பொருளடக்கம் 245 / 300
மிகுதியான் மிக்கவை
அச்சுப் பக்கம் 522–523 · ஸ்கேன் 539–540 · அதிகாரம் 16 (பொறையுடைமை) — குறள் 158
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
வழித்துணையான், நடுத்தரக் குடும்பத்து வாலிபன். அவன் தனது வாழ்க்கைத் துணையுடனே ஓர் ஓட்டுவில்லை வீட்டிலே வாழ்ந்து வந்தான். ஊருக்கு உழைப்பதில், ஊர் மக்களுக்காக ஓய்வின்றிப் பணியாற்றுவதில் அவனுக்குத் தனித்தோர் மகிழ்ச்சி. எந்நேரமும் அவ்வூரார் பலர் அவனைச் சூழ்ந்துகொண்டு உதவிகளைப் பெற்றுவந்தனர். ஏழை எளியோர்க்குத் தொண்டாற்றுவது - இருக்க இடமின்றித் தவிப்போருக்கு குடில் அமைப்பது - குடிநீர் இன்றி அலைவோருக்குக் குளம், கிணறு வெட்டுவது - இப்படி நண்பர்களின் துணையோடு அவன் நற்பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அவனது எளிய இல்லத்திற்கு எதிரே, ஏழடுக்கு மாளிகையொன்றுக்கான அடித்தளம் போடப்பட்டது. நச்சு நினைப்பினர் சிலர், அந்த மாளிகை வழித் துணையான் எழுப்புவதுதான் என்று ஊரெல்லாம் கொட்டி முழக்கினர். முதலில் ஊரிலும் சிலர் நம்பினர்; சிலர் ஐயம் கொண்டு வியப்புற்றனர். ஆனால், உண்மை சில நாட்களுக்கெல்லாம் வெளிவந்து விட்டது. வழிப்பறிக்காரன் ஒருவன், சேர்த்த பணத்தையெல்லாம் செலவழித்து அந்த மாளிகையை உருவாக்கியிருக்கிறான். அந்த வழிப்பறியாளன் மிகப்பெரும் விழா கொண்டாடி, அந்த மாளிகைக்குக் குடியேறிய பிறகுதான் வழித்துணையானின் முழுத் தூய்மையும் மக்களுக்குப் புரிந்தது.
ஆயினும் ஒரு சிலர், ஏழடுக்கு மாளிகையின் பெருமைக்கு ஆசைப்பட்டு வழித்துணையானை விட்டு நீங்கி, வழிப்பறியானன் வசம் தங்களை ஒப்படைத்துக் கொண்டனர். ஏராளமான செல்வம் - ஏழடுக்கு மாளிகை - இவற்றால் இயல்பாக ஏற்படும் செருக்குடன்; எதிர்த்த வீட்டு வழித்துணையானின் நண்பர்கள் சிலரையும் விலைபேசி வாங்கிவிட்ட ஆணவம் வேறு, வழிப்பறியானனின் வன்னெஞ்சத்தில் குடிகொண்டது. எத்தனையோ வித்தகர்கள் தன் முன்னே தாசர்களாகத் தான் பணிந்து நின்றிடத் தயாராக இருக்கும்போது, எதிர் வீட்டுக்காரன் தலை மட்டும் தனக்கு வணங்க மறுக்கிறதே என்ற சினம் கொப்பளித்தது! சீற்றம் பொங்கியது! எனவே வழித்துணையானைப் பற்றி வாயில் வந்ததையெல்லாம் பேசித் தூற்றினான். ஓரிருமுறை ஊரின் ஏரிக்கரையோரம் வழித்துணையான் உலவிடச் சென்றபோது, தனது ஆட்களை ஏவிவிட்டு அவனைத் தாக்கிடவும் செய்தான். வழிப்பறியானனின் வாயில்காப்போரில் இருந்து, அருகிருந்து அளவளாவிடும் நண்பர்கள் வரையில் வழித்துணையானைப் பற்றி வசைமாரி பொழிந்தவண்ணமிருந்தனர்.
அவற்றைக் குறித்து அவன் கவலைப்பட்டுக் கொள்ளவேயில்லை! அளவற்ற செல்வமிருக்கிறது - ஆள் அம்பு இருக்கிறது - அதனால் எல்லையற்ற செருக்கு கொண்டலைகிறான்! அவன் கொண்டுள்ள செருக்கே அவனைத் தண்டிக்குமென்று கூறிவிட்டு வழித்துணையான், தனது பணிகளைத் தொடர்ந்தான். இழிமொழிகள், சுடுசொற்கள், கடுந்தாக்குதல்கள், பழிசுமத்தும் பாடல்கள் - அனைத்துக்கும் பொறுமையெனும் கவசம்பூண்டு வழித்துணையான் நிமிர்ந்து நடந்தது கண்டு ஊரார் குமுறினர்!
அவன் காட்டிய பொறுமையே அவனுக்குக் கிடைத்த படைக்கலன் ஆயிற்று! அந்தப் பொறுமைக்குக் கிடைத்த பரிசாக, ஊரார் அனைவரும் வழித்துணையான் பக்கம் அணிவகுத்தனர். வழித்துணையான், அவர்களை அப்போதும் அமைதிப்படுத்தி அனுப்பிவிட்டு, ஆற்றில் கரையுடைத்தெழும் வெள்ளத்திற்கு அணைகட்ட விரைந்து சென்றுவிட்டான், ஆருயிர்த் தோழர்கள் சிலருடன்!
அப்போது மாளிகையின் முகப்பில் வந்து நின்று வழிப்பறியான் வாய் வலிக்கச் சிரித்துக்கொண்டே, “என்னடா! எல்லோரும் எதிர்வீட்டுக்காரனுக்கு எடுபிடிகளாக வந்தீர்களா?” என்று கேட்டதுதான் தாமதம், அமைதியாகத் திரும்பிக்கொண்டிருந்தோர் அரிமாக் கூட்டமாயினர்! பாய்ந்தனர் அந்தப் பளிங்கு மாளிகையின் மீது! இடிந்து தகர்ந்து தூள் தூளானது அந்த இறுமாப்புக்காரனின் அரண்மனை!
அதோ தொலைதூரத்தில் தன்னந்தனியாக ஓடிக்கொண்டிருக்கிறான் ஆணவங்கொண்ட அந்த ஆர்ப்பாட்டக்காரன்!
வழித்துணையானோ ஆற்று வெள்ளத்தைத் தடுத்துவிட்டு, ஊரார் நல் வாழ்த்துக்களுடனே இல்லம் நோக்கி வந்துகொண்டிருக்கிறான்.
இறுமாப்பினால் தீமைகளை விளைவிப்போரைத் தம்முடைய பொறுமையினால் வென்றுவிடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டுத்தான் வழித்துணையான் வரலாறு!
அதற்கு இதோ குறள்:
“மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல்.”
அதிகாரம் - 16 - பொறையுடைமை; பாடல் - 158
மிகுதி=செருக்கு மிக்கவை=தீயவை தகுதியால்=பொறுமைப் பண்பினால்
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்