பொருளடக்கம் 226 / 300
நிறையரியர் மன் அளியர்
அச்சுப் பக்கம் 482–483 · ஸ்கேன் 499–500 · அதிகாரம் 114 (நாணுத்துறவுரைத்தல்) — குறள் 1138
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
“என் அன்பே! நீங்கள் மிகவும் மோசம்! அத்தனைபேர் கூடியிருக்கும் இடத்தில் என்னை அப்படியா அடிக்கடி பார்ப்பது? பெற்றவர் இருந்தனர் பக்கத்தில்! மற்றவரும் நீங்கள் என்னைப் பார்ப்பதையே கவனித்தனர்! உங்கள் விழிகளுக்குக் கொஞ்சமாவது அடக்கம் வேண்டாமா? இந்த உதடுகள் ஏன்தான் அப்படித் துடித்து என்னை அழைத்திட வேண்டும்? போங்கள் அன்பே; எல்லோரும் நம்மைப் பற்றி நன்றாகப் புரிந்து கொண்டிருப்பார்கள்!”
“ஓ! நீ என்னைக் குற்றம் கூறுகிறாயா? நான் உன்னைப் பார்த்ததை நீ எப்படிப் பார்த்தாய்? நீ என்னையே நோக்கிக் கொண்டிருந்ததால்தானே அடக்கமற்ற என் விழிகளைப்பற்றி - அழைப்பிதழ் அனுப்பிடும் என் உதடுகளைப்பற்றி இவ்வளவு சரியாகக் கூறமுடிகிறது! ஆமாம்; கண்ணே! உன் கன்னம் என்னைக் கண்டதும் சந்தனக் கிண்ணத்தில் குங்குமம் தூவியது போலாயிற்றே; அது ஏன்? உன் நெடிய மூச்சையும் அதில் கலந்த தாபத்தையும் உன் அழகிய நாசியினால் வெளிப்படுத்த முடியவில்லையென்றுதானே, உன் நெஞ்சத்து மொக்குகள் அடிக்கடி விம்மிப் புடைத்துக்கொண்டிருந்தன! என்னைப்போலத்தானே உன்னையும் காமம் காட்டிக் கொடுத்தது! இல்லையா?”
“என்னத்தான் செய்வது? சோலையில் ஓடிப்பிடித்ததை - சுகத்தில் கூடிக் களித்ததை - நினைத்துக்கொண்டேன்! என்னை அறியாமல் இதயத்தை இன்பத்தால் நனைத்துக்கொண்டேன்! மனத்தை அடக்கிட கனைத்துக்கொண்டும் சமாளித்தேன்! அனைத்தையும் மீறி அணையுடைத்து எழும் வெள்ளம் போல் அல்லவா அந்த உணர்வு பீறிட்டுக் கிளம்புகிறது!”
“என்ன இருந்தாலும் காம உணர்வு பொல்லாத எமன்! சிறிதுகூட அதற்கு இங்கிதம் தெரியவில்லை! பாவம்; இவர்கள் நெஞ்சை அடக்கி நிறுத்தும் உறுதிமிக்க நிறையில்லாதவர்கள் என்றோ - அல்லது மிகவும் இரங்கத்தக்கவர் என்றோ கருதாமல், பலரும் சூழ்ந்துள்ள மன்றத்திலும் நம் போன்ற காதலர்களைக் காட்டிக் கொடுத்து விடுகிறது.”
காதலர் இருவரின் இந்த உரையாடலுக்குப் பொருத்தமான குறள் ஒன்று உண்டு! அது, இதோ!
“நிறையரியர் மன்னளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும்”
அதிகாரம் - 114 - நாணுத்துறவுரைத்தல்; பாடல் - 1138
நிறையரியர் = நிறையில்லாதவர்
அளியர் = இரங்கத்தக்கவர்
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்