பொருளடக்கம் 238 / 300
எந்தன்றி கொன்றார்க்கும்
அச்சுப் பக்கம் 507–509 · ஸ்கேன் 524–526 · அதிகாரம் 11 (செய்ந்நன்றி அறிதல்) — குறள் 110
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவர்கள் ஆண்டுகொண்டிருந்த காலம். பிற்காலப் பல்லவர்கள், நந்திவர்மனைப்போல தமிழின்பால் தணியாத வேட்கை கொண்டவர்கள். அவர்களில் ஒரு பல்லவன் ஆட்சியிலே படைத் தளபதிகளின் குழுவில் சோழநாட்டைச் சேர்ந்த அருளாளன் என்பானும் இருந்தான். அவனிடம் மன்னருக்குத் தனியன்பு உண்டு. தனது அமைச்சர்களிடமும் தளபதிகளிடமும் அடிக்கடி நாட்டுநிலை குறித்தும் அரசப் பொறுப்புகள் குறித்தும் பல்லவ மன்னர் விவாதித்து முடிவெடுப்பார் எனினும், அருளாளன் கருத்துக்கும் அவர் தனி மதிப்புக் கொடுத்து அவ்வண்ணம் செயலாற்றுகிற வழக்கம் கொண்டிருந்தார். துணைத்தளபதிகளின் பதவிகளில் சிலரை அமர்த்திப் படையின் வலிமையை மேலும் உறுதியாக்கிட வேண்டுமென்று ஒரு முடிவு மேற்கொள்ளப்பட்டது.
அந்தச் சில பதவிகளுக்கு வர, பலரும் போட்டியிட்டனர். அந்த நேரம் சோழத்தளபதி அருளாளன், பல்லவப்படை முகாம்களை நேரில் கண்டு ஒழுங்குபடுத்திவரச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தான்.
பரணியெனும் பாசறையைப் பார்வையிட்டபோது, அணிவகுத்து நின்ற வீரர்களில் ஒருவன் அருளாளனின் காலில் விழுந்து கண்ணீர் மல்க நின்றான். “என்னப்பா! என்ன வேண்டும்?” என இரக்கம் நிறைந்த இதயங்கொண்ட அருளாளன், கேட்டான்.
“நீண்ட நாட்களாகப் படையில் போர்வீரனாக இருக்கிறேன். துணைத் தளபதிப் பதவிகளில் ஒன்று எனக்குக் கிடைக்க, மன்னரிடம் தாங்கள்தான் பரிந்துரை செய்திடல் வேண்டும்; அதுவரையில் உமது பாதங்களை விடமாட்டேன்” என்று கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.
துணைத்தளபதிப் பொறுப்புக்குத் தகுதியும் ஆற்றலும் வாய்ந்தவர்கள் சிலர் பரணிப்பாசறையில் இருந்துங்கூட, அருளாளன் அவனுக்கு வாக்குறுதியளித்து விட்டுத் திரும்பினான்.
துணைத்தளபதிப் பொறுப்பென்றால் தகுதியும் உயர்ந்த ஊதியமும் அதிகம் கிடைக்கும்.
ஐந்தாறு துணைத் தளபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஒருவன், அருளாளனின் காலில் விழுந்தவன். இந்த நன்றியை என்றும் மறக்கமாட்டேன் என்று அவன் அருளாளனை மூன்று முறை சுற்றி வந்து காலில் விழுந்து வணக்கம் செலுத்தினான். துணைத்தளபதிக்குரிய உடைகளைத் தயாரித்துக் கொள்ளக்கூட அருளாளனே, தனது சொந்தப் பொறுப்பில் தொகை வழங்கி உதவினான். ஏதோ ஓர் அன்பு அவன்மீது அருளாளனுக்கு! அதனால் அந்த வீரனின் முகத்தை விகாரப்படுத்திக்கொண்டிருந்த துடைப்பம் போன்ற மீசையைக் கூட முடிதிருத்தும் தொழிலாளியைக் கொண்டு அழகுபடுத்தச் சொன்னான்.
“நீ இப்படிச் சிலருக்கு இரக்கம் காட்டி ஏமாந்து போனவனாயிற்றே! இவன் உனக்கும் எனக்கும் நாட்டுக்கும் நன்றியுடையவனாக இருப்பானா?” என்று பல்லவ மன்னர் கேட்டபோது, அருளாளன் உறுதியளித்தான், நிச்சயமாக இருப்பான் என்று!
நாட்கள் ஓடின! உடல்வலிவுடன் போராடி வெற்றிபெற முடியாமல், பல்லவ மன்னன் இயற்கை எய்திவிட்டார்!
அவர் கொலை செய்யப்பட்டதாகக் கதை கட்டி, அரண்மனையில் இருந்த சிலர் தங்களுக்குப் பிடிக்காத ஒருவரைப் பழிவாங்கத் திட்டமிட்டனர். அந்த நரிமனத்தினரின் நயவஞ்சகக் கண்கள் அருளாளன் மீதும் விழத் தவறவில்லை. மன்னரின் கொலைக்குக் காரணமாக இருந்தவன் அருளாளன் எனக்கூறி, பல்லவ நாட்டு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டினர். நோய்வாய்ப்பட்டு மறைந்த மன்னர், கொலை செய்யப்பட்டதாகப் புனையப்பட்ட அந்த வழக்கில் அருளாளன் இணைக்கப்பட்டதைக் கண்டு, பல்லவ பூமியே பதறியது!
“கொலைதான் என்பதற்கு என்ன சான்று?” - நீதிமன்றம் கேட்டது!
“இதோ சாட்சி! இறந்து போன மன்னரின் அருகில் கிடந்தது!”
வழக்காடிய வன்னெஞ்சன் இதுபோலப் பதில் கூறினான்.
“மன்னர் மேனியில் காயம் எதுமில்லையே!”
“காயமின்றிக் கழுத்து நெரிக்கப் பட்டிருக்கலாம்!”
“நெரித்தவர் யார்?”
“இதோ - இந்தத் தளபதி அருளாளன்தான்.”
சூழ்ச்சிக்காரர்கள் கூட்டிக்காட்டினர்.
“அருளாளன்தான் என்பதற்குச் சாட்சியம் யார்?”
நீதிதேவனின் இந்தக் கேள்விக்கு விடையளித்திட, “இதோ! நான்தான்!” என்று ஒருவன் மன்றத்தினூடே வந்து நின்றான். கூடியிருந்தோர் அனைவரும் பரபரப்புடன் நோக்கினர். அவன் வேறு யாருமல்ல; அருளாளனின் பரிந்துரையால் துணைத்தளபதியாக ஆக்கப்பட்டவன்தான்!
“அடப்பாவி! நீயா? அருளாளன் காலைத்தொட்டு வணங்கி வாழ்வுபெற்ற நீயா - இப்படித் துரோகியாக வந்து நிற்கிறாய்?”
மன்றத்திலிருந்தோர் உதடுகள் இவ்வாறு முணுமுணுத்தன! அவனோ நாணம் சிறிதுமின்றி நிமிர்ந்து நின்றுகொண்டிருந்தான்! தோற்றத்தில்தான்! ஆனால், உள்ளம் துவண்டு கிடந்தது!
“அருளாளா! உன் வயிறு எரிந்தால் அவன் உருப்படுவானா?”
என்று ஒரு பெரியவர் கொந்தளித்துக் கேட்டார்!
“எப்படியும் வாழலாம் என்று முடிவெடுத்து விட்டவன்! பாவம்; எப்படியோ வாழ்ந்துவிட்டுப் போகட்டும்!”
என்று பதில் அளித்தான் அருளாளன்! இறுதியில் நீதிவென்றது! அருளாளன் மீது பழிசுமத்தியோர், தலை தொங்கிப் போய்த் திரும்பினர்!
அவன் முகத்தில் விழிக்கவே முடியாத நிலையில் - அந்த நன்றி மறந்தோனும் மன்றம் விட்டு அகன்றான்.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.”
இந்தக் குறள் மொழி, இசைவழியாக எங்கிருந்தோ ஒலித்துக் கொண்டிருந்தது.
அதிகாரம் - 11 - செய்ந்நன்றி அறிதல்; பாடல் - 110
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்