பொருளடக்கம் 235 / 300
வெருவந்த செய் தொழுகும்
அச்சுப் பக்கம் 501–502 · ஸ்கேன் 518–519 · அதிகாரம் 57 (வெருவந்தசெய்யாமை) — குறள் 563
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
கொலைகள் அன்றாட நிகழ்ச்சிகளாகி விட்டன. கொள்ளையும் களவும் பொழுது போக்குகளாகிவிட்டன. இப்படியொரு நாடு! அங்கே ஆள்பவர்களின் கூட்டத்தாரே அநீதிக்குக் கோபுரம் கட்டி, வன்முறைக் கலசங்களுக்கு நாள் தோறும் குடமுழுக்குவிழாநடத்தி வந்தனர். கொலைக்கும் கொள்ளைக்கும் பலியானவர்கள் போக, மிச்சமிருந்த குடிமக்களோ கோலோச்சியவர்களின் கொடுமைக் கரங்களால் வேளைதோறும் சீரழிக்கப்பட்டு வந்தனர்! அவர்களை வறுமை தாக்கிற்று! ஏழ்மையில் உழன்று தவித்தனர்! அந்த நிலையிலும் வரியைப் பிழிந்தெடுக்க ஆளும் கணத்தார் வறிந்து கட்டிக்கொண்டு, அந்த மக்களை வளைத்தனர்! வாட்டினர்! சாவு ஒன்றே அந்த ஏழை எளியோர்க்கு இன்பம் தரவல்லதாகத் தோன்றியது. அல்லலுக்கு ஆட்பட்டோர் அலறிப் பயனில்லை; அந்தக் கூக்குரல் ஆளவந்தவர்களின் காதில் விழுந்திட வாய்ப்பில்லை. அவர்கள் சுவைத்ததெல்லாம், தங்களைச் சுற்றி நின்று காமக்கணை தொடுத்துக் கொண்டிருந்த இன்ப வல்லிகளின் இசையைத்தான்! கூத்தில் ஒலிக்கும் சதங்கை ஒலியைத்தான்! ஏன் என்று கேட்டோர் நசுக்கப்பட்டனர்! ஆகுமா இந்த அநியாயம் என அறிவுரை புகன்றோர், அழிவுப் பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டனர்! எச்சக்கும் இழிவான பேச்சுக்கும் ஓர் எல்லையே இல்லாமல் போயிற்று! இல்லாமையால் கதறும் மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுக்க எவர் வரினும், அவரைத்
தமது ஆதிக்கக் கொழுப்புக்கு இரையாகிக் கொள்ளவே, அரசுக் கட்டிலில் வீற்றிருந்தோர் திட்டங்களைத் தீட்டினர்.
ஆனால், எத்தனை நாட்களுக்குத்தான் ஆமைகளாகவும் ஊமைகளாகவும் மக்கள் அடங்கிக் கிடப்பார்? புழுக்களும் புலிகளாகுமன்றோ புரட்சிப்புயல் கிளர்ந்தெழுந்தால்!
இறுதியாக, அதுதான் நடந்தது அந்த நாட்டில்! நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருப்பதைவிட ஒரேயடியாகச் செத்துவிடலாமென்று தங்கள் கரங்களைப் போர்வாட்களாகவும் நெஞ்சுப் பலகைகளைக் கேடயங்களாகவும் ஆக்கிக்கொண்டு, ஆதிக்க வெறியர்களின் அரண்மனையில் படையெடுத்தனர், பசியால் துடித்தோர்! பழிவாங்கும் போக்கினால் பதைத்தோர்!
வெற்றித் திருமகள் அந்த ‘நிராயுதபாணி’களின் கழுத்தில்தான் மாலை சூட்டினாள்! ஆயுதம் தாங்கியோர் - ஆதிக்க வேங்கைகள் - அரண்மனையை விட்டு எங்கேயோ ஓடி எப்படியோ உயிர் தப்பிப் பிழைத்தனர்; இனி நாடமாட்டோம் இந்த நாச முறையை, என மன்னிப்புக் கேட்டு மண்டியுமிட்டனர். அந்த வெறியர்களின் கொடுமைகள் புதைக்கப்பட்ட கல்லறையின் மீது, உழைப்போரின் நாடு உதயமாயிற்று, கதிரொளியைப் பரப்பியவாறு!
உலகில் இப்படித் தோன்றிய நாடுகளின் பட்டியல் நீளும்!
இப்படித் தோன்றிடக் கூடும் என்பதை வள்ளுவர், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே எழுதி வைத்திருக்கிறாரே!
“வெருவந்த செய்தொழுகும் வெங்கோ லாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும்”
அதிகாரம் - 57 - வெருவந்தசெய்யாமை; பாடல் - 563
வெருவந்த = அஞ்சிட தக்கது ஒருவந்தம் = உறுதியாக ஒல்லை = விரைவில்
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்