பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 230 / 300

செற்றார்பின் செல்லா

அச்சுப் பக்கம் 490491 · ஸ்கேன் 507508 · அதிகாரம் 126 (நிறையழிதல்) — குறள் 1255

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

மானங்காத்தல் உயிர் காத்தலைவிடச் சிறந்தது! ஏன்; மானத்தைக் காப்பதற்காக உயிரையும் கூடத் துறந்துவிடலாம்! அந்த ஒப்பற்ற உயர்தனிப் பெருமையுடைய மானம், காதலர்களிடம் சிக்கிக்கொண்டு என்ன பாடுபடுகிறது! ஆணாகவும் இருக்கலாம்; ஆரணங்காகவும் இருக்கலாம்; காதலர் எனும் பொதுப்பெயரில் அடங்கிடும்போது, ஒருவர் பிரிவை ஒருவர் தாங்கிக்கொள்ள இயலாமல் அல்லற்படும் நேரத்தில் அவர்கள் எந்த நிலைக்கு ஆளாகிறார்கள் என்பதைத் குறளார் சுட்டிக்காட்டும் சுவையே சுவை!

கண்ணோடு கண் - கன்னத்துடன் கன்னம் - கன்னல் இதழுடன் இதழ் - மாதுளை மார்புடன் மார்பு - உலகையே மறந்து உடலுடன் உடல் - உயிருடன் உயிர் - இப்படி ஒட்டிக்கிடந்தோரை வெட்டிப் பிரித்த ‘பிரிவு’ எனும் துன்பத்தை மட்டுமா அந்தக் காதலர் வெறுத்தனர்? இல்லை!

பிரிந்த காதல் பறவைகளே ஒன்றையொன்று வெறுத்தனர்! நீயேன் என்னைப் பிரிந்தாய் எனப் பெண்ணும்; நீ பிரிந்திருந்து என் உயிரைப் பழிவது மட்டும் நியாயமோ என்று ஆணும், மனத்தால் சினத்தைக் கொட்டினர்.

அந்தச் சினம் நிலைத்ததா? அதுதான் இல்லை! பிரிந்திருப்பவன், அவனே வரட்டுமே என்று உறுதியோடு இருக்க, அவனாலும் முடியவில்லை! பிரிந்திருக்கும் அந்தப் பாவைதான் தன்னிடம் பறந்தோடி வரட்டுமேயென்று பொறுமையாக இருக்க, அவனாலும் முடியவில்லை.

பெரிய நதியொன்றில் பிரிந்து கழனிகளை வளமாக்கும் கால்வாய் ஒன்று! எப்போதும் நீர் நிறைந்திருக்கும். கடந்து செல்வதற்குப் பனைமரப் பாலம் ஒன்று உண்டு. இக்கரையில் இருந்து அவன் எண்ணினான், அவளே வருவாள் என்று! அக்கரையிலிருந்து அவள் நம்பினாள், அவனே வருவானென்று!

ஆனால், அவர்களைப் பிடித்திருந்த காமநோய், அவர்தம் திட உள்ளத்தைத் தீபோலக் கருக்கிவிட்டது. பாலத்திலே அவனும் நடக்கத் தொடங்கினான்; அவளும் நடக்கத் தொடங்கினாள். இருவரும் பாலத்தின் நடுவே ஒருவரையொருவர் வைத்த விழி வாங்காமல் பார்த்துக்கொண்டே நின்றனர்.

சற்றுத் தொலைவில் யாரோ சிரிப்பது கேட்டது! உற்றுக் கவனித்தனர்! அவளது தோழிதான்!

“தம்மை வெறுத்துப் பிரிந்தவரின் பின்னால் செல்லாமல் இருப்போம் என்ற மான உணர்வு, இந்தக் காதல் நோய்க்காரர்களுக்கு மட்டும் கிடையாது.”

என்றாள் தோழி!

“என்னடி சொல்கிறாய்” எனச் சினந்தாள், சிவந்த முகத்துடன் அந்தச் சேயிழையாள்!

“குறளடி குறள்” எனக் கூறியவாறு, அந்த இடத்தைவிட்டுக் குதித்தோடினாள் தோழி.

“செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று”

அதிகாரம் - 126 - நிறையழிதல்; பாடல் - 1255

செற்றார் = வெறுத்துவிட்டவர்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்