பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 234 / 300

கூற்றம் குதித்தலும்

அச்சுப் பக்கம் 499500 · ஸ்கேன் 516517 · அதிகாரம் 27 (தவம்) — குறள் 269

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

இந்த நூற்றாண்டின் காந்திய வழித்தோன்றல் வினோபா எனில், இரு கருத்துக்கு இடமேயில்லை. அவரது கருத்துக்களில் வேறுபாடு கொண்டோர் பலர் உண்டெனினும் அவரது உள்ள உறுதிக்கு, அவரெல்லாம் மதிப்பளிக்கவே செய்வர். சமுதாயத்தைச் சூழ்ந்துள்ள இருள் அகற்ற, அவர் கைகளில் ஏந்தியது அகல் விளக்குதான் எனினும் அவரது உள்ளத்தின் உறுதியொளியை உலகு தொழுது எனலாம்.

ஓய்வின்றி மக்களுக்காக உழைத்துக்கொண்டேயிருந்த அந்த முதியவரை, மாரடைப்பு நோய், திடீரெனத் தாக்கியது. சற்று நலம் பெற்றார் எனினும் இனி உடல் பலம் பெற்று உழைத்திட இயலாது என்பதை உணர்ந்து கொண்டார். அதனால் நடைப்பிண வாழ்வை வெறுத்திட்டார். சிறந்த மருந்துகள் அருந்துக என்றும் மருத்துவ மேதைகளின் சிகிச்சைகளை ஏற்றிடுக என்றும் அவரது மாணவ மணிகளும் உற்றார் உறவினரும் ஏன்; நாடாள்பவர்களுங்கூட மனமுருகி வேண்டினர்.

அவரோ, மெல்ல மெல்லத் தன் உயிரை விழுங்கும் சாவுக்கே இடமளிப்பேன் எனக் கூறிவிட்டார். பால்பொழியும் பசுவொன்றை வாயில் கொளவிக் கொண்ட மலைப்பாம்பு, அதனைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குதல் போல், அந்த உறுதி மிக்க

உத்தமரைச் சாவு விழுங்கத் தொடங்கியது. பிழைத்தும் பயனில்லை என அறிந்த அக்கிழவர், புன்னகை பூத்த முகத்துடனே சாவின் வயிற்றுக்குள் நடந்திட்டார்! பாம்புவாய்ப் பசுக்கூடத் தப்பித்து வெளி வரத்தான் துடித்திடும்! வீரமுனிவர் வினோபாவோ, மருந்துகள் எதையும் தொடேன் என மறுத்துவிட்டு மரணத்தை வரவேற்றார்.

சாவு அவரை வென்றதா? அல்லது சாவை அவர் வென்றாரா? என்ற கேள்விக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவப் பெருந்தகை விளக்கமளித்துள்ளார்.

அந்தக்குறள் இதோ:

“கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு”

நோன்பிருந்து உறுதியொளியினைப் பெற்ற ஆற்றலுடையவர்கள், சாவைக் கண்டு அஞ்சாமல் அதனை வெற்றி காண்பார்கள், என்பது இந்தக்குறளின் பொருள்!

அதிகாரம் - 27 - தவம்; பாடல் - 269

கூற்றம் = சாவு

குதித்தல் = வெல்லுதல்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்