பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 228 / 300

உறாஅது தவர்போல்

அச்சுப் பக்கம் 486487 · ஸ்கேன் 503504 · அதிகாரம் 110 (குறிப்பறிதல்) — குறள் 1096

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

“வான் கிழிக்கும் மின்னலாய் வந்தாள்! தேன் கொழிக்கும் செவ்விதழ் தந்தாள்! கூன் பிறைப் புருவமேற்றி மீனிரண்டைத் துள்ளவிட்டாள்! மான் என்றன் மடிமேல் புரண்டு மாயமாய் மறைந்ததேனோ?”

“கண்மணியே! உனக்காகக் காத்திருக்கும் கண்ணாளன், இப்படிக் கூறியன்றோ என்னிடம் கண்களைக் குளமாய்க் காட்டுகின்றான். நீயோ அவனைக் குறை கூறுவதையே வாடிக்கையாய்க் கொண்டிருக்கும் வேடிக்கைதான் என்னே!”

தோழி தோகையின் தோளைக் குலுக்கியபடி, தும்பை கேட்டாள். தும்பை மலர் போன்ற தூயவள் அவள்; அதனால் தோகையின் துயர்போக்கத் துடித்திட்டாள். அவள் காதலன் குறையொன்றிலான் என மெய்ப்பிக்க முனைந்திட்டாள். தோகையோ, தும்பையின் கைகளைத் தட்டிவிட்டபடி “சரிதான் போடி! அவருக்காக வாதாட வந்துவிட்டாயா நீ? என்னதான் நீ அவரைப் புகழ்ந்துரைத்தாலும் என்மீது அவருக்கு அளவில்லாத காதல் எனக் கதை சொன்னாலும் நம்புவதற்கு நான் ஒன்றும் அறிவிலி அல்ல!” எனச் சினந்தாள்.

“அடியே தோகை; அன்றைக்கு நீதானே சொன்னாய் - அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்; பழமுதிர்ச் சோலையின் நிழலில் இருப்பதுபோல்

இன்பமென்று! வெட்கத்தைவிட்டுச் சொன்னாயே; உன் உச்சித்தலை தொடங்கி உள்ளங்கால் வரையில் அவர் உதடுகளால் உழுதார் என்று - அதையெல்லாம் மறந்து விட்டாயா? அன்று வெல்லமென இனித்ததெல்லாம் இன்று வேம்பாய்க் கசப்பது ஏனடி?”

தும்பையின் குறும்புப் பேச்சில் கரும்பின் சாறு கொட்டியது என்றாலும் தோகை அவளைச் சற்று செல்லமாகத் தள்ளிவிட்டு, “ஆமாம் போடி, பெரிய அழகன்! உலகத்தில் இல்லாத மாவீரன்! என்னைப் பொருத்தவரையில் - எனக்கு அவரைப் பிடிக்கவில்லை! பிடிக்கவில்லை! பிடிக்கவில்லை!” என்று சொற்களுக்குச் சூடேற்றினாள்.

“அம்மா! தோகையம்மா! என்னிடம் ஏமாற்றாதே! அவரைப் பிடிக்காது போல் நடித்துக் குறை கூறாதே! நானும் பெண்தானே! எனக்கும் தெரியும். ஒருவர்மீது உள்ளத்தைப் பறிகொடுத்துவிட்டு அவர் வருகைக்காக வாடிக் காத்திருக்கும்போது, மற்றவர்கள் தெரிந்து கொள்ளக்கூடாதேயென்று அவரிடம், அன்பில்லாததுபோலப் பேசுவதும், மனத்திற்குள் கடலளவு காதலுணர்வைத் தேக்கி வைத்திருப்பதும் நம் இனத்திற்குரிய இயல்புதானே!”

“என்னடி தும்பை; என்ன சொல்கிறாய்?”

“ஒன்றுமில்லை! காதலைப்பற்றி வெளியிலே விரோதமாகப் பேசினாலும் உள்ளுக்குள்ளே அவரைப் பகைக்காமல் பாசத்தால் பின்னிக் கிடக்கிறாய் என்பது விரைவில் வெளியாகப் போகும் உண்மையென்று சொல்கிறேன்.”

தும்பையும் தன்னைப் போன்றவள்தானே! அதனால் தன்னுள்ளத்தை அளந்து வைத்திருக்கிறாள் என்று நாணிக் கோணியவாறு, தோகை அங்கிருந்து நகர்ந்து, பிறகு ஓடிவிட்டாள்.

“உறாஅ தவர்போல் சொல்லினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும்”

அதிகாரம் - 110 - குறிப்பறிதல்; பாடல் - 1096

உறாஅதவர் = அயலார்

செறாஅர் = சினமடையாதவர்

ஒல்லை = விரைவில்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்