பொருளடக்கம் 242 / 300
உரமொருவற்கு உள்ள
அச்சுப் பக்கம் 516–517 · ஸ்கேன் 533–534 · அதிகாரம் 60 (ஊக்கம் உடைமை) — குறள் 600
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
“உடையரென்பது ஊக்கம்” என்கிறார் வள்ளுவர்!
பார்வைக்கு எட்டியமட்டும் பரந்து கிடக்கும் நிலபுலங்கள் - தோட்டம் துறவு -
உச்சி வானத்தை முத்தமிடத் துடிப்பதுபோல் கலசம் வைத்துக் கட்டிய கோபுரம் போன்ற மாளிகை-
களஞ்சியத்தில் நெல்மணிகளுக்குப் பதிலாகப் பொற்காசுக் குவியல்கள்-
தங்கத் தகடு பொருத்திய சுவர்களில் எல்லாம் வண்ண வண்ணமாய்க் கண் சிமிட்டும் வைரங்கள் - முத்துக்கள் - பிற இரத்தினங்கள் -
வெள்ளிக் கம்பிகள் இணைத்த பலகணி வழியே சந்தனம், சவ்வாது, புனுகு முதலிய மணங்களைச் சுமந்து வீசுகின்ற தென்றல்-
அந்தத் தென்றலின் குறும்பால் அடிக்கடி நடமிடும் ஆரணங்கின் மேலாடை-
ஆரணங்கைத் தழுவியவாறு அவள் மடிமீது முடிவைத்து விழிமூடிக் கிடக்கும் சுகம்-
அந்தச் சுகத்தைப் பெருக்கிட மெல்ல அதிர்ந்திடும் யாழ் ஒலி - யாழினும் இனிய ஒலி-
ஒலி வந்த திசையை நோக்கினால், அவர்கள் இன்பத்தில் உதிர்த்த அன்பின் அமுதமாம் அழகு மழலை-
- இவ்வளவும் உடையவன்தான் அவன் எனினும்; ஊக்கமெனப்படுகிற மன எழுச்சியில்லையேல் - அவனை “உடையவன்” என்று கூறமுடியாது என்கிறார் வள்ளுவர்.
“ஊக்கமுடையவர்” என்றுதான் ஒருவரைச் சொல்லிப் பெருமைப்பட முடியுமே தவிர; அனைத்தையும் பெற்றிருந்தாலும் பயனில்லை என்பதே வள்ளுவரின் கருத்து.
மன எழுச்சியில்லாதவன் மனிதனே அல்ல என்று சினங்கொண்டு கூறுகிறார்.
வாழ்க்கை, என்றுமே வசந்தமாக இருப்பதில்லை: வறண்ட பாலைகளைக் கூடக் கடந்திட வேண்டியிருக்கும். புயல்களையும் பூகம்பங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும். எரிமலைகளை எதிர்த்து நிற்கவேண்டியிருக்கும். எதிர் நீச்சல் போடுவதே சிறந்த வாழ்க்கையாக ஆகிவிட்டிருக்கும். அப்போதெல்லாம் ஒருவனுக்குள்ள வலிமையென்பது, அவனிடமுள்ள மன எழுச்சியின் மிகுதியே ஆகும்!
அத்தகைய எழுச்சியற்றவன், மரமென அழைக்கப்படுவான் எனக் கூறும் வள்ளுவர், எவ்வளவு அழகாக அவனை எகடியம் செய்கிறார் பாருங்கள்!
“அந்த மன எழுச்சியில்லாத மரங்கள், வடிவத்தால் மக்களைப்போல இருப்பது வேறு விஷயம்!”
அதற்கு இதோ குறள்:
“உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார் மரமக்க ளாதலே வேறு.”
அதிகாரம் - 60 - ஊக்கம் உடைமை; பாடல் - 600
உள்ளவெறுக்கை = மன எழுச்சி அல்லது ஊக்க மிகுதி
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்