பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 254 / 300

காக்கை கரவா

அச்சுப் பக்கம் 542543 · ஸ்கேன் 559560 · அதிகாரம் 53 (சுற்றந்தழால்) — குறள் 527

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

பிள்ளையார் கோயில் வாசலில் ஐந்தாறு இளைஞர்கள் சடுகுடு விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே ஒரு பக்தர் தேங்காயுடன் வந்தார். விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டனர், அவர் கையில் இருக்கிற தேங்காய் குறைத் தேங்காய் என்பதைப் புரிந்து கொண்டு!

பக்தர், பிள்ளையாரை வணங்கிவிட்டு, அந்தத் தேங்காயை அங்கிருந்த கருங்கல்லின் மீது ஓங்கி அடித்தார். அது சுக்கல் சுக்கலாகச் சிதறிற்று. இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வீழ்ந்து, சிதறிய தேங்காய்த் துண்டுகளைப் பொறுக்கிட முற்பட்டனர். சிலருக்குத் தேங்காய்த் துண்டுகள்! ஓரிருவருக்கு உடைந்துபோன ஓடுகள்! ஓர் இளைஞன் கையிலே மட்டும் பெரிய மூடி ஒன்று சிக்கியது! அதை எடுத்துக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடி தொலைவில் உள்ள பாழ்மண்டபத்தில் ஏறி நின்று முழுவதும் அவனே தின்று தீர்த்தான். ஒரு சிறு துண்டுத் தேங்காய்கூடக் கிடைக்காத இளைஞர்கள் ஏமாந்து போய் நின்றனர். எல்லோருமே ஏழை வீட்டு இளந்தளிர்கள்தான்; வறுமையில் வதங்கிப் போனவர்கள்தான். பெரிய தேங்காய் மூடியைத் தின்றுவிட்டு, எதுவும் கிடைக்காதவர்களைப் பார்த்துப் பழிப்புக் காட்டிக்கொண்டிருந்த இளைஞனிடம் அந்த பக்தர் சென்றார்.

“தம்பி! நீ இப்படிச் செய்யலாமா? எவ்வளவு பிள்ளைகள் ஏங்கிப்போய் விட்டார்கள் பார்த்தாயா?” என்று பரிவுடன் கேட்டார்.

“என் திறமை எனக்குக் கிடைத்தது! அவர்கள் கையாலாகாத்தனத்திற்கு நானா பொறுப்பு?”

என்று அந்த இளைஞன் பதில் சொன்னான். அப்போது அருகில் உள்ள ஒரு பெரிய வீட்டு வாயிற்புறத்தில், நாலைந்து எச்சில் இலைகளை வேலைக்காரி வீசி எறிந்து விட்டுப் போனாள். ஒவ்வொரு இலையிலும் சில பண்டங்கள் எஞ்சியிருந்தன. அந்த இலைகள் தெருவில் விழுந்ததை, பசியோடிருந்த ஒரு காக்கை பார்த்து விட்டது. பறந்து வந்து இலையிடம் அமர்ந்தது. அடுத்த விநாடியே அது “கா! கா!” என்று கத்தத் தொடங்கியது. கூட்டமாகப் பத்துப் பதினைந்து காக்கைகள் அங்கு வந்து சேர்ந்தன. அவை, ஒன்றோடொன்று மோதிக்கொள்ளாமல் நிதானமாகவும் கட்டுப்பாட்டாகவும் அந்த இலைகளில் இருந்த பண்டங்களைத் தின்றன.

பக்தர், அந்த இளைஞனைப் பார்த்துச் சொன்னார்:

“தம்பி! பார்த்தாயா? ஒரு சாதாரணப் பறவை இந்தக் காக்கை! இது கூடத் தனக்குக் கிடைத்த உணவை, தான் மட்டுமே அருந்தவேண்டுமென்ற எண்ணமில்லாமல், தன் இனத்தையே கூவியழைத்துப் பகிர்ந்துண்ணும் பண்பைப் பெற்றிருக்கிறது! இத்தகைய இயல்பு படைத்தவர்களுக்கே இந்த உலகில் உயர்வு உண்டு! எல்லாம் தனக்கே என்பவருக்கு ஆக்கமில்லை; அழிவேதான்! இதனை அறிந்துகொள்க தம்பி!”

இப்படிக் கூறிவிட்டுப் பக்தர் சென்றதும், அந்த இளைஞன் தனது செயலுக்கு வருந்தி நாணித் தலை கவிழ்ந்து நின்றான்.

“தனக்குக் கிடைத்ததை மறைக்காமல் தனது சுற்றத்தைக் கூவியழைத்துக் காக்கை உண்ணும். அந்த இயல்புடையவர்க்கே உயர்வு உண்டு உலகில்.”

என்கிறது குறள்!

“காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீர் ஆர்க்கே உள.”

அதிகாரம் - 53 - சுற்றந்தழால்; பாடல் - 527

ஆக்கம் = உயர்வு அன்ன = போன்ற நீரார் = இயல்புடையவர்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்