பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 247 / 300

உழந்துழந்து உள்நீர்

அச்சுப் பக்கம் 526527 · ஸ்கேன் 543544 · அதிகாரம் 118 (கண்விதுப்பழிதல்) — குறள் 1177

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

என் திருவிழிகளே! நீங்கள் எல்லை கடந்து ஆடிய ஆட்டத்தின் விளைவைக் கண்டீர்களா? எதற்கும் ஓர் அளவு வேண்டும் என்பதை மறந்து நீங்கள் குதித்ததற்கு இதோ உங்களுக்குத் தண்டனை கிடைத்துவிட்டது.

பக்கத்து வீட்டுத் தோட்டத்தில் சிட்டுக் குருவியொன்று கொய்யாமரத்துக் கிளைகளில் தாவித்தாவி சதிராடித் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. பதுங்கிப் பதுங்கி வந்த பூனை, திடீரெனப் பாய்ந்தது. கட்டுக் கடங்காத களிப்பிலாடிய குருவியின் “கீச்! கீச்!” ஒலி மட்டும் காற்றோடு கலந்தது. பாவம்; சிட்டுக்குருவி!

நீராடிவரக் குளத்திற்குச் சென்றேன். சின்னஞ்சிறு சேல்கள் இரண்டு; என் கண்களே - உங்களைப் போலத்தான் இருந்தன! நீரில் எழும்பி எழும்பிக் குதித்துக் கும்மாளம் போட்டுக்கொண்டிருந்தன! எவ்வளவு உயரம்தான் எழும்பிக் குதிப்பது? அதற்கோர் வரம்பு வேண்டாமா? நீரிலிருந்து உயரத்திற்குப் பாய்ந்த அந்தச் சேல்மீன்கள், திடுமெனக் கரையில் விழுந்தன! துடித்தன! துவண்டன! காப்பாற்ற ஓடினேன்! அதற்குள்

தூண்டில்காரச் சிறுவன் ஒருவன் அவற்றைத் தூக்கித் தன் குவளையில் போட்டுக்கொண்டு பறந்தேவிட்டான்!

என் அழகு விழிகளே! உங்கள் சதிராட்டங்களையும் துள்ளல்களையும் இன்றைக்குக் காணமுடியவில்லையே! அப்போது நீங்கள் புரிந்த ஆரவாரம் கொஞ்சமா?

மல்லிகைசூடிய கூந்தலுடன் நெற்றிக் குங்குமம் ஒளிவிட மாலைநேரத்தில் வீட்டு வாயிலில் கோலம் தீட்டிக்கொண்டிருப்பேன். அவர் தெருக்கோடியில் வருவார். என்னைத் தனியாக விட்டுவிட்டு; என் கண்களே! நீங்கள் இருவரும் அவரிடம் ஓடி விடுவீர்கள். அவரை எதிர்கொண்டழைத்து வீட்டுக்குள் அமரவைத்து, அவரது திண்தோள்களில் தொத்திக்கொள்வீர்கள். அசையும் அவர் இதழ்களின் அழகையே சுவைத்துக்கொண்டிருப்பீர்கள். உணவருந்த உட்காருவார்; சாப்பிடும் அழகையே அப்படியே பார்த்துக்கொண்டு மெய்ம்மறந்து போவீர்கள். படுக்கையில் சாய்ந்திருக்கும் அவர் கையில் உள்ள புத்தகத்தை என் மெல்லிய விரல்களால் வாங்கி வைத்துவிட்டுப் பால்கிண்ணத்தை அவர் உதட்டருகே கொண்டுபோவேன். அதற்குள் நீங்கள் அவரது விழிகளுடன் விரகதாப விளையாட்டுக்களில் ஈடுபட்டுவிடுவீர்கள்.

உங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு இப்போது கிடைத்துள்ள பரிசைப் பார்த்தீர்களா?

கொய்யாமரத்துச் சிட்டுக்குருவியைப் பூனை கொளவிக்கொண்டு போனது போல, என்னையும் அவரையும் “பிரிவு” தனிமைப்படுத்திவிட்டது. கரையில் குதித்த மீன்களைப்போலத் துடிக்கிறீர்கள்.

இப்போது கண்ணீர்! கண்ணீர்! உங்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்!

“விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்களே! இன்று உறங்க முடியாமல் தவித்துத் துன்பத்தால் வடிக்கின்ற கண்ணீரும் அற்றுப்போகட்டும்.”

இப்படியொரு பெண்மணி, தன் கண்களுக்கே சாபம் கொடுக்கிறாள், பிரிவு வேதனையைத் தாங்கமுடியாமல்!

“உழந்துழந்து உள்நீர் அறுக விழைந்திழைந்து வேண்டி யவர்க்கண்ட கண்.”

அதிகாரம் - 118 - கண்விதுப்பழிதல்; பாடல் - 1177

உழந்துழந்து = வருந்தி வருந்தி

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்