பொருளடக்கம் 252 / 300
நிழல்நீரும் இன்னாத
அச்சுப் பக்கம் 537–538 · ஸ்கேன் 554–555 · அதிகாரம் 89 (உட்பகை) — குறள் 881
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
பூங்குன்றன், செல்வக்குடியில் பிறந்தவன். அவனுக்கு உற்றார் உறவினர் நண்பர்கள் நிறைய உண்டு. அனைவருமே அவனிடம் இனிமையாகப் பழகுவார்கள். பழகுதற்குக் கேட்கவா வேண்டும்!
தங்க நாணயங்கள் நிறைந்த பேழைகளைத் தாழ்வாரத்திலேயே அடுக்கி வைத்திருக்கக்கூடிய அளவற்ற செல்வத்திற்கு உடைமையானாயிற்றே!
அவர்களின் கருத்துக்களையே, அவன், அறிவார்ந்த ஆன்றோர்களின் பொன் மொழிகளாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வந்தான்.
அவனது ஒவ்வோர் அசைவையும் போற்றியும் புகழ்ந்தும் அவனைச் சூழ்ந்திருந்தோர் அவன் இதயத்தைக் குளிர வைத்துக் கொண்டிருந்தனர்.
இவ்வாறே ஆண்டுகள் பல உருண்டன. ஒரு நாள் அந்த ஊரையடுத்த சிற்றார் ஒன்றில், பற்றற்று வாழ்கின்ற துறவியாரின் குடிலுக்குள் அவரது மாணவன் ஓடோடி வந்து, பூங்குன்றன், துறவியாரைக் காண வந்திருப்பதாகச் சொன்னான். அழைத்து வருமாறு துறவியார் கூறினார்.
உள்ளே வந்த பூங்குன்றனைக் கண்டு துறவி வியப்புற்றார். “நான் காண்பது பொன் கலசம் வைத்து வீடு கட்டி வாழ்ந்த பூங்குன்றனைத்தானா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார். அந்த அளவுக்கு ஏழ்மைக்கோலத்தில் இருந்தான் பூங்குன்றன்.
“என் நிலையை காண்டார்களா?”
அவன் துறவியின் கரங்களைப் பற்றிக்கொண்டு கண்கலங்கக் கேட்டான்.
“உன் நிலை இப்படி ஆகக்கூடும் என நான் எதிர்பார்த்ததுதான். உன்னைச் சுற்றியிருப்போர் உன்னை இப்படி ஆக்கிவிடுவர் என நான் கேள்விப்பட்டேன். அது நடந்தேவிட்டது போலும்.”
துறவி, அமைதியாக இந்தப் பதிலைச் சொன்னார்.
“அய்யனே! என் அருகிருந்த சுற்றத்தார் அப்படியொன்றும் கொடியவரில்லை. அன்புடன்தான் பழகினர். நண்பர்கள் இனிமையானவர்கள். நச்சு எண்ணம் கொண்டவர்கள் என்று கூறிடவே முடியாது!”
பூங்குன்றனின் விளக்கத்தைக் கேட்டுத் துறவி சிரித்தார்.
“குன்றனே! நீ இன்னமும் திருந்தியதாகத் தெரியவில்லை. உன்னைச் சூழ்ந்திருந்தோர் உன் பார்வைக்குப் பகையாளிகளாகத் தெரியவில்லையே தவிர, அவர்கள் உட்பகை கொண்டவர்கள் என்பதை நீ அறியமாட்டாய்! அதை அவ்வளவு எளிதில் உணர்வதும் இயலாதுதான். ஒன்று சொல்கிறேன் கேள்! இனிய நிழலைத் தருகிறதேயென்று புளிய மரத்தடியில் படுத்து இளைப்பாறினால், உடல் கொதிப்பேறி நோயுண்டாகும்.
குளிர்ந்த நீர்தானே எனக்கருதி, நச்சுக்கிணற்று நீரை அள்ளிப் பருகினால், நரம்புச்சிலந்தி நோய் பற்றிக்கொண்டு அணு அணுவாகக் கொல்லும்!
உன்னைச் சூழ்ந்திருந்த சுற்றமும் நட்பும் - புளிய மரத்து நிழல்போலவும் நச்சுக்கிணற்றுக் குளிர்நீரைப்போலவும் உட்பகையைக் காட்டிக் கொள்ளாது உன்னை மெல்ல மெல்ல வறியனாக்கித் தீர்த்துவிட்டன. வள்ளுவர் எழுதிய குறளை நீ படித்ததில்லையா?”
“என்ன குறள் அய்யனே!”
“இனிமையாகத் தோன்றும் நிழலும், நீரும் கூட நோய் தரக்கூடியவைகளாக இருப்பின் அவை தீயனவே ஆகும்! அதைப்போல, சுற்றத்தாரின் தன்மைகளும் துன்பம் அளிக்குமானால் தீயனவே ஆகும்!”
அந்தக் குறளின் பொருள் கேட்டு, பொருளிழந்து நின்ற பூங்குன்றன், துறவியாரின் காலில் விழுந்து வணங்கினான், “உண்மை! உண்மை!” என்று உரக்கக் கூவிக்கொண்டே!
“நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின்.”
அதிகாரம் - 89 - உட்பகை; பாடல் - 881
தமர்நீரும் = சுற்றத்தார் தன்மையும்
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்