பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 229 / 300

ஆக்கமுங் கேடும்

அச்சுப் பக்கம் 488489 · ஸ்கேன் 505506 · அதிகாரம் 65 (சொல் வன்மை) — குறள் 642

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

சிலம்புச் செல்வத்தைத் தமிழ் உலகிற்கு வழங்கிய இளங்கோவடிகளாரின் அண்ணன் சேரன் செங்குட்டுவன், வீரங்கொழிக்கத் தாயகத்தை ஆண்டு கொண்டிருந்த காலம்! அப்போது வடபுலத்து மன்னர்களில் புகழ்மிக்கவர்களின் வரிசையில் கனகன், விஜயன் என இருவர் இருந்தனர். அடக்கமிலாத நா படைத்தவர்கள் அவர்கள். எவரையும் எளிதில் கேலி பேசக்கூடிய இயல்பினர். ஒரு நாள், விருந்தொன்றில் கலந்து கொண்டு மது வெறியில் தள்ளாடினர். அப்போதும் அவர்களின் மமதை வெளிப்படத் தவறவில்லை. விருந்தில் கலந்து கொண்ட மன்னர்கள் சிலர், தமிழகத்து மூவேந்தர்கள் இமயம் வரையில் படையெடுத்து வந்து, அவர்தம் ஆட்சிச் சின்னங்களான புலி, வில், கயல் ஆகியவற்றை மலைகளில் பொறித்துச் சென்றனர் என்ற பழைய செய்திகளைக் கூறினர். அப்போது வெகுண்டெழுந்த கனக - விஜயர் இருவரும் தமிழ் மன்னர்களின் வீரத்தை இழிந்துரைத்தனர்.

“சேரனோ, சோழனோ, பாண்டியனோ இமயம் வரையில் சேனையுடன் வந்து செம்மாந்து திரும்பியபோது எம்மைப்போன்ற மன்னர்கள் இங்கே இல்லையோலும். இருந்திருந்தால் அவர்கள் புறமுதுகிட்டு ஓடியிருப்பர்” எனப் பழித்துப் பேசினர்!

இந்தச் செய்தி செங்குட்டுவனின் செவிக்கு எட்டியது! “தமிழ் மன்னர்களைப் பழித்த தருக்கர்களை என் தாள்பணிய வைக்காமல் விடேன்!” எனச் சூளுரைத்துப் போர் முரசு கொட்டினான். வடபுலம் நோக்கி அவன் படை புறப்பட்டது. அமைச்சர் அழும்பில் வேள் அருகிருக்க, வில்லவன் கோதை படை நடத்த - செங்குட்டுவன், தனது துணைவி வேண்மாளிடம் விடைபெற்று வீர வாளேந்திக் கிளம்பிவிட்டான்.

வழியில் பல மன்னர்கள் அவனை வரவேற்றுப் பணிந்தனர். சில மன்னர்கள் அவனுக்குத் துணையாகப் படைகளும் அனுப்பினர். வடக்கே, குயிலாலுவம் என்ற இடத்தில் கனக - விஜயர்களுடன் செங்குட்டுவன் மோதினான். இறுதி வெற்றி சேரன் செங்குட்டுவனுக்குத்தான்! கனக - விஜயர்களைக் காணவில்லை. கடைசியாக அவர்களைத் துறவிகள் வேடத்தில் கண்டுபிடித்து, செங்குட்டுவன் எதிரே கொண்டு வந்து நிறுத்தினர்.

“கற்பரசி கண்ணகிக்குச் சிலை வடிக்க இமயத்திலே கல் எடுத்து; அதனை இந்த எருதுகளைச் சுமந்துவரச் செய்க!” என ஆணையிட்டான் செங்குட்டுவன்! அவ்வாறே கனக - விஜயர் தலையில் கல் ஏற்றப்பட்டது! அதனைத் தூக்கிக்கொண்டு கால் கடுக்க நடந்தனர், அந்த வாயடக்கமற்றப் பிறவிகள்!

அப்போது அமைச்சர் அழும்பில்வேள் சொன்னார்:

“நல்லதும் கெட்டதும் ஒருவன் சொல்கின்ற சொல்லால் வருவதால், சொல்லில் தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்” என்று!

அதைத்தான் இந்தக் குறள் விளக்குகிறது.

“ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு”

அதிகாரம் - 65 - சொல் வன்மை; பாடல் - 642

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்