பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 249 / 300

விருந்து புறத்ததா

அச்சுப் பக்கம் 530531 · ஸ்கேன் 547548 · அதிகாரம் 9 (விருந்தோம்பல்) — குறள் 82

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

அன்று தகடூரை ஆண்டுவந்த அதியமான் நெடுமானஞ்சி, வாள் தூக்கி வையம் கலக்கும் மாவீரன்! ஈட்டியொன்று முகத்தில் பாய்ந்திடத் துள்ளிவரக் கண்டபோதும் இமை கொட்டாத துணிவு மிக்கோன்! போர்க்களம் அவன் தவழ்ந்து விளையாடிய தாழ்வாரம்! வேலும் கணைகளும் அவன் பிள்ளைப் பருவத்து விளையாட்டுக் கருவிகள்! விழுப்புண்களை மார்பில் புரளும் முத்தார மாகக் கருதும் வீரத்திருவினன்! புறமுதுகிடுவதை இழுக்கென்று எண்ணிடும் புறநானூற்று இலக்கியம் கண்ட தமிழ் இனத்தின் வெற்றிச் சுடர் விளக்கு!

போர் ஆர்வம் கொண்ட அந்தத் தமிழ்ச்சியம்; அவ்வாறே தனை வளர்த்த மொழியின் மீதும் பேரார்வம் கொண்டவன்! அவனைக் குறித்து புறப்பாடல் வழங்கிய ஒளவை, பின்வருமாறு கூறிப் புகழ்கிறாள்.

“வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார் களம்படக் கடந்த கழல் தொடித் தடக்கை ஆர் கலி நறவின் அதியர் கோமான்.”

பாராட்டு அத்துடன் நிற்கவில்லை! மேலும் கூறுகிறாள் ஒளவை:

“சிறியிலை நெல்லித் தீம் கனிகுறியாது! ஆதல் நின் அகத்து அடக்கி சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே!”

அதாவது, மிக நீண்ட ஆயுள் பெற்று வாழக்கூடிய வலிமையைத் தரவல்ல அரிய நெல்லிக்கனியொன்று, தகடூர்த்தரணியாளும் அதியமான் நெடுமானஞ்சிக்குக் கிடைக்கிறது. சாவைத் தடுக்கக்கூடிய அருமருந்தாம் அந்த நெல்லிக்கனியை அவன் உண்பதற்கு முனைந்தபோது, வெளிப்புறத்தில் விருந்தொன்று வந்திருப்பதாகச் செய்தி கிடைக்கிறது. யார் அந்த விருந்தினர்? ஒளவைதான்!

அப்போது அதியமானின் பரந்து விரிந்த உள்ளம் பேசுகிறது! என்ன பேசுகிறது?

“விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டு, சாகாத மருந்தாக இருந்தபோதிலும் அதனைத் தான் மட்டுமே உண்பது விரும்பத்தக்கதல்ல!”

தான் மட்டும் உண்ணக்கூடாது - வந்த விருந்தினர்க்கும் அளித்துப் பகிர்ந்துண்ண வேண்டும் என்பதே விருந்தோம்பல் இலக்கணம் என்றாலும்கூட, வந்திருக்கும் விருந்தினரோ தமிழ் விருந்து படைப்பவராயிற்றே; அதனால் அதியமான் அந்த நெல்லிக்கனியை, தான் உண்டு நீண்டகாலம் வாழ்வதைவிட ஒளவை உண்டால் தமிழுக்குப் பயனுண்டு எனக் கருதி, அந்தக் கனியை ஒளவைக்கே வழங்கிவிடுகிறான்.

பகிர்ந்துண்ணும் விருந்தோம்பல் பண்புக்கே ஒருபடி மேலே சென்று, சங்க இலக்கியத்தில் அழியாத இடம் பெற்றுவிட்டான் அதியமான்! ஆம்; சாவாமருந்தென ஒளவைக்கு நெல்லிப்பழம் அளித்தவன், இலக்கியச் சாவாமருந்தால் என்றென்றும் உயிர் வாழ்கிறான்.

விருந்தோம்பல் சிறப்பினைக் கூறும் குறள் இதோ:

“விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.”

அதிகாரம் - 9 - விருந்தோம்பல்; பாடல் - 82

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்