பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 250 / 300

உள்ளுவ தெல்லாம்

அச்சுப் பக்கம் 532534 · ஸ்கேன் 549551 · அதிகாரம் 60 (ஊக்கம் உடைமை) — குறள் 596

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

“மலைவாழை அல்லவோ கல்வி நீ வாயார உண்ணுவாய் போ என் புதல்வி”

பாவேந்தர் என்றும் புரட்சிக் கவிஞர் என்றும் செந்தமிழ்ச் செல்வம் என்றும் இருபதாம் நூற்றாண்டின் எழுச்சிப் புலவன் என்றும் ஏற்றிப் போற்றிடும் பாரதிதாசனின் தென்றல் நடைத் தீஞ்சுவைக் கவிதை பாடிக் கல்விக்கூடத்திற்குத் தன் மகளை அனுப்பிவைத்தாள் அன்னை!

“தலைவாரிப் பூச்சூடி உன்னை பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை”

தாய்மொழி கேட்டுத் தாய்மொழித் திறன்பெற மகளும் சென்றாள், ஊக்கமுடன் பயின்றாள்; உலகத்து அறிவுக் கருவூலங்களையெல்லாம் அவள் நெஞ்சத்துப் பேழையில் அள்ளிப் போட்டுக்கொண்டாள்.

இளந்தளிராய் - குளிர் பிறையாய் - இனியவளும் வளர்ந்தாள்! இதழ்கள் செங்கனிகளாயின! பொன்னுருக்கில் தோய்த்தெடுத்த சிலைதான் மேனி! அவளைக்

காணும் ஆடவர் கண்ணின் இமைகள், மீண்டும் மூடிக்கொள்ள மறுத்தே விட்டன! போற்றிப் புகழத் திறந்த வாய்கள், திறந்தே இருந்தன! கருவண்டு சுழன்று சுழன்று நடனமாடும் வெள்ளியம்பலந்தான், அவள் விழிகள்! அந்தத் தாமரையை ஈன்றெடுத்த அவள் தாய், ஒரு நாள் அந்தத் தங்க மகளை அருகழைத்து அமரவைத்து, அவள் எதிர்கால வாழ்வுக்கான தேர்வு ஒன்றை நடத்தினாள்.

“என்னருமை மகளே! உனக்குத் திருமண விழா நடத்திப் பார்க்க நானும் உன் தந்தையும் முடிவு செய்துள்ளோம். உன் அழகிற்கு அடிமையாக எத்தனையோ செல்வந்தர் வீட்டுப்பிள்ளைகள் தூது விட்டுக்கொண்டிருக்கின்றனர்! அரசு வம்சத்து இளவல்கள் பலரும் ஆள் அனுப்புகின்றனர்! உன் விருப்பம் தெரியாமல் நாங்கள் ஒப்புதல் அளிக்க இயலுமா? இதோ பார்; அவர்களின் உருவ ஓவியங்கள்!”

அந்த மாணிக்கவல்லியை மணக்க விழைந்த ஆடவர்களின் உருவங்களை ஒவ்வொன்றாக எடுத்து அவள் முன் வைத்தாள்.

“அம்மா! தலையில் வைரமுடியும் கழுத்தில் முத்தாரமும் அணிந்து காணப்படும் இவர் யாரம்மா?”

“ஓ! என் மகளே! நீ எடுத்த எடுப்பிலேயே உயர்வாகத்தான் எண்ணுகிறாய்! இவர்தான் இளவரசர் இளநாகர்! ஏழு ஊர்களுக்கும் எட்டு மலைகளுக்கும் உரிமையுடையவர்!”

“அப்படியா? இதோ கூரிய பார்வையும் கொடிய தோற்றமுங்கொண்டு நிற்கிறாரே; இவர் யார்?”

“இவரா? வல்லமையிலும் சிறந்தவர்! வளத்திலும் பெரியவர்! அழகு குறைவே ஆயினும் அள்ள அள்ளக் குறையாத செல்வம் உடையவர்!”

“அம்மா! இவர்களில் யாரையும் நான் மணக்க விரும்பவில்லை! வளமுடையவர்! வல்லமையுடையவர்! அழகுடையவர்! அறிவுடையவர்! அதிகாரம் செலுத்தும் சிறப்பும் உடையவர்! இப்படி ஒவ்வொருவர் படங்களாக நீங்கள் என்னிடம் காட்டிடக் காத்திருக்கிறீர்கள்; இல்லையா?”

“ஆமாம் மகளே! இவர்களில் யாரை நீ உயர்ந்தவராகக் கருதுகிறாயோ அவரை மணந்திட நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்!”

“அம்மா! உயர்ந்தவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டுமா?”

“ஆம் கண்ணே! எண்ணுவதையெல்லாம் உயர்வாகவே எண்ண வேண்டும் என்று வள்ளுவர்கூடக் குறள் பாடியிருக்கிறாரே - நீ படித்திருப்பாயே!”

“படித்திருக்கிறேன் அம்மா! ஆனால், உயர்வு என்பது உப்பரிகையிலே உலவிடும் அளவுக்குப் பெருமையும் - மாட மாளிகைகளில் வாழ்ந்திடும் அளவுக்குச் சிறப்பும் கொண்டது என்று இலக்கணம் வகுத்து விடாதீர்கள்! நான் இந்த உயர்வுகளை, “உயர்வுகள்” என்ற பட்டியலிலேயே இணைத்துப் பார்க்கவில்லை!”

“என்னம்மா சொல்லுகிறாய்? அழகின் திருவுருவமான உன்னை அடைந்திட எத்தனை பேர் தவம் இருக்கிறார்கள்! நீ இவர்களையெல்லாம் விட்டுவிட்டு யாரைத்தான் மணக்க விரும்புகிறாய்?”

“அம்மா! எண்ணுவதெல்லாம் உயர்வான எண்ணமாக இருக்க வேண்டுமல்லவா? அதன்படிச் சொல்லுகிறேன்; அன்னைத் தமிழ்மொழி காத்திடும் போராட்டத்தில் ஈடுபட்டு, ஒரு கையை இழந்து - இன்னமும் சிறையில் பூட்டப் பட்டுக் கிடக்கிறாரே; ‘அரிமா’ என்னும் தியாகத் தமிழன்; அவருக்காகவே நான் காத்திருக்கிறேன்.”

“என்ன? அவனுக்கா? அந்தக் கையிழந்த சிறைப்பறவைக்கா? இதுதான் நீ மிக உயர்வாக எண்ணிய அழகோ? உன் எண்ணம் ஈடேறவே முடியாது; ஈடேறப் போவதுமில்லை!”

“தாயே! தயவு செய்து என்னை மன்னித்திடுக! வள்ளுவர் குறளின் அடுத்த அடியை மறந்துவிடலாமா? ‘எண்ணுவதெல்லாம் உயர்வைப்பற்றியே எண்ணவேண்டும்! அந்த உயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது!’ என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்!”

தாய், கவலையே உருவாகக் கன்னத்தில் கைவைத்தவாறு உட்கார்ந்திருந்தாள். அந்தக் கன்னியோ, எழுந்து வந்து பலகணி வழியாகப் பரந்த விண்வெளியைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.

“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து.”

அதிகாரம் - 60 - ஊக்கம் உடைமை; பாடல் - 596

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்