பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 222 / 300

இன்பம் கடல்மற்று

அச்சுப் பக்கம் 474475 · ஸ்கேன் 491492 · அதிகாரம் 117 (படர்மெலிந்திரங்கல்) — குறள் 1166

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

“நெஞ்சே! நீ அவரைத் துரத்திக்கொண்டு அவர் பின்னாலேயே ஓடும்போது என் கண்களையும் உன்னுடன் அழைத்துச் செல்லாயாக! இல்லாவிட்டால் அவரைக் காணவேண்டுமென்ற துடிப்பில் அவை, என்னைக் கொத்தித் தின்றுவிடுகின்றன!”

காதலனுக்கு எழுதிய மடலின் இறுதியில், இந்தக் குறள் மொழியை அந்தக் காதலி குறிப்பிட்டிருந்தாள். அவன் கண்களுக்கும், அவன் நெஞ்சுக்கும், ஏன், அவனுக்குங்கூட அதே நிலைதான் என்பதை அவள் அறியமாட்டாளா என்ன!

இந்தக் குறளுக்கு அவன், தன்னையே எடுத்துக்காட்டாக அமைத்து அவளுக்கு ஏற்கனவே இன்பமடல் தீட்டியிருக்கிறான்.

மடல் விடு தூதுகள் முடிந்தபின்னர் மடப்பிணையும் கலைமானும், மலர்க்கொடிகளில் தென்றல் ஊஞ்சலாடும் ஆற்றோரத்து மணல் மேடொன்றில் சாய்ந்தவாறு, ஒருவர் அழகை ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு பருகிக் கிடந்தனர்.

“என்னடி கண்ணாட்டி! என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறாய்? அப்படியென்ன அற்புத அழகை என்னிடம் கண்டு கண்டு வியக்கிறாய்?”

அவன் கேள்வியால் அவள் முகம் மேலும் ஒளி பெற்றது.

“ஒன்றுமில்லையத்தான்! உங்கள் உதடுகளில் சதிராடும் புன்னகையை, உங்கள் உதடுகளில் காட்சிதரும் காமவேள் நடன அரங்கை ஒரு முறையா - இரு முறையா -

எத்தனையோ ஆயிரமுறை பார்த்துப் பார்த்து மெய்மறந்து போயிருக்கிறேன். தெவிட்டாத காரணத்தால்தான் இப்போதும் அந்தத் தேன்பலாச் சுளைகளைப் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்! அதிருக்கட்டும்! - எனத்தான்? நான் எங்கிருந்தாலும் நீங்கள் மட்டும் என் கண்களை அப்படியே விழுங்கி விடுவது போல் பார்க்கிறீர்களே; அது ஏன் என்கிறேன்?”

வினாக்கணை விடுத்தவாறே அவன் மடியினில் சாய்ந்துகொண்டாள்.

“வெள்ளை மலர் நடுவில் அமர்ந்து மது உறிஞ்சும் வண்டுகள்போல் அவை தோன்றினாலும் - வில்லின் நாண்விட்டு, கிளம்புகின்ற அம்புகள் போல் என்னை உன் கண்கள் குறி பார்ப்பதால்தான், எப்போது பாயுமோ என்பது என்று எதிர்பார்த்து, வைத்த விழி மாறாமல் இருக்கின்றேன்; இதுகூடவா புரியவில்லை!” என்றான்.

மடியில் கிடந்தவளைத் தூக்கி மார்புறத் தழுவிக்கொண்டான். அந்த அமளியில் சிக்கிக் கசங்கிடத் தயங்கிய ஆடைகள், அவர்களிடம் தற்காலிக விடைபெற்றுக்கொண்டன! வான் மீன்கள், வட்ட நிலாவைப் பார்த்துக் கேலியாகக் கண்சிமிட்டின! நிலவோ, முகில் ஒன்றை இழுத்து முகத்தை மூடிக்கொண்டது!

ஆற்றுப்படுகையில் காற்றுப் புகவிடாத அளவுக்கு ஈருடல்கள் ஒருடலாய் ஒட்டிக்கொண்டன!

“கடல்! கடல்! இன்பக் கடல்!” என இருவர் இதழ்களும் மென்மையாகக் கூத்தாடின!

“ஆமாம்! இன்பம்; நாம் இணைந்திருக்கும்போது கடலாகத்தான் இருக்கிறது! அதேபோலத்தான் துன்பமும் கடலையும் வெல்லுமளவுக்குப் பெருக்கெடுத்து விடுகிறது, காமம் நம்மை வருத்தும்போது!”

அந்த இன்பபுரிப் பயணத்திலும் பிரிவென்னும் துன்பபுரி, இடையே குறுக்கிடுமே என்ற கவலைதான் அவர்களுக்கு!

“இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது”

அதிகாரம் - 117 - படர்மெலிந்திரங்கல்; பாடல் - 1166

அடுங்கால் = வருத்தும்போது

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்