பொருளடக்கம் 223 / 300
கல்லாதான் சொற்கா
அச்சுப் பக்கம் 476–477 · ஸ்கேன் 493–494 · அதிகாரம் 41 (கல்லாமை) — குறள் 402
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
“இனிய சொற்கள் இருக்கும்போது இன்னாத சொற்களைக் கூறக்கூடாது என்று குறள் வடித்துக்கொடுத்த வள்ளுவரேகூடத் தனக்கு ஏற்பட்ட சினத்தை அடக்கிக் கொள்ள முடியாமல், கடுமையான சொற்கொண்டு ஒருவனைத் தாக்கியிருக்கிறார் தெரியுமா?”
என் நண்பன் இப்படியொரு திடீர்க்கதையை என் முன்னால் தூக்கிப் போட்டான்.
“நண்பா! என்ன உளறுகிறாய்? வள்ளுவர் வீட்டுக்கு அடுத்த வீட்டில் குடியிருந்தவனைப் போலக் கூசாமல் பொய் சொல்கிறாயே; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் வள்ளுவர் என்பதை மறந்துவிட்டாயே!”
என்று நான் அவனை மடக்கினேன். நண்பன் தான் சொன்னதைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக இல்லை! என்னைத் தன்பக்கம் இழுத்துக் கொள்வதிலேயே நாட்டமாக இருந்தான்.
“இரண்டாயிரம் ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர் வள்ளுவர் என்று யார் கூறியது? அவர் இன்னமும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார். வாழ்வுக்கு இலக்கணம் வகுத்தவர், அவர் வழங்கிய குறட்பாக்கள் உள்ளவரையில் வாழ்ந்து கொண்டுதானிருப்பார்.
நண்பன், மலர்ந்த முகத்துடனும் ஒளி பொருந்திய கண்களுடனும் பதிலளித்தான்.
“சரியப்பா! அவர் கடுமையான சொற்களைப் பொழிந்தார் என்றாயே, யார் மீது? எப்போது? அதையாவது விரிவாகச் சொல்!” என்றேன் நான்.
“அப்படிக் கேள்! வள்ளுவர், மனித குலத்திற்கு அறநெறி நூல் வழங்கிட ஊர்பல சுற்றினார்; நாடுகளைக் கண்டார்; அங்கு நடைபெற்ற ஆட்சிகளைக் கவனித்தார்; மக்களிடையே எழுந்த வேறுபாடுகளை அறிந்தார். இல்வாழ்வோர், துறவறம் பூண்டோர், அரசு நடத்துவோர், காதல் புரிவோர், வீரம் விளைப்போர் - போற்றிட வேண்டிய நெறிகளை உணர்த்திட, அவர் முதலில் உலகத்தையே ஒரு நூலாகக் கற்றார். பிறகு அந்த உலகத்தையே குறளாக ஆக்கி வழங்கினார். அப்போது அவர் சந்தித்த மனிதர்களில் ஒருவன்தான், அவரது அடக்கமுடியாத சினத்திற்கு ஆளானான்!”
“நண்பா! இன்னமும் புதிர் போட்டபடியே இருக்கிறாயே; யார் அவன்? அவன் மீது வள்ளுவர் சினங்கொள்ளக் காரணம் யாது? அப்படியென்ன கடுஞ்சொற்களைக் கொட்டிவிட்டார்?”
நான் கேள்விகளைப் பரபரப்பாக அடுக்கினேன்; நண்பன் அமைதியாக விளக்கமளித்தான்.
“உலகிற் பலரைச் சந்தித்த வள்ளுவர், அந்த ஒரு மனிதனையும் சந்தித்திருக்கிறார். அவன், தன்னை மிகப்பெரிய அறிவாற்றல் படைத்தவனாகக் காட்டிக் கொண்டானாம்! எதுவும் தனக்குத் தெரியாது என்ற போதிலும் எல்லாம் தெரிந்தவனாகப் பெருமை பேசிக்கொண்டானாம்! ஏதாவது ஒன்றைச் சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டுமென்று அவனது உதடுகள் துடிதுடித்துக் கொண்டேயிருக்குமாம். எதையும் ஆழமாகச் சிந்தித்து, அமைதியாக எடுத்துரைக்கும் மனப்பக்குவமேயில்லாதவனாம். ஆனால், அவன் தன்னை அறிவாளியெனக் கருதிக்கொண்டு, வள்ளுவரிடமே வாதத்திற்கு வந்திருக்கிறான். வள்ளுவரையே எதிர்த்திடும் ஆற்றலாளன் என, வையம் புகழும் என எதிர்பார்த்திருக்கிறான். அவனைப் புரிந்துகொண்டார் வள்ளுவர். அறிவுச் சூன்யம் என்பதை அவர் அடையாளம் கண்டுகொண்டார். இருந்தாலும், அந்த அறிவிலி எதையாவது உளறித் தன்னைப் பேரறிஞனாக அறிமுகப்படுத்திக்கொள்ள முயன்றது, வள்ளுவருக்குப் பெருங் கோபத்தை ஏற்படுத்தியது. அவனைப் பார்த்து, என்ன சொன்னார் தெரியுமா?”
“அடடா! தெரியாது! சொல்லப்பா சொல்!”
அந்த மனிதனைப் பார்த்து, “உன்னைப் போன்ற அறிவிலிகள், எல்லாம் அறிந்தவர்களைப்போலக் கூத்தடிப்பது எப்படியிருக்கிறதென்றால், இயல்பாகவே இரண்டு கொங்கைகளும் இல்லாத ஒருத்தி; பெண்தன்மையுடையவளாகத் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பியது போல இருக்கிறது” என்று வள்ளுவர் கூறினார்!”
“அப்படியா? அவ்வளவு சீற்றம் பிறந்துவிட்டதா அவருக்கு?”
“ஆமாம் - இதோ சொல்கிறேன் கேள் அந்தக் குறளை.”
நண்பன் குறிப்பிட்ட திருக்குறள் இதுதான்.
“கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று”
அதிகாரம் - 41 - கல்லாமை; பாடல் - 402
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்