பொருளடக்கம் 232 / 300
உள்ளத்தார் காதலர்
அச்சுப் பக்கம் 494–495 · ஸ்கேன் 511–512 · அதிகாரம் 125 (நெஞ்சொடு கிளத்தல்) — குறள் 1249
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
எந்திழை, தூரிகை கொண்டு எழுதாத ஓவியம்! எழுதுகோல் படைத்திடாத காவியம்! சில நாழிகைச் சுகத்தில், அவள் பெற்றோர் வடித்தெடுத்து பத்துத் திங்கள் மெருகேற்றி, இருபது ஆண்டுகளாய் இயற்கைப் பொலிவேற்றி நடமாட விட்டுள்ள பொற்றாமரை! வாகான வடிவும் தேன்பாகான மொழியும் அவளைத் துணைவியாய் அடைந்தவனுக்குத் தொடர் இன்பமாய்ப் பொழியும்! அவ்வாறே அடைந்திட்டான் அவளை ஆடற்கோ எனும் ஆணழகன்! முடைந்திட்ட ஓலைகள் போல் முழுநாளும் இணைந்திருந்தார்! ஒருநாள் வந்து தொலைந்தது பிரிவு எனும் பெரும்புயல்! “சில நாள்தான், சென்று வருகிறேன் என் செல்வமே!” என்று, அந்நாள்வரை அவள் சிந்தாத கண்ணீரைச் சிந்தச் செய்து அவன் பயணப்பட்டான், வெளியூர் நோக்கி!
அவன் அன்புப் பணியில் அன்றாடம் நனைந்து பூத்துக் குலுங்கும் அந்த மலர், தனிமையில் வாடியது! வழி நோக்கி விழி தேயியது! அருவியின் ஓரம் நின்று அவனைக் கண்டிட அலைந்தது உள்ளம்! ஆற்றங்கரையில் சென்று, அவன் எங்குளான் என ஏங்கினாள் எந்திழை! அப்போது ஆட்டுக்குட்டியொன்றைத் தோளில் போட்டுக்கொண்டு ஆயர்குல இளைஞன் ஒருவன், அங்குமிங்கும் பரபரப்புடன் ஓடியவன், அவளைக் கண்டவுடன் “அக்காள்! அக்காள்! அலையாய் அலைகிறேன், என்
ஆட்டுக்குட்டியைக் காணவில்லை! தேடித் தவிக்கிறேன்! நீ கண்டாயா?” எனக் கேட்டான்!
துன்பத்திலும் எந்திழைக்குச் சிரிப்புத் தாங்கவில்லை!
“ஏடா தம்பி, ஆட்டுக்குட்டியை உன் தோளிலேயே போட்டுக்கொண்டு தேடுகிறாயே!” எனக் கேலி செய்தாள்.
இளைஞன், நினைவு வந்தவனாக, “அடேடே! ஆமாம்!” என்று கூறிவிட்டு அவளுக்கு நன்றி சொல்லிச் சென்றுவிட்டான்.
எந்திழையின் தோழியொருத்தி, அவளைக் குறும்பு செய்வதற்கென்றே திட்டமிட்டபடி அங்கு வந்தாள்! “எங்கேடி இந்தப்பக்கம்?” என்றாள் எந்திழை! “ஒன்றுமில்லையடி! எனக்கு அவசரமாக நெய் வேண்டும்; அதற்காக ஆயர்பாடிக்குப் புறப்பட்டேன்” என்றாள் தோழி!
“கையில் என்ன வைத்திருக்கிறாய் குடுவையில்?” என்று அவளைப்பார்த்து எந்திழை கேட்டாள்!
“வெண்ணெய்” என்றாள் தோழி.
“ஓர் இளைஞன் இப்போதுதான் ஆட்டுக்குட்டியைத் தோளில் போட்டுக் கொண்டு தேடினான்! நீயோ கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறாய்! நல்ல வேடிக்கைகள்!” என்று எந்திழை சிரித்துக்கொண்டே இருந்தாள்.
“சரி, சரி! சிரிப்பை நிறுத்து! நீ மட்டும் என்னவாம்? உன்காதலனை உன் உள்ளத்திலேயே வைத்துக்கொண்டு, அவனை வேறு எங்கேயோ எவிடமோ தேடிச் செல்கிறாயே! அதை உனக்கு உணர்த்திடத்தான், ஆட்டுக்குட்டி தேடும் இளைஞனை அனுப்பினேன்! பிறகு நானே இங்கு வந்தேன்! நான் மாத்திரம் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது வேடிக்கை; அந்த இளைஞன் தோளில் ஆட்டைப் போட்டுக்கொண்டு அதைத் தேடுவது மாத்திரம் வேடிக்கை; நீ காதலனை நெஞ்சில் வைத்துக்கொண்டு, அவனைத் தேடியலைவது மாத்திரம் வேடிக்கை இல்லையாகும்?”
எந்திழை, தோழியின் குறும்பில் பொதிந்து கிடக்கும் உண்மையைப் புரிந்துகொண்டு, நாணத்தால் முகம் சிவந்தாள்.
“உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ யாருழைச் சேறியென் நெஞ்சு”
அதிகாரம் - 125 - நெஞ்சொடு கிளத்தல்; பாடல் - 1249
உழை = இடம்
சேறி = செல்கின்றாய்
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்