பொருளடக்கம் 243 / 300
உயிர்உடம்பின் நீக்கியார்
அச்சுப் பக்கம் 518–519 · ஸ்கேன் 535–536 · அதிகாரம் 33 (கொல்லாமை) — குறள் 330
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
இருபதாம் நூற்றாண்டு இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொலைச்செயலில் ஈடுபட்டவர்களை மரண தண்டனைக்கு ஆளாக்கலாமா; அல்லது அதற்குக் குறைவான தண்டனை வழங்கி அந்தக் கொலைகாரனைத் திருத்திடலாமா என்ற இருவகையான கருத்து, பல்லாண்டுக் காலமாகவே உலகத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்தக் காலத்தில் மரண தண்டனையைக்கூட சில நாடுகளில் மிகக் கொடூரமாக நிறைவேற்றுகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் கூடிடும் பொது இடங்களில் குற்றவாளிகளைச் சுட்டுத் தள்ளுகிறார்கள். சில நாடுகளில் தலையை வெட்டிச் சாய்த்துத் தண்டனையை நிறைவேற்றுகிறார்கள். கொலைக் குற்றமில்லாத வேறு சில கொடுங் குற்றங்களுக்குக்கூட மரண தண்டனையை நடைமுறைப்படுத்தும் நாடுகளும் உள்ளன.
பயிரைக் காத்திட களைகளைக் களைவதுபோல, சமுதாயத்தைக் காத்திட கொடியவரைக் கொலைத் தண்டனையால் ஒழித்திடும் பணி அரசனுடையது என்று வள்ளுவர், பொருட்பாலில் - அரசியலில் குறிப்பிடுகிறார்.
பொருட்பாலில் கொலைத்தண்டனையை அரசின் கடமைகளில் ஒன்று என எடுத்துக்காட்டுகிற வள்ளுவர், அறத்துப்பால் துறவறவியலில் கொலைத்தொழிலில் யாரும் ஈடுபடக்கூடாது என்பதை வலியுறுத்த எப்படி அச்சுறுத்துகிறார் என்பது கூர்ந்து நோக்கத்தக்கது.
கொலை செய்தல் எனும் வன்முறையை அறவே வெறுப்பவர் வள்ளுவர். எந்த ஓர் உயிரையும் கொல்லக்கூடாது என்பதில் அழுத்தமான கருத்துடையவர். கொடிய குற்றவாளிகளுக்குக் கொலைத்தண்டனை விதிப்பது கொற்றவனின் கடனாக இருக்கிறது என்ற நிலை விளக்கத்தோடு நிறுத்திக்கொள்ளவில்லை அவர்.
மரண தண்டனை தேவையா இல்லையா என்ற போராட்டம் அவர் மனத்தில் அப்போதே எழுந்திருக்கிறது. அதனால்தான் மன்னர்களின் கடமையைக் குறிப்பிடுகிற அவர், கொலைகள் நிகழாவண்ணம் தடுப்பதற்கென அச்சுறுத்தலையும் ஒரு குறள் மூலம் வழங்குகிறார்.
வறுமையில் ஆழ்ந்து வாடித்துடிக்கிறான் ஒருவன். எத்தனை நோய்கள் அவன் உடம்பை முற்றுகையிட்டு ஆட்டிப்படைக்கின்றன எனக் கூற இயலாது. நோய்களின் கிடங்காகவே அவன் உடல் விளங்குகிறது. அவனைக் காணவும் விரும்பாமல் உற்றார் உறவினர் ஒதுங்கிச் செல்கிற அளவுக்குத் தீய வாழ்க்கையில் நெளியும் புழுவாகக் கிடக்கிறான்.
அவனை வள்ளுவர் பார்க்கிறார். “இவனை உலகத்தாரிடம் காட்டுவதின் வாயிலாக, யாரும் கொலைத்தொழிலில் ஈடுபடாமல் தடுக்கலாம்” எனக் கருதுகிறார்!
“உலகீர் நான் உரைப்பது கேண்மின்! இதோ இல்லாமையில் உழன்று பொல்லாத நோய்களின் பொந்தாக உலவுகிறானே; இவன் யார் தெரியுமா? ஒரு காலத்தில் பல கொலைகளைச் செய்தவன்; அந்தக் கொடுஞ் செயலுக்குரிய தண்டனையைத் தான் இப்படி அனுபவிக்கிறான்.”
என்று அறிவிக்கிறார்! அவன் உண்மையிலே கொலை செய்தவனோ இல்லையோ; நமக்குத் தெரியாது! பிறகேன் வள்ளுவர் அப்படிச் சொல்லுகிறார்? கொலைசெய்தோர்; கொடுமை புரிந்தோர் அனைவரும் - தரித்திரர்களாய் - தாங்கொணா நோய் கொண்டவர்களாய் தவிக்கிறார்களா? மாறாகப் பலர் “குபேர”களாய் - குதூகலமாய் வாழவில்லையா?
ஆனால், இங்கே வள்ளுவர் விடுக்கும் எச்சரிக்கை; நல்ல உள்ளத்திலிருந்து புறப்படும் அறிவுரை! கொலை போன்ற கொடுஞ்செயல்களைத் தடுப்பிடும் அடிப்படையில் எழும் அச்சுறுத்தல்!
“கொலையெனும் கொடுஞ்செயலில் ஈடுபட்டால் வறுமை தாக்கிடும்; நோய்கள் சூழ்ந்திடும், என்று கூறுவதற்குப் பதிலாக -
“வறுமையிலும் நோயிலும் வாடுபவர்கள்; முன்பு கொலையை செய்து உயிர்களை உடல்களில் இருந்து நீக்கியவர் என அறிஞர்கள் கூறுவர்.”
என்று மிகத் திறமையுடன் மற்றவர்களைக் கொலை போன்ற கொடுஞ்செயல்களை நினைத்திடாவண்ணம் தடுத்திட முனைகிறார்.
அதற்கு இதோ குறள்:
“உயிருடம்பின் நீக்கியார் என்ப செயிருடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர்.”
அதிகாரம் - 33 - கொல்லாமை; பாடல் - 330
செயிர் = நோய்
செல்லா = வறுமையால் நலிவுற்ற
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்