பொருளடக்கம் 237 / 300
நாண்அகத் தில்லார்
அச்சுப் பக்கம் 505–506 · ஸ்கேன் 522–523 · அதிகாரம் 102 (நாணுடைமை) — குறள் 1020
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
கல்லாத ஒருவனைக் ‘கற்றறி கோவே!’ எனப் புகழ்ந்தான்! பொல்லாத செயல்களின் உருவத்தைப் ‘புனிதச் சுடரே!’ எனப் போற்றினான்! பழிவாங்கும் இயல்புடைய மனத்தானைப் ‘பண்புப் பெட்டகமே!’ எனப் பாமாலை தொடுத்தான். கொள்கை, குறிக்கோள் எதுவுமற்ற கோணல்மதி கொண்டவனைக் ‘கொள்கைக் குன்றமே!’ எனத் தொழுதான்!
இந்தப் புகழாரங்களையெல்லாம் அவன் கட்டிமுடித்து பகைநாட்டு வேந்தனின் காலில் சூட்டியபோது இதழ்கள் சிரித்து நடித்தன! இதயமோ அழுதுகொண்டிருந்தது. மனச்சாட்சியின் மறுப்புக் கணைகளை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை! இருப்பினும் அரண்மனைக் கொலுமண்டபத்தில் அமருவதற்கேற்ற ஒரு பதவி, எப்படியும் பெற்றிட வேண்டுமென்பதற்காக அவன், தனக்குற்ற இழிநிலையை மறந்திட முனைந்தான்.
கற்றவன்! திறமை படைத்தவன்! அறிவைப் பயன்படுத்தி அருஞ்செயல்கள் புரியக்கூடிய ஆற்றல் கொண்டவன்! அவன் தளபதியாக இருந்து நடத்திய போரில், பகைவர்களிடம் தோற்றிடவேண்டிய நிலை! முழுமையான தோல்வி ஏற்பட்டு, களத்தில் மாண்டிடவோ - சிறையில் அடைபடவோ விரும்பாமல் பகைமன்னனிடம் சரணடைந்தான்.
அவனைத் தளபதியாகப் பெற்றிருந்த மன்னனோ, அதிர்ச்சிகொண்டான். எனினும் உறுதியும் நன்றியுணர்வும் நாட்டுப்பற்றுமிக்க தளபதிகளையும் வீரர்களையும் பெற்றிருந்த காரணத்தால் போரைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தான்.
இதற்கிடையே பதவி கிடைக்காது பகைமன்னன் காலடியில் கிடந்த தளபதிக்கு, நல்லாய்ப்பாக ஒரு சிறு பதவி வந்து சேர்ந்தது.
வாழ்த்து! வணக்கம்! வண்ண வண்ணத் தமிழில் பாராட்டுரைகள்! பதவி தந்த பகைவேந்தனைத் தெய்வத்துடனே ஒப்பிட்டுப் பேசலானான்.
அவன் போக்கினை, அவன் துணைவியும் அவன் மகனுமே கண்டித்தனர். பகைமன்னன் அரண்மனையில் பதவி பெற்று, கொடியவனைக் கோமானென்றும் பூமானென்றும் கொட்டி முழக்கிக் கொண்டிருப்பதைவிட, நமது மன்னருடன் இணைந்திருந்து போர்முனையில் விழுப்புண் ஏற்பது எவ்வளவோ பெருமை என்று இடித்துரைத்தனர்.
ஊரார் - உற்றார் - தோழர்கள் - பகை மன்னன் கொலுவில் இருந்தோர் - அனைவருமே அவனை மதித்திடத் தயாராக இல்லை.
ஒருநாள் அவன், தலையைத் தொங்கப்போட்டவாறு இல்லத்தில் நுழைந்தான். முகவாட்டத்திற்குத் துணைவி, காரணம் கேட்டாள்! “பதவி பெரிதென எண்ணினேனே! ஆனால், பலரும் என்னைப்பற்றி நேரிலும் மறைவிலும் பேசுவதைக் கேட்க வெட்கமாக இருக்கிறது” என்றான் கண் கலங்கிட!
அப்போது அவனது மகன், மரத்தினால் செய்யப்பட்ட ஒரு பாவையைக் கயிறுகொண்டு ஆட்டியவாறு அங்கே வந்தான்.
“என்னடா இது, மரப்பாவை?” என்றாள் தாய்!
“அம்மா! இதற்கு உயிர் உண்டு! இதோ பார்!”
எனக் கயிற்றைப் பிடித்து ஆட்டிக்காட்டினான். மனைவியும் மகனும் செய்திட்ட கேலியை அவன் புரிந்து கொண்டான்.
“மனத்தில் வெட்கமில்லாதவர்கள் உலகில் இயங்குவது; மரத்தினால் செய்யப்பட்ட பாவையைக் கயிறுகொண்டு கட்டி உயிர் உள்ளதெனக் கூறி மயக்குவதைப் போன்றது.”
இப்படியொரு குறளை வள்ளுவர் தீட்டியிருக்கிறார். அதைத்தான் நாணமற்ற தனது செய்கைக்கு ஒப்பிட்டுக் காட்டுகிறார்கள் தனது மனைவியும் மகனுமெனப் புரிந்துகொண்டான்; மனம் புழுங்கிப் போனான்.
“நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி யற்று.”
அதிகாரம் - 102 - நாணுடைமை; பாடல் - 1020
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்