பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 239 / 300

செவிகைப்பச் சொற்பொறுக்கும்

அச்சுப் பக்கம் 510511 · ஸ்கேன் 527528 · அதிகாரம் 39 (இறைமாட்சி) — குறள் 389

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

வலிமைமிக்க படைகளுடைய மன்னன் ஒருவன் இருந்தான். தனது ஆளுகையின் கீழ் உள்ள மக்களை, வளமிக்க வாழ்வு உடையோராகத் திகழச் செய்ய வேண்டும் என்பதைச் சிந்தித்துச் செயல்படாமல், புதிய நாடுகளைத் தன் ஆட்சிக்கு அடிமைப்படுத்தித் தனது ஆதிக்கத்தின் எல்லைக்கோட்டை விரிவாக்கிக் கொள்வதிலேயே அவன், நேரத்தையும் நினைப்பையும் செலவிட்டான். ஒவ்வொரு முறையும் அவன் புதிய நாடுகளின்மீது படையெடுத்துச் சென்று போரிட்டு வென்று வருவதற்குள், அவன் நாட்டு மக்கள் ஆயிரக்கணக்கானோர் உயிர்ப்பலி ஆகவேண்டி இருந்தது; பலநாட்கள் பட்டினி கிடக்க வேண்டியிருந்தது. சுற்றிலும் பகைவர்களை வளர்த்துக்கொண்ட காரணத்தால், அவனது படையை வலிமையுள்ளதாக வைத்துக்கொள்ளக் கருவூலம் முழுவதையும் அந்தப் படைப்பெருக்கத்திற்கே செலவிட வேண்டியிருந்தது. நல்வாழ்வும் அமைதியான வாழ்வும் கிட்டாமல் மக்கள் அல்லற்பட்டுக்கொண்டிருந்தனர். பசியும் பிணியும் கூத்தாடத் தொடங்கி, நாட்டின் பல்வேறு பகுதிகள் வறுமைக் களங்களாக வாடிக் கிடந்தன.

அந்த நிலை பற்றி அணுவளவுக் கவலையும் கொள்ளாத வேந்தன், அவனது ஆட்சியின் மாட்சி குறித்து புலவர்கள் பாடிட வேண்டுமென்று விரும்பினான். பறை அறிவிக்கப்பட்டது. பாராளும் வேந்தனின் செங்கோல் திறன் குறித்து பாடிப் பரிசு பெறுவோர்க்கு முதல் பரிசாகப் பத்தாயிரம் பொற்காசு வழங்கப்படுமென்று அப்பறை முழங்கிற்று.

ஆட்சியின்பால் வெறுப்புக்கொண்ட இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் வறுமையில் வாடிய நடுத்தர வயது நண்பன் ஒருவனுக்குப் புலவர் வேடம் கட்டிவிட்டு, அந்த நண்பனிடம் பாட்டொன்றையும் எழுதிக்கொடுத்து, இதைப்போய் மன்னன் முன்னால் பாடிப் பத்தாயிரம் பொற்காசுகளைப் பெற்றிடுக என அனுப்பி வைத்தான். குறும்புக்கார இளைஞனின் சேட்டையைப் புரிந்துகொள்ளாத அந்த வறியோனும் பொற்காசின் மேற்கொண்ட ஆசையால், அவன் எழுதித் தந்ததை வாங்கிக் கொண்டு அரண்மனைக் கொலுமண்டபத்திற்குள், புலவர் போல நுழைந்து விட்டான்.

அவனைப் பார்த்து மணிமுடி தரித்தோன் கேட்டான்: “எனது ஆட்சி குறித்து என்ன கவிதை தீட்டி வந்திருக்கிறீர்” என்று! புலவர் வேடதாரி “ஆட்சி குறித்துத் தானே? இதோ சொல்கிறேன்! உமது ஆட்சி எப்படி இருக்கிறது தெரியுமா?” எனப் பதிலளித்தான்! மன்னன், ஆவல் மிகுந்திட “எப்படியிருக்கிறது?” என வினவினான்!

“கன்னா பின்னா மன்னா தென்னா”

எனச் சொல்லிப் புலவர் வேடதாரி நிறுத்திவிட்டான்!

புலவனைப் பாய்ந்தான், வேந்தன் சீற்றங்கொண்டு! வாளை உருவினான்! வேடதாரியின் தலையைக் குறிபார்த்து ஓங்கினான்! உடனே குறுக்கே பாய்ந்து அரசனைத் தடுத்து நிறுத்தினார், அரண்மனைப் புலவர்! இளைஞன், தனது நாட்டு நிலையை அந்தச் சொற்களின் வாயிலாக அறிவுறுத்தியிருப்பது உண்மைதான் எனினும், அது அரண்மனைப்புலவரும் உணர்ந்த ஒன்றுதான் எனினும், அந்த வேடதாரியாம் வறியவனைக் காப்பாற்றவே அவர் துடித்தார்!

“வேந்தே! அழகான பாடல்! அருமையான பாடல்! உம்மைப் போற்றிப் பரிசு பெற இதைவிட வேறு கவிதையைத் தேர்ந்தெடுக்க முடியாது!” என்றார் அரண்மனைப் புலவர்.

“அப்படியா?” என்று திகைத்தான் மன்னன்!

“ஆமாம்! ‘கன்னா’ என்றால் குந்திதேவியின் கன்னத்தில் வழியாகப் பிறந்த கர்ணனே; எனப்பொருள்! ‘பின்னா’ எனிலோ, அந்தக் கர்ணனுக்குப் பின் பிறந்த நேர்மையான நானா தர்மனே; என்று பொருள்! பிறகு... மன்னா; மன்னவனே! தென்னா; தென்புலத்தை ஆள்பவனே! என்று பொருள்-”

அரண்மனைப் புலவர் அளித்த விளக்கம் கேட்டு ஏமாளி மன்னன், புலவர் வேடத்தில் வந்தவனைக் கட்டித் தழுவி, முத்தாரத்தைக் கழுத்தில் சூட்டி, பொற்கிழியையும் கையில் கொடுத்து வழியனுப்பி வைத்து, மகிழ்ச்சியில் மூழ்கினான்.

இந்த இன்பச் செய்தியை அவன் தனது பட்டத்தரசியிடம் பகிர்ந்து கொண்டபோது உண்மை வெளிப்பட்டது. அரசியார், இலக்கியப்புலமை பெற்றவள்! அவள், அரண்மனைப் புலவர் அந்த வறியவனை மிகத் திறமையாகக் காப்பாற்றியிருப்பதைக் கூறிவிட்டாள்! மீண்டும் அரசன் வெகுண்டெழுந்தான்! அவனைத் தடுத்துப் பஞ்சணையில் வீழ்த்தி, அரசி சொன்னாள்: “மன்னவரே! உங்கள் போக்கினால், நாடு நிம்மதியாக இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்! சிறிது நிதானமாகச் சிந்தியுங்கள்! குறை கூறுவோர் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினால்கூட, அந்தச் சொற்கள் காதைக் குடையும் நிலையிலே பாய்ந்தால் கூட அதைப் பொறுத்துக்கொள்கிற பண்பு இருந்தால்தான், அந்த அரசனது குடை நிழலில் நாட்டு மக்கள் தங்கியிருப்பர்! இல்லையேல், நாடே நம் கையை விட்டுப் போய்விடும்” என்றாள்.

மன்னன் அமைதியாக இருந்தான். அரசி, இனிய குரலில் திருக்குறள் ஒன்றை இசைத்தாள். குரல் மட்டுமல்ல, குறளும் மன்னனைக் கவர்ந்தது!

“செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.”

அதிகாரம் - 39 - இறைமாட்சி; பாடல் - 389

கவிகை = குடை

கைப்ப = வெறுக்குமாறு

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்