பொருளடக்கம் 231 / 300
ஊழி பெயரினும்
அச்சுப் பக்கம் 492–493 · ஸ்கேன் 509–510 · அதிகாரம் 99 (சான்றாண்மை) — குறள் 989
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
நீலவானும் நெடுந்திரைக் கடலும் இரண்டறக் கலந்து ஒன்றாகி விட்டனவோ? வான் நிறமும் கடல் வண்ணமும் இருளைத் தோற்கடிக்கும் கரு வண்ணம் கொண்ட கொடுமைதான் என்னே! வான் வீசுகின்ற மழைச் சரங்களை கடலின் அலைகள், எத்துணை உயரம் எழும்பி எதிர்கொண்டு தாக்குகின்றன! புயலா? சூறாவளியா? தென்னைமரங்களும் பனைமரங்களும் தெருவில் கிளம்பும் தூசி களைப் போலப் பறக்கின்றனவே! ஆலமரங்களைப் பூச்செண்டுகளைப்போலக் காற்றின் கரங்கள், எத்தனை கல் தொலைவு தூக்கி எறிகின்றன! அடடா! அதோ, அழகு நகரங்களின் மணிமாடங்கள், கூடங்கள் எல்லாமே அழிகின்றன.
“இவ்வளவு பெரிய அழிவா?” என்று நிலமகள் ஆச்சரியத்துடன் வாயைப் பிளக்கிறாள். அவளது அகண்ட வாய்க்குள்ளே நாடுகளும் காடுகளும் விழுகின்றன. அதைத் தாங்கமுடியாமல் அவள் வயிறு பாளம் பாளமாக வெடிக்கிறது. வலி தாங்காது துடிக்கிறாள். அந்தத் துடிப்பில் வையகமே துடிக்கிறது. அதுதான் பூகம்பம்! பூகம்பம், தான் உண்டு செரிக்க ஏற்பட்ட எரிமலைகளாகக் குமுறுகிறது. “நான் எரிப்பேன்” என்று நெருப்புக் குழம்பை ஆறுகளாகப் பெருக்கிவிடும் எரிமலைகளும்;
“நான் அணைப்பேன்” என்று பொங்கிக் கொந்தளித்துவரும் கடல் அலைகளும் ஒரே காரியத்தைத்தான் செய்கின்றன!
இயற்கையின் இந்தப் பயங்கரக்கூத்து அன்றாடம் இல்லாவிட்டாலும் எப்பொழுதாவது நடைபெற்றுத்தான் செய்கிறது. ஊர்கள் அழிக்கப்படலாம் - நாடுகள் நாசமுறலாம் - ஏன்; உலகமே கடலால் பந்தாடப்பட்டு - கடும் புயல் சூறாவளியால் சுக்கி எறியப்பட்டு - நிலநடுக்கங்களால் நிலை குலைந்திட்டு - அழிவுக்குழ் அலங்கோல உருண்டையாக எறிந்துகொண்டிருக்கலாம்! அந்த அழிவைத்தான் ஊழி என்றனர் முன்னோர்!
அத்தகைய ஊழிபோன்ற துன்பங்கள், தொல்லைகள், துயரங்கள் மனிதனைத் துரத்துவதுண்டு. அப்படித் துரத்தும்போது அசையாமல், ஆடாமல், நிலை குலையாமல், நெஞ்சம் பதறாமல், கைபிசையாமல், கலங்கி அழாமல், எந்த வேறுபாடுகள் ஏற்பட்டிடினும், தான் எக்காரணம்கொண்டும் வேறுபடாமல் இருப்பவனை, வள்ளுவர் எவ்வாறு புகழ்கிறார் தெரியுமா?
அந்தச் செயலை வீரமென்றோ, துணிவு என்றோ பாராட்டி அத்துடன் முடித்து விடவில்லை, அவர்!
சிறு துன்பங்களையே தாங்கமுடியாமல் வேறுபட்டுப் போய்விடும் கோழை மனிதர்களின் மேலுள்ள கோபத்தை; மிகப்பெரும் துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, வேறுபடாமல் உறுதியாக நிற்கின்ற கொள்கையுடையவர்களை மனந் திறந்து போற்றுவதன் மூலம் தீர்த்துக்கொள்கிறார்! அது எவ்வாறு? அதை ஒரு பண்பு என்றே சிறப்பிக்கிறார். அதுவும் எத்தகைய பண்பாம்? பண்புக் கடலாம்!
“ஊழிக்காலத்து மாற்றங்களே நேர்ந்தபோதிலும்கூட, ஒருவர் - தாம் கொண்ட கொள்கையில் மாற்றமில்லாது அந்தத் துன்பங்களை எதிர்கொண்டு, உறுதியாக நின்றால், அவர் பண்பெனும் கடல் எனப் புகழப்படுவாராம்!”
அந்தக் கருத்தை உள்ளடக்கியதே இந்தக் குறள்:
“ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்.”
அதிகாரம் - 99 - சான்றாண்மை; பாடல் - 989
சான்றாண்மை = சால்பு எனும் தன்மை
சால்பு = பண்பு
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்