம் நின்றால் - அதுவும் ஓர் ஆடவன் முன் நின்றால், அவளது தாயின் கடுமையான குரல், வீட்டுக்கூடத்திலிருந்து கிளம்பிவிடும். அழகன் - அழகி இருவரிடையே அதன் காரணமாகவோ என்னவோ வேறு எந்தப் பேச்சும் இருந்ததில்லை. மணி வாங்குதல், காசு கொடுத்தல், விழிகள் நான்கும் ஒன்றோடொன்று மோதுதல், பிரிந்து விடுதல் - அழகனுக்கு அதிலே ஒரு இன்பம். அதற்காகவே, நாலு நாட்களுக்கு ஒருமுறை திங்களூரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டான்.

அன்றும் அந்த வீட்டுக்கு வந்தான். அழைத்துப் பார்த்தான்; கூவினான், மணி வியாபாரி வந்திருப்பதாக! யாரும் வந்து எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

கதவோரம் சென்று பார்த்தான். பூட்டப்பட்டிருந்தது. பூட்டை இழுத்துப் பார்த்தான். கெட்டியாகப் பூட்டப்பட்டிருப்பதை உணர்ந்தான்.

“என்னா மணி வியாபாரம்! பூட்டை இழுத்துப் பார்க்கிறே! வீட்டிலே யாருமில்லேன்னா, தேட்டை போடலாமேன்னு நினைப்பா?”

எதிர்த்த வீட்டு மூதாட்டியொருத்தி, கனத்த குரலில் கடுமையாகவும் கேலியாகவும் கேட்டுக்கொண்டே வந்தாள்!

“சே! சே! இல்லை பாட்டி! வழக்கமாக இங்கேயொரு பெண்மணி, என்னிடம் மணியோ, மணிமாலையோ வாங்குவாள். இந்தத் தடவை நல்ல மாலைகள் கொண்டு வந்திருக்கிறேன். வீட்டில் யாரையும் காணவில்லையே என்று பார்க்கிறேன்”

என்றான் அழகன், சோர்ந்த முகத்துடன்!

“மாலை கொண்டு வந்தாயா? அந்தப் பெண்ணுக்குக் காலையில்தான் ஒருத்தன் மணமாலை சூட்டியிருக்கான். பக்கத்து ஊர்லேதான் திருமணம். நாங்கள்லாம் அங்கே போயிட்டுதான் வார்றோம்.”

எதிர்வீட்டு மூதாட்டி, இதைச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றாள். அழகனால் நிற்க முடியவில்லை. அந்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்தான். தலை சுற்றியது. அப்படியே சாய்ந்துவிட்டான். உலகமே இருண்டுவிட்டது போன்ற ஓர் உணர்ச்சி. அழகி! அழகி! என அவன் உதடுகள் உச்சரித்துக்கொண்டே அடங்கிவிட்டன.

முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. மெல்லிய கரமொன்று அவன் முகத்தை வருடியது. கண் விழித்தான். மலர்த் தலையணை மீது அவன் தலையிருப்பது போல ஓர் உணர்வு. விழிகளை அகலவிரித்துப் பார்த்தான். அழகியின் மடிமீது தான் படுத்திருந்தான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் சிரித்தாள். “நன்றாக ஏமாந்தீர்களா?” என்று கேட்டாள்.

மீண்டும் ஏமாற்றமா? அழகன், அழகியின் கழுத்தைப் பார்த்தான். தாலியில்லை! ஆறுதல்! அப்பாடா என்ற பெருமூச்சு!

“இதெல்லாம் என்ன நாடகம் அழகி?”

“நாடகமில்லை! நீங்கள் உண்மையிலேயே என் மீது அன்பு கொண்டிருக்கிறீர்களா என அறிந்துகொள்ள, என் தாயும் எதிர்வீட்டுப் பாட்டியும் நடத்திய சோதனை!”

“அதுதானே பார்த்தேன்! நீ என்னை விடுத்து யாரையும் மணக்க மாட்டாய் என்று எனக்கு முன்னமேயே தெரியும்.”

“எப்படித் தெரியும்?”

துள்ளிடும் புள்ளிமானாம் இந்தத் துடியிடையாள் மீது இயற்கை அள்ளிக் கொட்டியிருக்கும் அழகுக்குள்ளே; இதோ இந்த மணிமாலைக்குள்ளே ஊடுருவுகின்ற நூலைப்போல, நமது காதலைப் பற்றிய குறிப்பு ஒன்று இருப்பதை நான் உணர்ந்திருந்தேன் கண்மணி!”

அழகன், மணிமாலையையும் அதனுள் கோத்துள்ள நூலையும் காட்டினான். அழகி! இது அறுந்திடாத உறுதியான நூல்! இல்லையா என் இன்பமே!” என்றான்.

அவள் முந்திக்கொள்வதற்குள், அவன் முந்திக்கொண்டு தழுவிக் கொண்டான்.

“தெருத் திண்ணையிது!”

இருவருமே அந்தச் சொற்றொடரை உதிர்த்தனர். விலகிக்கொண்டனர். அந்த நேரம் பார்த்து அழகியின் தாயும் எதிர்வீட்டுப் பாட்டியும் - சிரித்துக் கொண்டே வந்தனர். அழகனும் அழகியும் அவர்களின் வாழ்த்துக்கோரி தலைகுனிந்து நின்றனர்.

“மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதொன்று உண்டு.”

அதிகாரம் - 128 - குறிப்பறிவுறுத்தல்; பாடல் - 1273

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்