பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 248 / 300

குடிசெய்வார்க்கு இல்லை

அச்சுப் பக்கம் 528529 · ஸ்கேன் 545546 · அதிகாரம் 103 (குடி செயல் வகை) — குறள் 1028

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

“உயிர் நீப்பர் மானம்” எனத் திட்டவட்டமாகத் திருவள்ளுவர் கூறுகிறார்.

உடலில் இருந்து மயிர் நீக்கப்பட்ட கவரிமான் எப்படி உயிர் வாழாதோ அதைப்போலக் கவரிமான் போன்றவர்கள், தங்களுடைய மானம் அழியக்கூடிய சூழ்நிலை உருவானால் உயிரை விட்டுவிடுவார்கள் என்பது அவரது கணிப்பு! மான உணர்வுக்கு அவ்வளவு சிறப்புத்தன்மை காட்டி எழுதப்பட்ட அறிவுரையாகும் அது!

‘குடியியல்’ என்ற தலைப்பில் மானத்தின் மாண்பு கூறும் வள்ளுவர்; அதே தலைப்பில் பிறிதொரு அதிகாரத்தில் குடிப்பெருமை காத்திடுவதற்கு எவ்வளவு பெரிய தியாகத்திற்குத் தயாராக இருக்கவேண்டுமென்று குறிப்பிடுகிறார் தெரியுமா?

‘குடி’ என்ற சொல், குடும்பத்தையும் குறிக்கிறது! பிறந்த குலத்தையும் குறிப்பிடுகிறது! சார்ந்துள்ள இனத்தையும் குறித்து நிற்கிறது! குடும்பத்தைப் பற்றிப் பேசும்போது உயர்வாக வைத்து எண்ணப்படுகிற மானம்; குலப் பெருமைக்கு ஒளி தருகின்ற வகையில் போற்றப்பட வேண்டிய மானம்; இனத்தைக் காப்பாற்றுவதற்கும் இனத்தை முன்னேற்றுவதற்கும் ஒருவர் செயல்படும்போது எப்படி நோக்கப்படுகிறது என்பதை ஆழ்ந்த சிந்தனையுடன் கவனிக்க வேண்டும்.

நிறைந்த செல்வக் குட்டையில் கிடந்து ஊறுவதற்காகச் சிலர் மானத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அந்தச் சேற்று நீரில் குதித்துவிடுகிறார்கள்.

பதவியின் மீதுள்ள விடாப்பற்றின் காரணமாக ஊரார் பழிப்புக்கும் உலகத்தார் இகழ்ச்சிக்கும் நாணமடையாமல், சிலர் மானமிழந்து மதிகெட்டு அலைகின்றனர்.

இப்படித் தன்னலம் கருதி மானத்தை இழப்போரைக் கண்டிக்கிற வள்ளுவர்; தன் இனமக்களின் உயர்வுக்காக மானமெனும் விலைமதிப்பிலாப் பொருளையும் இழக்கலாம் என்று ஒப்புதல் வழங்குகிறார் என்றால் - இன முன்னேற்றத்தை முன் நிறுத்தித் தன்னைப் பின்னால் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்றுதானே அவர் தெளிவுபடுத்துகிறார்.

குடி செய்வார் - அதாவது தனது இனமக்களின் உயர்வுக்கான செயல்களில் ஈடுபடுவோர் - காலம் நேரம் பார்த்துக்கொண்டு அந்தச் செயலில் இறங்கிடத் தேவையில்லை! “குடி செய்வார்க்கு இல்லை பருவம்” என்கிறார். பருவம் என்பது உரிய காலத்தை மட்டும் குறிப்பிடுவதாகக் கருதாமல், இனமக்களின் உயர்வுக்காகப் பாடுபடுகிறவர்களுக்கு இளமைப்பருவமா - முதுமைப்பருவமா என்ற கேள்விக்கே கூட இடமில்லையென்று பொருள் கொள்ளலாம் அல்லவா!

இன உயர்வைக் கருதி உழைத்திடுவோர், சோம்பல் கொண்டு அயர்ந்து விட்டாலும் - தம்மீது பகைவர்கள் வீசிடும் இழிசொற்கள், பழிமொழிகள் ஆகியவற்றால் தமது மானத்திற்கு ஊறு வந்துவிட்டதே என்று கவலைப்பட்டாலும் அவர்களது குறிக்கோளான இன உயர்வை ஏற்படுத்திட இயலாமற் போய்விடும் என்று அறுதியிட்டுக் கூறுகிறது குறள்!

உயிரினும் உயர்ந்தது மானம் எனக் குறிப்பிட்டவர்; அந்த மானத்தைப் பற்றிக்கூடக் கவலை கொள்ளாமல் இன உயர்வுக்கு உழைத்திடவேண்டும், இல்லையேல் இன முன்னேற்றம் கெட்டொழியும் எனக் கூறுகிறார்.

“குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்.”

அதிகாரம் - 103 - குடி செயல் வகை; பாடல் - 1028

மடி = சோம்பல்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்