பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 244 / 300

ஒளியார்முன் ஒள்ளிய

அச்சுப் பக்கம் 520521 · ஸ்கேன் 537538 · அதிகாரம் 72 (அவை அறிதல்) — குறள் 714

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

ஒரு குவளையில் பால் வைக்கப்பட்டிருக்கிறது. அதனருகே இன்னொரு குவளையிலும் பால் கொண்டுவந்து வைக்கப்படுகிறது. இரண்டு குவளைகளில் உள்ள பாலையும் சேர்த்து ஒரு குவளையில் ஊற்றி, அடுப்பில் வைத்துக் காய்ச்சி இறக்கிக் கற்கண்டுப் பொடி சேர்த்துக் கண்ணானுக்கும் கண்மணிகளாம் இரு குழந்தைகளுக்கும் அத்தைக்கும் மாமனாருக்கும் அவள் ஆற்றிக் கொடுத்திட வேண்டும். இரு குவளைகளில் உள்ள பாலையும் ஊற்றிக் சூடேற்ற அவள் ஒரு பெரிய குவளை எடுத்து வருகிறாள். குவளைகளில் உள்ள பால், ஒன்றையொன்று பார்த்துக் கொண்டு பரவசமடைகின்றன. பால், பாலோடு சேருவதால் ஏற்படும் மகிழ்ச்சி அது!

இந்த அடுக்கலையை விட்டுவிட்டு மற்றுமொரு வீட்டு அடுக்கலைக்குச் சென்று கவனிப்போம். முதலில் ஒரு குவளையில் பால் கொண்டுவந்து வைக்கப்படுகிறது. இல்லக்கிழத்தி, தனது குறும்புக்கார மகனிடம் கூறி இன்னொரு குவளைப்பாலைக் கொண்டுவந்து வைக்கச் சொல்லுகிறாள். அந்தக் குறும்புக்காரன் ஏதாவது சேட்டை செய்ய வேண்டுமென்று எண்ணி, ஒரு குவளையில் வெண்சுண்ணத்தைக் கரைத்துப் பாலைப்போலக் கொண்டுவந்து வைக்கிறான்.

இல்லக்கிழத்திக்குப் பால் எது - சுண்ணம் எது என்று தெரியவில்லை! இரண்டும் வெண்மையாக இருப்பதால், பாலும் சுண்ணமும் ஒன்று என்றே எண்ணி விடுகிறாள்!

சுண்ணம் இருக்கும் குவளையை எடுத்துப் பெரிய குவளையில் ஊற்றுகிறாள். பிறகு, பால் இருக்கும் குவளையையும் எடுத்துச் சுண்ணம் ஊற்றப் பட்ட குவளையிலேயே ஊற்றப் போகிறாள். அப்போது அந்தக் குவளையில் உள்ள பால் நினைத்துக்கொள்கிறது; “முதலில் ஊற்றப்பட்டது பால் அல்ல சுண்ணம்தான் என்று தெரிவித்தாலும் தெளிவு பெறவா போகிறாள்! இல்லை - இல்லவே இல்லை! அதனால் நாமும் சுண்ணம்போலவே இருந்துவிடுவோம்!” என்று!

ஒரு வீட்டில் பாலும் பாலும் கலந்து சூடேறிச் சுவையேறிப் பலரும் பருகி மகிழ்ந்திடுதல் கண்டோம்.

பிறிதொரு வீட்டில் சுண்ணத்தில் கலக்கப்பட்ட பாலும் சுண்ணம்போல் ஆகிவிட்டதைக் கண்டோம்.

நாம் கண்ட இந்தக் காட்சிகளைப் போலவே வள்ளுவரும் கண்டார் போலும்! அவர் முன்னால் பாலுக்குப் பதிலாகப் பகுத்தறிவு படைத்தவர்கள் தெரிந்தனர். சுண்ணாம்புக்குப் பதிலாக, அறிவாளிகளைப்போலத் தோன்றும் அறிவிலிகள் தெரிந்தனர்.

அவரது சிந்தனை சிறகடித்தது! அறிவாளிகளின் முன்னால் அறிவாளிகள், தங்கள் அறிவைப் பயன்படுத்தி விவாதிக்கவேண்டும். அறிவில்லாதவர்களின் முன்னால், அறிவாளிகள்கூட அறிவில்லாதவர்களைப்போல மௌனமாய் இருந்து விட வேண்டும். அவரது சிந்தனை ஈன்றெடுத்த கருத்துக் குழந்தை இதுதான்.

பாலுக்கு முன்னால் பால், பாலாகவே இருந்தது! இது ஒரு மனையில்!

சுண்ணாம்புக்கு முன்னால் பால், தன்னையும் சுண்ணாம்பாகப் பாவித்துக் கொண்டு சும்மா இருந்தது! இது வேறொரு மனையில்!

ஒள்ளியார் எனப்படும் ஒளியார் - அதாவது அறிவாளிகள்; அறிவாளிகளின் முன், அறிவாளிகளாய்த் திகழவேண்டும்! வெளியார் எனப்படும் அறிவிலிகளின் முன், வெண் சுண்ணம் என அறிவற்றவர் போலத் தம்மைக் காட்டிக் கொள்ளவேண்டும் என்று எழுதினார் குறள்!

அது இதோ:-

“ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல்.”

அதிகாரம் - 72 - அவை அறிதல்; பாடல் - 714

வான்=வெண்மைசுதை=சுண்ணாம்பு - ஒளியார்;ஒள்ளியார்=அறிவுடையார்

வெளியார் = அறிவில்லாதவர்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்