பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 241 / 300

கருமம் செயவொருவன்

அச்சுப் பக்கம் 514515 · ஸ்கேன் 531532 · அதிகாரம் 103 (குடி செயல்வகை) — குறள் 1021

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

புலிகள் ஆயிரம் சேர்ந்து உறுமுவதுபோல், புயல் காற்றில் அலையெழுப்பிக் கடல் கொந்தளித்துக் குமுறுகிறது! சுழன்றடிக்கும் சூறாவளியோ மரங்களைப் பெயர்த்துத் தலைகீழாக நட்டு விளையாடுகிறது! பலவாக்கும் வாட்களைக் கொண்டு முகத்துக்கெதிரே வீசுவதுபோல மின்னல் வெட்டுகிறது! வானக் கூரை இடிந்து விழுந்து பல திக்கிலும் சிதறுவதுபோல் இடி முழக்கம்! காலந்தாழ்ந்து வந்த கூலிக்காரனைக் கடின மனமுடைய முதலாளியின் கையால், சவுக்குக் கொண்டு தாக்குவதுபோல மழைச் சரங்கள்! இருட்டோ, இரக்கமற்றோன் இதயத்தைப்போல!

இந்தச் சூழலில் ஒருவன் தன்னந்தனியாக நடக்கிறான். கம்பளித்துணி போட்டு மூடிய ஒரு பொருள், அவன் கைகளில் அணைத்தபடியிருக்கிறது! அந்தத் துணிக்குள்ளிருந்து மெல்லிய குரலில் அழுகைச் சத்தம்! ஆம்; ஒரு சின்னஞ்சிறு குழந்தைதான் அது!

அந்த அரும்பை ஈன்றெடுத்த அன்னை, கண்ணை மூடிவிட்டாள்! தந்தையையும் இயற்கையின் வாய் விழுங்கிவிட்டது! அந்தக் குழந்தையின் அண்ணன் அவன்! அதைக்கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய இடத்திலே சேர்த்து விட்டால், அதைச் சீராட்டி வளர்க்க எத்தனையோ பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

“வசுதேவன்; தனக்கும் தேவகிக்கும் பிறந்த எட்டாவது குழந்தையை ஆயர்பாடியில் கொண்டுபோய் விட்டுவிட்டால், ஆயத்து எதுவுமின்றி அமோகமாக வளர்ந்திடும் என்பதற்காக நெடும்பயணமொன்றை நள்ளிரவில் மேற்கொண்டான்” என்று கண்ணன் கதையில் ஒரு நிகழ்ச்சி சித்திரிக்கப்படுமல்லவா; அதைப்போலத்தான் - தனது மழலைத் தம்பியை மார்போடு அணைத்து அந்தப் பயங்கர இருளில், பயணத்தை நடத்துகிறான்.

அவனுடன் தொடக்கத்தில் துணைக்கு வந்த சில பேர், மழைத் தூறலைக் கண்டதுமே வழியிலேயே திரும்பிவிட்டனர்!

“நாம் ஆருயிர் நண்பர்களடா! அன்புச் சகோதரர்களடா!” என்றெல்லாம் இனிக்கப்பேசி - அவனுடன் அடிப்படிக் களித்த தோழர்கள் எல்லாம் பாதிப் பயணத்திலேயே பலமான இடியோசை, மழை, புயல்காற்று - இவற்றினைக் கண்டு மிக வேகமாகத் திரும்பி ஓடிவிட்டனர்!

அவர்களை நினைக்க நினைக்க அவனுக்குச் சிரிப்பாக வந்தது! இன்பத்தை மட்டுமே சுவைக்கக் கற்றவர்கள், துன்பத்தைத் தொடவும் அஞ்சுகிறார்கள் என்றால் - இவர்களென்றைக்குமே யாருக்கும் உற்றவர்களல்லர் என்று அவனது உதடுகளும் முணுமுணுத்தன!

இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட வேதனையைவிட - இருக்கும்போது இனித்துக் கிடந்தவர்கள், இன்னல் வந்துற்றபோது முகம் சுளித்து விலகிவிட்ட வேதனைதான் அவனை மிகவும் வாட்டியது!

இருப்பினும் தனது கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றி, அந்தக் குழந்தையைப் பாதுகாத்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியைப் பெறுவதற்காக, அவன் இயற்கையின் தாக்குதலை எதிர்த்து வீரநடை போட்டான்; இறுதியில் வெற்றியும் பெற்றான்.

அந்தக் கடமை வீரனைப் பார்த்துத்தான், வள்ளுவர் இவ்வாறு பாராட்டுகிறார்:

“உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சி மேற்கொள்கிறானோ; அந்தப் பெருமைக்கு மேலாகப் பிறிதொரு பெருமையில்லை.”

அதற்கு இது குறள்:-

“கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல்.”

அதிகாரம் - 103 - குடி செயல்வகை; பாடல் - 1021

கைதூவேன் = சோர்வடைய மாட்டேன்.

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்