பொருளடக்கம் 253 / 300
அ. இயற்றலும் ஈட்டலும் / ஆ. பகுத்துண்டு பல்லுயிர்
அச்சுப் பக்கம் 539–541 · ஸ்கேன் 556–558 · அதிகாரம் 39 (இறைமாட்சி) — குறள் 385; அதிகாரம் 33 (கொல்லாமை) — குறள் 322
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
துறவறம் மேற்கொண்டோர்க்கென அறத்துப்பாலில் எடுத்துக்காட்டி யிருக்கும் துறவறவியலில், கொல்லாமை எனும் அதிகாரம் தனித்தலைப்புடன் திகழ்கிறது.
குறட்பாக்களை அறம், பொருள், இன்பம் எனும் முப்பால்களாக வள்ளுவர் வடித்துத் தந்திருக்கக்கூடும். ஆனால், அதிகாரத் தலைப்புகள் கட்டி ஒவ்வோர் அதிகாரத்திற்கும் பத்துக் குறள்களை வரிசைப்படுத்தி அவரே வழங்கியிருக்க முடியுமா? இது ஐயத்திற்குரியதே! அவருக்குப் பின் வந்தோர் இயல்களையும் அதிகாரங்களையும் பிரித்துத் தொகுத்திருப்பர் என்றே தெளிந்திட வேண்டியிருக்கிறது. துறவறத்திற்குரிய பல அறிவுரைகள் இல்லறத்தாரும் ஏற்று நடந்திட வேண்டிய வழிகாட்டிகளாக அமைந்துள்ளன. பொருட்பாலில் சொல்லப்படும் கருத்துக்கள், நெறிமுறைகள், மக்களைப் பேணிக்காக்கும் அரசின் பொறுப்புமிக்க கடமைகள் சிலவற்றை அறத்துப்பாலிலும் காணமுடிகிறது! பொருட்பாலுக்கே உரியதாகத் தோன்றும் கருத்துக்களை, அறத்துப்பாலில் இணைத்திருக்கின்றனரே என்ற வியப்பும்கூட எழுகிறது!
அனைத்துக்கும் அறவழியே அடிப்படை என்பதால், பொருட்பாலுக்குரியது போலத் தோன்றும் கருத்துக்களை அறத்துப்பாலில் காண்பதும் இயற்கைதானே!
நிலமும் கடலும் அறமெனக் கொண்டால் - அவற்றில் விளையும் அனைத்தும் பொருட்பால் எனக் கொள்வதே சிறப்பு!
ஆரணங்கின் கழுத்தில் அணி சேர்ப்பது முத்தாரம்!
அந்த ஆரத்திற்குரிய முத்துக்கள் கிடைக்குமிடம் ஆழ்கடலின் அடியில்தானே!
பொன் அணி பூண்டு புன்னகை சிந்துகிறாள் பெண்ணழகு!
அந்தப் பொன்னைத் தன் மடியில் சுமப்பது பூமித் தாய்தானே!
முத்தாரமும் பொன்னணியும் பொருட்பாலில் ஒளிவிடுகின்றன எனினும் முத்தும் பொன்னும் விளைவது அறம் எனும் கடலிலும் நிலத்திலும் அல்லவா?
இப்படித்தான் பொருட்பாலில் பொருத்தமுடையதென எண்ணிடும் சில புதிய சிந்தனைகளை - இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு திருவள்ளுவரின் எண்ணச் சோலையில் மலர்ந்த புரட்சிக் கருத்துக்களை - அறத்துப்பாலில் தொகுத்தளித்தனர் போலும்!
முடியாட்சி இருந்த காலத்தில் அந்த முதுபெரும் அறிஞர் திருமகனார்; வள்ளுவத்தை உலகிற்கு வழங்கினார்.
இப்போதும் குடியாட்சி என்ற பெயரால், பல நாடுகளில் வல்லார் வகுத்த தடியாட்சிகள் நடைபெறுகின்றன.
குடியாட்சி, குடிமக்களால் தங்களை ஆளத் தகுந்தவரைத் தேர்ந்தெடுக்கும் முறை கொண்ட ஆட்சி!
முடியாட்சி புரிந்தோர்க்குச் சொன்ன அறிவுரைகள், இன்று குடியாட்சி நடத்துவோருக்கும் பொருந்தும்!
மக்களால் அரசு மட்டும் அமைக்கப்படுதல் போதாது! அந்த மக்கள் அரசே மக் களுக்குத் தேவையானவற்றை விளைவித்து - தருவித்து - அவற்றைக் காப்பாற்றி - அப்படி பாதுகாக்கப்பட்டதை மக்கள் அனைவர்க்கும் வகுத்தளித்திடல் வேண்டும்.
“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு.”
இந்தக் குறள், பொருட்பாலின் தொடக்கத்தில் அரசியலில் - இறை மாட்சியெனும் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது! அது மணிமகுடம் இருந்த காலம்! அதனால், இறை என்று மன்னவனின் கடமையைச் சுட்டிக் காட்டினார்.
மக்களால் அரசுகள் தேர்வு செய்யப்படவேண்டுமென்ற மக்களாட்சியின் மாண்பினைப் போற்றும் காலம் இது!
எனினும், அரசுக்குரிய கடமை எதுவென வலியுறுத்தப்படுகிறது!
பொருட்பாலில் கூறப்படும் இந்தப் பொறுப்புணர்வுக்கு மேலும் வலிசேர்க்கும் வண்ணம் அறத்துப்பால் - துறவறவியலில், கொல்லாமை எனும் அதிகாரத்தில் ஒரு பாடல்.
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.”
ஓர் உயிரைக்கூட கொல்லாததுதான் அறம் என்று திட்டவட்டமாகக் கூறும் வள்ளுவர், கொல்லாமைக்குத் தனிச் சிறப்பையே அளிக்கிறார்.
ஆட்சி நடத்துவோரின் கொள்கை காரணமாக - செல்வமும் செழிப்பும் ஓரிடத்தில் குவிந்து சிலர் வாழவும் - பலர் வாடவுமான நிலை அமைந்திடின், வறுமையால் செத்திடும் மக்கள், மறைமுகமாகக் கொல்லப்படுகிறார்கள் என்று தானே பொருள்!
அந்தக் கொலைச்செயல் நிறுத்தப்பட வேண்டுமானால், கோவேந்திகளின் கொள்கை, பொதுவுடைமை மணங்கமழ்வதாகவும், அவர்களால் அமையும் அரசே சிறந்ததெனப் போற்றப்படுவதாகவும் இருத்தல் வேண்டும்!
அத்தகைய அரசை உருவாக்கும் மக்கள், வலியுறுத்த வேண்டியது என்ன?
“எத்தனையோ அறநூல்கள் அறநெறிகளைத் தொகுத்தளித் திருக்கின்றன! ஆனால், அந்த நூல்களில் காணப்படும் அறநெறிகள் அனைத்துக்கும் தலையானது ஒன்று உண்டு! அதுதான், உள்ளவன் இல்லாதவன் என்ற நிலையை மாற்றி, இருப்பதை அனைவர்க்குமே பகுத்துக்கொள்ளக் கூடிய கொள்கையை வகுத்து, எல்லா உயிர்களையும் வாழ வைப்பது என்பதாகும்.”
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு தமிழகத்தில் தோன்றிய புரட்சிகரமான சிந்தனைக்குச் சொந்தக்காரன், பொதுவுடைமைக் கொள்கையின் வழிகாட்டி - வள்ளுவன் என நினைக்கும்போது நெஞ்சமெல்லாம் இனிக்கின்றதன்றோ!
அதிகாரம் - 39 - இறைமாட்சி; பாடல் - 385 அதிகாரம் - 33 - கொல்லாமை; பாடல் - 322
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்