பொருளடக்கம் 240 / 300
கண்டுகேட்டு உண்டுயிர்த்து
அச்சுப் பக்கம் 512–513 · ஸ்கேன் 529–530 · அதிகாரம் 111 (புணர்ச்சி மகிழ்தல்) — குறள் 1101
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
வானத் தடாகத்தில் நீந்துகின்ற வெண்முகில் வாத்துக்களினிடையே... கருமுகில், தாமரையிலைகளை நீக்கிக்கொண்டு ஒளிமுகம் காட்டுகின்ற நிலவைக் கண்டேன். அந்த ஒளிச்சிதறல், வானின் அலைகளிலே விண்மீன்களாய்த் துள்ளி மின்னும் அழகைக் கண்டேன். எங்கிருந்தோ ஆயன் ஒலிக்கும் குழலின் இசையைக் கேட்டேன். யாழ் எடுத்து எவளோ ஒருத்தி எழில் மாடமிருந்து மீட்டினாள் போலும். தென்றலில் கலந்து அந்தத் தேனமுதம் என் செவிகளில் பாய்ந்தது. நின்று கேட்டவாறு அங்கிருந்து பின்னர் அகன்றேன். இல்லத்திலோ என் தாய், வெல்லத்தில் செய்திட்ட பண்டங்கள் போதாதென்று வாழை, மா, பலா எனும் முக்கனியைப் பக்குவமாய்ப் படைத்துண்ணச் செய்தாள். உண்டு மகிழ்ந்தேன்; உவகை கொண்டேன்; உலவிடச் சிறிது சோலையோரம் சென்றேன். முல்லையும் மல்லிகையும் பரப்பிய மணத்தில் மனதைப் பறிகொடுத்து மீண்டேன். நான் வளர்த்திடும் முயலின் பஞ்சு மேனியைத் தடவிப் பரவசமுற்றேன். என் முதுகில் அழுந்திய மயிலின் தோகையைத் தழுவியபோது, மென்மையின் சுகத்தை உணர்ந்தேன்.
ஆம் - கண்ணால் கண்ட இன்பம்! காதால் கேட்ட இன்பம்! மூக்கால் முகர்ந்த இன்பம்! நாவினிக்க உண்ட இன்பம்! மெய்தீண்டி உணர்ந்த இன்பம்! இவ்வாறு
ஐம்புலனும் தனித்தனியே அனுபவித்த இன்பத்தை ஒருசேர எங்கு காண்பேன் என ஏங்கிடும் உள்ளத்தோடு, ஏரிக்கரை மீது நடந்தேன். அடடா! அந்த இன்பத்தை என் சொல்வேன். ஐம்புலன்களுக்கும் தனித்தனியாகக் கிடைத்த இன்பமெல்லாம் ஒருங்குகொண்டு என்னை ஓடிவந்து தழுவிக்கொண்டது!
நீங்கினாலும் நெருங்கினாலும் என் நெஞ்சிலேயே பிரியாமல் நிலைத்திருக்கும் என் காதலியைக் காண்பதிலும் - அவள் அன்புமொழி கேட்பதிலும் - எனை மயக்கும் மணத்தில் ஆழ்வதிலும் - இதழ்த்தேனை உண்பதிலும் - ஈருடல் ஒருடலாய்ப் பின்னிப் பிணைந்து கிடப்பதிலும் - ஐம்புலன்களும் ஒருசேர அனுபவிக்கும் இன்பத்தை எப்படி நான் விவரிப்பேன்!
ஒளிபொருந்திய வளையணிந்தவளிடம், ஐம்புலன்களுக்குமேற்ற இன்பம் உள்ளது என்று வள்ளுவர் கூறியதில் அணுவளவு ஐயமுமில்லை!
“கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள”
அதிகாரம் - 111 - புணர்ச்சி மகிழ்தல்; பாடல் - 1101
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்