பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 236 / 300

இனித்தக்க இன்னா

அச்சுப் பக்கம் 503504 · ஸ்கேன் 520521 · அதிகாரம் 129 (புணர்ச்சி விதும்பல்) — குறள் 1288

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

வழிமேல் விழிபோட்டுக் காத்திருந்த வஞ்சிக்கொடியின் முன்னால் அவன் வந்து நின்றான். அருகில் யார் இருக்கின்றார் என்ற அச்சம்கூடச் சிறிதுமின்றி அவள் அழகிய கண்கள், அவன் முகத்தின்மீது மேயத் தொடங்கின.

வீட்டிலிருந்தோர் விலகிக் கொண்டனர்.

“பிரிவு, என் நெஞ்சைத் துளைத்தெடுத்துவிட்டது கண்மணி” என்றான்.

“என் நெஞ்சுக்கு என்ன நேர்ந்ததோ எனக்குத் தெரியாது! காரணம்; அது, நீ என்னைப் பிரிந்து சென்றபோது உன்னுடனேயே வந்துவிட்டது” என்றாள் அவள்.

கரங்களை நீட்டிக் கார் குழலாளைக் கட்டியணைத்தான்! அவளோ, தன் தலையை அவனது மார்பினில் அழுந்தப் புதைத்துக்கொண்டு ஆனந்த சுகம் கண்டாள்.

உச்சந்தலையில் உதிர்த்தான் முத்தங்களை! அவளோ அவன் மார்பில் மழையாகப் பொழிந்தாள் முத்தங்களை! “ஏனடி தங்கம்! உன் தேனிதழ்கள், திரும்பிப் பார்க்க மறுக்கின்றன என் உதடுகளை?” எனப் புன்னகையரும்பிட வினவினான்!

“அத்தான்! அதற்கென்ன அதற்குள் அவசரம்! இரவு முழுவதும் ஈரத்தால் நனைந்திடத்தான் நான்கிதழ்கள் நாளெல்லாம் தவம் கிடக்கின்றனவே; கிடக்கட்டும்!

வரம் அளிப்போம் பின்னர், நமது வாய்முகப்பின் கரும்புக் கதவுகட்கு! இப்போதென்னை உந்தன் மார்பில் இறுகப் போர்த்திக் கொள்க! என் கன்னங்கள் சுவையேற்றும்!”

அவன் நெஞ்சுப் பஞ்சணையில், அவள் முகத்தைப் படுக்கவைத்து மெய்மறந்தான்!

“மார்பகத்தால் என்னைப் புண்மாற்றிப் போட்டவளே! கண்ணொளியால் என்னைக் கவர்ந்துகொண்ட பொன்மணியே! என் மார்பில் சாய்வதில்தான் உனக்கேனிந்த மயக்கம் மானே?”

தழுதழுத்த குரலில் கேட்டான், இன்ப மயக்கத்தில் தள்ளாடிக்கொண்டு!

அவள் சொல்லுகிறாள்:

“என்னைக் கொள்ளைகொண்ட கள்வனே! கள்ளுண்டவர்களைக் கண்டிருக்கிறாய் அல்லவா? அவர்கள் அந்த மயக்கத்தில் இழிவு தரத்தக்க செயல்கள்கூடப் புரிந்திடுவர். கள்ளுக்கு அடிமையாகித் துன்பங்களையும் ஏற்றுக்கொண்டு பிறர் தூற்றுதலுக்கும் கூட ஆளாகிவிடுவர். ஆனாலும் அவர்கள் அந்தக் கள்ளையுண்டு களித்த நிலையில், மேலும் மேலும் அந்தக் கள்ளையே அருந்திட விரும்புவர்! தன்னையுண்டு மயங்கியோர் மென்மேலும் தன்னையே விரும்புமாறு செய்கிற கள்ளைப் போன்றது கள்வா, உன் மார்பு! அதனால்தான் நான் உன் மார்பில் முகம் புதைத்திடும் சுகத்தைத் திரும்பத் திரும்ப விரும்புகிறேன்.”

அவளின் இந்த விளக்கத்திற்குப் பிறகு பேச்சுக்கே இடமில்லை!

“இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு.”

அதிகாரம் - 129 - புணர்ச்சி விதும்பல்; பாடல் - 1288

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்