பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 224 / 300

அன்பிற்கும் உண்டோ

அச்சுப் பக்கம் 478479 · ஸ்கேன் 495496 · அதிகாரம் 8 (அன்புடைமை) — குறள் 71

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

பாலூட்டி, மகனை வளர்த்துச் சீராட்டி மகிழ்ந்த பருவமுதல் - அவன் பள்ளிக்குச் செல்லும்போது வாயிற்புறம் நின்று வழியனுப்பிவிட்டுப் பின்னழகு கண்டு பூரித்த காலம் வரையில், அந்தத் தாய் பொழிந்த அன்பு மழையிலேதான் அவன் நனைந்துகிடந்தான்.

அரும்பனைய மீசை தோன்றி, ஆண்மகன் என ஊரார் - உற்றார் - மகிழ்ந்து போற்றி உறுதியும் வீரமும் ஒருங்கே பெற்றவன் என்று நல்லோர் எல்லாம் வாழ்த்துரைத்த பருவத்திலேதான், கொத்திக்கொண்டு அவன் தோளில் ஒரு பச்சைக்கிளி! அந்தச் சித்திரச் செந்தமிழ்ப் பாவையிடம் சிந்தை பறிகொடுத்தான்! ஆயினும் அன்னை தந்தையிடம் அவன் கொண்டிருந்த அன்புக்கு அணுவளவும் குறைவு நேர்ந்ததில்லை.

தகுதிக்கேற்றவாறு செல்வம் கொழிக்கும் மனையிற் பிறக்காத அந்த மங்கை நல்லாளைத் தன் மருமகளாக ஏற்றிட அவனது தந்தை தயாராக இல்லை. அதை அவனிடமே அவர் நேரடியாகக் கூறிவிட்டார். அவனோ, அவன் இதயத்தில் இடம் பிடித்துக்கொண்டவளை விட்டுத்தர விரும்பவில்லை! அதனால் தந்தையின் மிரட்டல்களும் எடுபடவில்லை! தாய் தவித்தாள்! செய்வதறியாது செயலற்று விழித்தாள்!

நம்பிவந்த நங்கையை நடு ஆற்றில் விடுவதற்கு அந்த நம்பியும் உடன் படவில்லை. பெற்றோரை எதிர்த்து வெற்றிகாண முடியாமல் வெளியூர் ஓடிவிட்டான், அந்த ஒளியுமிழ் தங்கச் சிலையுடன்!

மானம் போனதென்று குலப்பெருமையால் குமுறிக் கொந்தளித்துத் தந்தை நெஞ்சுடைத்து உயிர் விட்டார்.

தொலைவிலிருந்து செய்திகேட்டு அவன் துடித்தான்! தந்தையின் சாவுக்குக் காரணமானவன், தாயின் முகத்தைக் காண்பதுதான் எவ்வாறு என ஏங்கித் தவித்தான்!

ஆண்டுகள் சில உருண்டோடின! அவனும் அவளும் - தந்தையும் தாயுமாயினர்! கிள்ளைபோல் ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தனர்!

மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு மனைவியாளுடனும் மகிழம்பூ மகவுடனும் ஊருக்குத் திரும்பிவந்தனர் ஓர் இரவு - ஆம்! நள்ளிரவு!

கதவு தட்டப்படும் ஒலி கேட்டு, அந்தத் தாய் எழுந்து வந்து தாழ் அகற்றிக் கதவைத் திறந்தாள்!

கையில் இருந்த அகல்விளக்கின் துணையோடு, அவர்கள் முகத்தைப் பார்த்தாள்.

“அம்மா!”

கடந்த கால நிகழ்ச்சிகள் மின்னல் கீற்றுகளாக உள்ளத்தில் ஓடி மறைந்தன!

கதவை அடைத்து வைத்திடத் தாழ் இருந்தது! அதனால் அதனை அவள் அகற்றிவிட்டுக் கதவைத் திறக்க வேண்டியிருந்தது!

அதுபோல அன்பின் உச்சகட்டத்தை வெளிப்படுத்த, விழிகளில் கிளம்பிடும் நீர்த்துளியை அடைத்து வைக்கக்கூடிய தாழ் உண்டோ? இல்லை! இல்லவே இல்லை! அன்பு பீறிட்டதும் அந்தத் தாழ், தானாகவே திறந்துகொண்டு கண்ணீர்த்துளி வடிவில் அன்பின் பெருக்கைக் காட்சியாக்கிவிடுகிறது!

“அம்மா!”

அந்த ஒலி கேட்ட மாத்திரத்தில் - மகனின் தவறு மறைந்துபோய் அன்பு வெளிப்படும் உருக்கமிகு நிகழ்ச்சியை இதோ இந்தக் குறள், ஓவியமாகத் தீட்டிக் காட்டுகிறது.

“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்”

அதிகாரம் - 8 - அன்புடைமை; பாடல் - 71

பூசல் தரும் = வெளிப்படுத்தும்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்