பொருளடக்கம் 251 / 300
மலரன்ன கண்ணாள்
அச்சுப் பக்கம் 535–536 · ஸ்கேன் 552–553 · அதிகாரம் 115 (அலர் அறிவுறுத்தல்) — குறள் 1142
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
“ஆடலரங்கில் அவள் தோன்றியதும் பார்வையாளர் முகங்கள் எல்லாம் ஒளிபெற்றுத் தகத்தகாயமாயின!
மலர்விழி அவள் பெயர்! மலர் என்றே அழைத்தனர்! விழிகள், மலர்கள்! மேனியோ மலர்க்கொடி! பிறந்தபொழுதே பெற்றோர் அவளது கண்ணழகைக் கண்டு, காரணப் பெயராகவே மலர்விழி எனச் சூட்டி மகிழ்ந்தனர் போலும்! அன்றைய ஆடலரங்கில் அவள் ஆட்டத்திற்குக் குழல் இசைப்போன் வரவில்லை. அதனால் அந்த வாய்ப்பு எனக்குக் கிட்டியது. என் குழல் ஒலி அவளைக் கவர்ந்தது போலும்! முகபாவத்தின் மாறுதல்களில் மின்னிடும் முறுவல், என்னை நோக்கிச் சிலநொடிகள் நிலைத்து நின்று ஏதோ ஒரு பாராட்டுச் செய்தியைக் கூறுவது போல எனக்குத் தோன்றியது.
தாளம் தவறாது - எள் முனையளவும் தடுமாறாது - சதங்கையொலித்து ஆடிடும் அந்தப் பாதங்கள் முதல், பால் நிலா முகத்தில் விளைந்திடும் மாற்றப் பொலிவுகள் வரையில் என்னைச் சுண்டியிழுத்துக்கொண்டேயிருந்தன. கலையார்வத்துடன் - உளத்தூய்மையுடன், அந்த அழகியின் அற்புதக் கூத்தினை மெய்ம்மறந்து சுவைத்தேன். வேறெந்த விபரீத எண்ணங்களும் என் உள்ளத்துக் கழனியில் முளைத்திடவில்லை.
அவளும் அப்படித்தான் என் இசைத்திரளில் வயப்பட்டிருக்கக்கூடும்! ஆமாம்; அப்படித்தான்! நீண்ட நாட்களுக்குப் பிறகு நாங்கள் சந்தித்து, என்னை அவளுக்கும் - அவளை எனக்கும் ஒப்படைத்துக்கொண்டு, புன்னைமரத்து நிழலிலே தழுவிப் புரண்டபோது அவள் அதைத்தான் சொன்னாள்! என்ன சொன்னாள்?
‘அன்று ஆடலரங்கிலும் சரி; அதற்குப்பிறகு ஓரிரு முறை உங்களைச் சந்தித்தபோதும் சரி - காதல் எனும் ஓர் உணர்வு என் நெஞ்சில் நிழலாடக்கூட இல்லை! ஆனால், இந்த ஊரார் என்னைத் தவறாகக் கருதி என் கலையுள்ளத்தைப் புரிந்துகொள்ளாமல் - பலர் அறிய ‘அலர்’ தூற்றி - எனக்கும் உங்களுக்கும் காதல் முகிழ்த்து முற்றிவிட்டது எனப் பேசத் தொடங்கினர்! அந்தப் பேச்சே, எனக்கு இப்படியொரு உணர்வை உருவாக்கிவிட்டது!’
இதை மலர்விழியாள் சொன்னதும் நானளித்த பதில் என்ன தெரியுமா?
‘என் செய்தியும் அப்படித்தான் செந்தேனே! நறுந்தமிழே! உன் ஆடற் கலைக்கே அடிமையானேன்! ஆனால், இந்த ஊர் நம் இருவரைப்பற்றியும் கட்டிவிட்ட கதைகள், தட்டிவிட்ட குதிரைகளைப்போலப் பல திக்கும் பறவி ஓடிவிட்ட பிறகு, இனியென்ன பயமென்று நானும் துணிந்துவிட்டேன்! தங்களையுமறியாமல் நமக்கு உதவி செய்து நம்மைச் சேர்த்துவைத்த இந்த ஊராரை வாழ்த்துவோம்’ என்றேன்.
இருவரும் சேர்ந்து வாழ்த்தினோம்! எங்களைப் புன்னைமரத்துக் கிளைகளில் இருந்த பறவைகள் வாழ்த்தின!”
“மலரன்ன கண்ணாள் அருமை அறியாது அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.”
அதிகாரம் - 115 - அலர் அறிவுறுத்தல்; பாடல் - 1142
அலர் = பலர் அறிதல்
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்