பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 225 / 300

வினையால் வினையாக்கி

அச்சுப் பக்கம் 480481 · ஸ்கேன் 497498 · அதிகாரம் 68 (வினைசெயல்வகை) — குறள் 678

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

கட்டுப்பாடு எதுவுமின்றித் தன்னுரிமையுடன் காட்டில் திரியும் யானையைப் பிடிப்பதற்குச் செல்கிறவர்கள், ஏற்கெனவே தங்களிடமிருக்கும் பழகிய யானை யொன்றை அழைத்துக்கொண்டு செல்வார்கள். காட்டு யானையை வீழ்த்து வதற்கேற்ற குழியொன்று அமைக்கப்படும். குழியிருப்பது தெரியாதவாறு இலை தழைகளாலும் மெல்லிய குச்சிகள் கம்புகளாலும் மேல் பகுதி மூடிவைக்கப்படும். ஒரு முனையில், பழக்கப்பட்ட யானை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

காட்டு யானையோ, குழிக்கு மறுமுனையில் நிற்பதும் தன்னுடன் காட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் யானைதான் எனக் கருதி அதனருகே வரும்! வரும் வழியில்தான் அந்தக்குழி! யானையின் காலடிகள் குழியை மூடியிருக்கும் பச்சைப் பசுங்கொடிகளின் மீது பட்டவுடன், யானை குழிக்குள் விழுந்துவிடும்.

அதன்பிறகு அந்த யானையைப் பெருங் கயிறுகளாலும் இரும்புச் சங்கிலிகளாலும் பிணைத்து வெளியே தூக்கி, காட்டிலிருந்து நாட்டிற்குக் கொண்டு செல்வர்.

பழகிய யானையொன்றைப் பயன்படுத்தி, பழகாத மற்றொரு யானையைப் பிடித்துப் பழக்கிடும் இந்தச் செயலை, வள்ளுவர் அறிந்துகொள்ளாமல் இருப்பாரா? அறிந்துகொண்ட அந்த நிகழ்ச்சியைத் தனது குறட்பாவில், எங்கேயாவது உவமையாக

ஆக்கிட வேண்டுமென்றுதானே எண்ணியிருப்பார். அதற்கு எத்தகைய பொருத்தமான இடம் அவருக்குக் கிடைத்திருக்கிறது!

ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிவருகிறது! கரைகள் உடைத்துக் கொண்டால் ஊர்கள் பலவும் கழனிகள் பலவும் அழிந்து ஒழிந்துவிடும். அரசன் கவனத்திற்கு இந்த அதிர்ச்சி தரும் செய்தி கிடைக்கிறது. கரைகளைப் பலப்படுத்துமாறு உடனடியாக ஆணை பிறப்பிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுக் கரைகள் வலுப்படுத்தப்பெற்று உயர்த்தவும் படுகின்றன. ஆற்று வெள்ளத்தால் ஏற்பட இருந்த அழிவிலிருந்து ஊர்களும் உடைமைகளும் காப்பாற்றப்பட்டன.

பெருக்கெடுத்துப் பாயும் வெள்ளம் வீணாகக் கடலில்தானே போய்க் கலக்கிறது; நிலையாக அங்கோர் அணையைக் கட்டி வெள்ளத்தைத் தேக்கி - தேவைப்படும் போது கழனி காடுகளுக்குப் பாய்ச்சிக்கொண்டால் என்ன - என்ற சிந்தனையும் அரசு புரிந்தோர்க்கு உதயமாகிறது. அவ்வாறே கரையை உயர்த்தும் செயலைத் தொடர்ந்து, அணையை எழுப்பும் செயலையும் செவ்வனே முடிக்கின்றனர். ஊர் செழிப்புறுகிறது.

ஒரு செயலைச் செய்யும்போது அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளவேண்டுமென்பது வள்ளுவரின் கருத்து! ஒரு செயலைப் பயன்படுத்தி இன்னொரு செயலையும் முடித்துக்கொள்க! முதற் செயலைப் பழகிய யானைக்கு ஒப்பிடுகிறார்! அதைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட வேண்டிய செயலைப் பழகிடாத காட்டு யானைக்கு ஒப்பிடுகிறார்.

என்னே சிந்தனை! என்னே உவமை! எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்பு.

“வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று”

அதிகாரம் - 68 - வினைசெயல்வகை; பாடல் - 678

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்