பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 246 / 300

பண்ணென்னாம் பாடற்கு

அச்சுப் பக்கம் 524525 · ஸ்கேன் 541542 · அதிகாரம் 58 (கண்ணோட்டம்) — குறள் 573

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

நாய்களும் பன்றிகளும் ஓடித்திரியும் நடைபாதை! குப்பைக் கூளங்கள் ஆங்காங்கு குவிந்து கிடக்கும் காட்சி! இரவெல்லாம் பெய்த பனியில் அந்த மேடு பள்ளம் நிறைந்த நடைபாதை ஈரமாகிக் கிடக்கிறது! கிழப்பசு ஒன்று இன்னமும் குளிர் தாங்க முடியாமல் கூனிக்குறுகி அந்தப் பாதையோரத்தில் தலையைத் தரையில் கிடத்தியவாறு படுத்துக்கிடக்கிறது! கூரையில்லாத ஒரு குடிசை அந்தப் பாதையிலே! கதவுகூடக் கீழே சாய்ந்து கிடக்கிறது! நன்றாகப்பொழுது விடிந்திருந்தும்கூட, அந்தத் திறந்த வீட்டில் ஒரு நடுத்தர வயதுப்பெண் மார்பகங்கள் திறந்த நிலையில் படுத்திருக்கிறாள். அவள் மார்பை மாற்றி மாற்றிக் குடித்துப் பார்த்து; விறிட்ட அழுகையுடன் ஒரு குழந்தை புரண்டுகொண்டிருக்கிறது! ஆம் - அவள் வறுமையின் கொடுமை தாங்கமுடியாமல் விடியற்காலையிலே தான் இறந்து போயிருக்கிறாள். சாவையும் வாழ்வையும் பற்றி எதுவுமே தெரிந்து கொள்ள முடியாத அந்தப் பச்சைக் குழந்தை, தாயின் வரண்டுபோன மார்புகளைச் சப்பிப்பார்த்து ஏமாற்றத்தால் - பசியால் - அழுதுகொண்டிருக்கிறது! அப்போது அந்த வழியே வரும் வள்ளல் வயலூரான் கண்களுக்கு அந்தக் காட்சி தப்பிடவில்லை! நின்று நிதானித்துக் கவனிக்கிறான்.

“என்னய்யா பாக்கிறீங்க! நீங்கதான் வள்ளல் பட்டம் பெற்றவராச்சே! நீங்க இப்பப்பார்க்கிறது பசியால் செத்துப்போன தாயையும், சாகத் துடிக்கிற சேயையும்!”

என்ற குரல் கேட்டு, வயலூரான் திரும்பினான். இரண்டு கால்களுமற்ற ஒரு நொண்டி, பக்கத்துக் குடிசையிலிருந்து இந்த விளக்கத்தை அளித்துக் கொண்டிருந்தான். வள்ளலுக்குச் சினம் பொங்கியது. நொண்டியை முறைத்துப் பார்த்துவிட்டு வேகமாக அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டான்.

“என்னய்யா! வள்ளல் கதை எப்படியிருக்கு பார்த்தீங்களா?”

எனக் கேட்டுக்கொண்டே நொண்டியிடம் ஓர் இளைஞன் வந்தான்! இளைஞன் பெயர் செம்மல்!

“என்னப்பா செய்றது! விளம்பர வள்ளல்களின் காலம் இது! இங்கேயொரு நூறுபேர் கூடியிருந்தால் உடனே அந்த வள்ளல், இந்த அனாதைக் குழந்தையை எடுத்து அணைத்துக்கொண்டு, இறந்துபோனவளின் இறுதிச் சடங்குகளையும் முன் நின்று நடத்தியிருப்பான்” என நொண்டி முணுமுணுத்தான்.

அங்கிருந்து விரைந்து அகன்ற வள்ளல், ஆலயத்தில் நடைபெற்ற இசை விழா ஒன்றுக்குச் சென்றமர்ந்தான்.

பல இசைவாணர்கள் இசை மழை பொழிந்தார்கள்! இறுதியில் ஒருவன் இசை பாடிட மேடையில் தோன்றினான். அவன் பாடத் தொடங்கி சில விநாடிகள் கூட ஆகவில்லை; வள்ளல் வயலூரான், “போதும் நிறுத்து! உன் பாட்டுக்கும் இசைக்கும் ஒன்றோடொன்று பொருந்தவே இல்லை!” என்று உரத்த குரல் எழுப்பினான்.

“ஆமாம்! உமது கண்ணுக்கும் கருணைப் பண்புக்கும் எப்படிப் பொருத்தமில்லையோ, அதைப் போல இந்தப் பாட்டுக்கும் இசைக்கும் பொருத்தமில்லை!”

எனக் கூறியவாறு, வள்ளலின் தோளில் கைவைத்தான் இளைஞன் செம்மல்! வள்ளல் திடுக்கிட்டுத் திரும்பினான். செம்மலின் கையில் அந்தத் தாயை இழந்த குழந்தை இருந்தது.

“அய்யா வள்ளலே! அங்கே கண்டீரே, அவலக்காட்சியொன்றை! தாய் பிணமாய்க் கிடக்கவும் - குழந்தை பசியால் துடிக்கவும் - எவ்வளவு பெரிய துயரக்காட்சி! உமக்குக் கண்ணிருந்தும் கருணை பிறக்காத காரணத்தால் அந்தக் கண்களால் பயன் என்ன? பாட்டும் இசையும் பொருந்தாவிடில் பயன் இல்லாதது போலவே கண்ணும், கருணையும் பொருந்தாவிடில் பயன் ஏதுமில்லை என்பதை உணர்வீராக!”

செம்மல் இதைச் சொல்லிவிட்டு, அந்தச் சின்னக் குழந்தையுடன் சென்று விட்டான். வள்ளல் வயலூரான் திகைத்து நின்றான்.

“பண்ணென்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்ணென்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்”

அதிகாரம் - 58 - கண்ணோட்டம்; பாடல் - 573

கண்ணோட்டம் = அருள், இரக்கம், கருணை

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்