பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 233 / 300

துன்பம் உறவரினும்

அச்சுப் பக்கம் 496498 · ஸ்கேன் 513515 · அதிகாரம் 67 (வினைத்திட்பம்) — குறள் 669

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

கற்கள் அவன் காலைக்குத்தின! இரத்தினங்கள் பதித்தவை போல் இரு பாதங்களும் காட்சி தந்தன! கோடை வெயில் கொளுத்திற்று- குடை பிடிக்க வழியில் ஒரு மரமும் தயாராக இல்லை! தலை வெடித்தாலும் பரவாயில்லையென்று கால்களை முடுக்கி விட்டான்; கடும்பயணத்தை நிறுத்தாமல்! நாக்கைச் சுருட்டியது தாகம்- பாக்கை வெட்டும் கருவிபோலப் பசி, குடலை வெட்டியது! இன்னும் பாதித் தொலைவு இருக்கிறது இன்னலை வென்று நடந்திடுக என்று இதயத்தில் வேண்டுகோள் பிறந்தது-

அந்தியும் வந்தது, அக்கினிப்பகல் நீங்கி! மந்தியாம் இருட்டும் வேகமாய் வந்து குந்திக்கொண்டது! கோட்டான் கீதம் - கொடும்புலி உறுமல் காட்டானைப் பிளிறல் - நரிகளின் ஊளை! வழக்கமாய் நடக்கும் வனமகோற்சவம் அது! பார்த்தும் கேட்டும் பழக்கமில்லாதவன் பயந்தே மடிவான்! இவனோ; காப்பப்படையில் ஊறியபோதே அச்சம் என்பதைத் தவிர்த்த மறவன் அதனால் நடந்தான் - நடந்தான் - நடந்துகொண்டே இருந்தான்! பாம்பொன்று சுற்றியது காலில்- பசலைக்கொடி போல எடுத்துப் போட்டுப் பாதை மாறாமல் பார்த்தபடி பாழ் காட்டில் பயணம் செய்தான்! தூற்றலும் போட்டது வானம்- கூற்றமாய்ச் சிரித்தது மின்னல்- மூட்டமாய்ச் சேர்ந்த முகில்கள் முழங்கின இடிகளாய்ப் பின்னே! வரவேற்பையேற்று வந்தன மழையும் புயலும்! வாடவுமில்லை - வருந்தவுமில்லை அவன் வழியில், வைத்த விழி தவறவுமில்லை! நடந்தான் - நடந்தான் - நடந்துகொண்டே இருந்தான்! நஞ்செனத் தோன்றிய துன்பங்கள் அனைத்தும் பஞ்செனப் பறந்தன - பயணமும் முடிந்தது!... நாடிய இலட்சியக் காதலி காத்திருந்தாள் - பிறர் கோடியைக் கொட்டினும் தொடாமலே

குடிசையில் ஒண்டி அவனைப் பார்த்திருந்தாள்! வந்தவன் அவளை வாரி அணைத்தான் - அந்த நந்தவன மலரும், வண்டின் முத்தம் மொண்டு குடித்தாள்! இதனைத்தான் வள்ளுவ அறிஞன் துணிவுடன் துன்பத்தைக் கடந்தால் பணிவுடன் இன்பம் வந்து கைகட்டி நிற்குமென்றான்.

“துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை.”

அதிகாரம் - 67 - வினைத்திட்பம்; பாடல் - 669

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்