பொருளடக்கம் 227 / 300
எதிரார் குற்றம் போல்
அச்சுப் பக்கம் 484–485 · ஸ்கேன் 501–502 · அதிகாரம் 19 (புறங்கூறாமை) — குறள் 190
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
பேன்கள் ஓடி விளையாடுகின்றன தலையில்! சளி ஒழுகிக் கொண்டிருக்கிறது மூக்கில்! வெண்முத்துப் பற்களோ மஞ்சள் பூசிக்கொண்டு நிற்கின்றன. விழிகளின் ஓரத்தில் வெள்ளை அழுக்கு எட்டிப் பார்த்தவாறு இருக்கிறது. பல இடங்களில் கறை பட்டுள்ள பட்டுச் சொக்காயும் பட்டு வேட்டியும் உடலைத் தழுவிக் கொண்டிருக்கின்றன. பெரியவீட்டுப் பிள்ளைதான்! ஆனால் நாகரிகத்திற்கோ, தூய்மைக்கோ அவனிடம் எள்ளின் முனையளவு இடமுமில்லை. சலவைக்கல் பதித்த வீட்டுத் தாழ்வாரத்தில் அவன் உட்கார்ந்திருப்பான். அவன் விளையாடுவதற்காக அழகான நாய்க்குட்டியொன்றுகூட உண்டு. அவனோ அதைத் திரும்பியும் பார்ப்பதில்லை. தெருக்கோடியில் சகதியை சந்தனமாகப் பூசிக்கொண்டு உறுமியவாறு ஓடுகிற பன்றிக்குட்டிகளைத் துரத்திச்சென்று, அதனைப் பிடித்து மார்போடு அணைத்துக்கொண்டு மகிழ்ச்சிக் கூத்தாடுவான். பெரியவீட்டு இளைஞனாயிற்றே; அவனை யார் கேட்கமுடியும் அந்த ஊரில்! உள்ளத்திலிருந்து கிளம்பும் கேலிச்சொற்களுக்கு அவர்களாகவே தடை விதித்துக்கொண்டு, அவனைப் பார்க்காதது போலவே சென்று விடுவர், ஊர் மக்கள்.
ஒருநாள் அவன், தன்னுடைய கோலத்தில் எந்தவிதமான மாற்றமுமின்றி, ஒரு செத்துப்போன எலியை வாலைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு குளக்கரைப் படிக்கட்டுகளுக்கு வந்தான். அது அந்த ஊரின் பொதுக்குளம். குளத்தில் குளித்துக்
கொண்டிருந்த மற்றொரு இளைஞன், பெரிய இடத்து இளைஞனை வியப்போடு பார்த்தான். “பொன்னையா! என்ன இது, எலியைத் தூக்கிக்கொண்டு நிற்கிறாய்!”
செல்வந்தர் வீட்டுச் செல்வனின் பெயர் பொன்னையா!
“ஏ! சின்னப்பா! எப்படியடா என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடலாம்? அவ்வளவு கொழுப்பா உனக்கு?”
ஏழை வீட்டு இளைஞன் சின்னப்பாவை, பொன்னையா கடிந்து கொண்டான்.
“சரி! சரி! மன்னித்துக்கொள்ளுங்கள் அய்யா. எலியைத் தூக்கிக் கொண்டு எங்கே வந்தீர்கள். அதைச் சொல்லுங்கள்.”
“இது செத்துப்போன எலி. இந்தக் குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவாகப் போடுவதற்கு வந்தேன்” என்று கூறிக்கொண்டே எலியைக் குளத்திற்குள் வீசி எறிந்தான் அவன்.
“அய்யய்யோ - இது பொதுக் குளமாயிற்றே, நீங்கள் தூய்மையற்று இருப்பது போதாதா? இந்தக் குளத்தையுமா அசுத்தப்படுத்திக் கெடுக்க வேண்டும்?”
சின்னப்பாவின் இந்த வார்த்தைகளை, பொன்னையாவினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
“என்ன சொன்னாய்? மூடனே! யார் தூய்மையற்று இருப்பது நீயா? நானா? உன் உடம்பில்தான் அழுக்கு இருக்கிறது. அதனால்தான் நீ குளிக்கிறாய். நான் குளிப்பதே கிடையாது - காரணம் என் உடலில் கடுகளவு அழுக்கும் கிடையாது” என்று உரக்கக் கூவிவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான், மலையளவு அழுக்கை மேனியில் ஏற்றிக்கொண்டிருப்பவன்.
சின்னப்பா, சிறிது நேரம் அசைவற்று நின்றான். தொலைவில் யாரோ குறட்பா இசைப்பது அவன் காதுகளில் விழுந்தது.
“ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு”
மற்றவர்களுடைய குறையையோ குற்றத்தையோ காண்பதுபோல, தங்கள் குற்றத்தையும் காண வல்லவரானால் வாழ்க்கையில் தீமை என்பது உண்டோ?
இதுதான் வள்ளுவரின் கேள்வி. சின்னப்பா குளிப்பதே குற்றமென்ற பொன்னையா, சின்னப்பாவின் உடலில் அழுக்கு இருப்பதற்குச் சான்று அவன் குளிப்பதுதான் என்று சுட்டிக்காட்டுகிறான். ஆனால், அவனோ அழுக்குப் பாண்டமாக அலைந்து கொண்டிருக்கிறான். நல்லது சொன்னதற்காக சின்னப்பா இழித்துரைக்கப்பட்டான். இழித்துரைத்த பொன்னையாவுக்கு, அவனது நடைமுறையும் நாகரிகமற்ற தன்மையும், உடனடியாக அவற்றின் விளைவைக் காட்டாவிடினும் அவன் வாழ்க்கைக்குத் தீமைகளும் நோய் நொடிகளை எதிர்காலத்தில் வழங்கியே தீரும்.
சின்னப்பா, புன்னகை புரிந்தவாறு குளத்தைவிட்டுக் கரை ஏறினான்.
அதிகாரம் - 19 - புறங்கூறாமை; பாடல் - 190
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்