பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 221 / 300

சலத்தால் பொருள் செய்து

அச்சுப் பக்கம் 472473 · ஸ்கேன் 489490 · அதிகாரம் 66 (வினைத்தூய்மை) — குறள் 660

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

நெறி தவறாதவன் - நேர்மையாளன் - நீதியின் உருவம் - நெஞ்சம் தூய்மைப்பட- இப்படியெல்லாம், அவனைச் சூழ்ந்திருப்போர் புகழ் பாடினர். அறமே மனித உருவில் வந்து நடமாடுவதாக நாப்பறை கொட்டித் தமக்கு வேண்டிய உதவிகளைப் பெற்றுக்கொண்டனர்.

அவனோ அவர்களைப் பயன்படுத்திக்கொண்டு, பொருள்மலை குவிக்கத் தொடங்கினான். ஏற்கெனவே அவன் ஈட்டியுள்ள செல்வம், ஏழு தலைமுறைக்குப் போதும்; இப்போது அவனுக்குப் பொருள் மீது வேட்கை வரவே காரணமில்லையென்று திட்டவட்டமாகக் கூறியவர்கள்கூட வியப்புறும் வண்ணம், அவன் தீயவழிகள் அனைத்தையும் பயன்படுத்தித் தனது கருவூலத்தைச் சூலுற்ற மங்கையாகத் தோற்றம் பெறச் செய்தான்.

ஏழைகட்கு இறைவன்போலக் காட்டிக்கொண்டு - அவர்கட்குக் கடன் வழங்கி, அந்தக் கடனுக்கு வட்டிக்கு வட்டி போட்டு வாட்டி, அவர்பாலிருந்த பண்டம் பாத்திரங்களைக்கூடச் சுருட்டிக் கொண்டான். சூதாடும் களத்தில் எதிர் அமர்ந்திருப்போருக்கு விழிகளைச் சுழற்றும் மதுவகைகளை, ஆடையற்ற அழகிகளைக் கொண்டு வழங்கச் செய்து - அவர்தம் பொருள்களையெல்லாம் இரவு நேரத்தில் வாரிக்கொண்டு - பகல் வேளையில் பசுப்போல உலா வருவான்.

பத்திரமாக இருக்கட்டுமென்று அவனை நம்பி ஒப்படைக்கப்பட்ட அணிமணிகள் அனைத்தும், ஒப்படைத்தோருக்குத் திருப்பித் தரப்பட்டதில்லை. கைதேர்ந்த கயவர்கள் சிலரை வைத்துக்கொண்டு தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருள்களைக் கடத்திடும் கலையிலும் அவன் வல்லவனாக விளங்கினான். இத்தனை கேடான செயல்களும் ஊருக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டன.

ஒருநாள், அதிர்ச்சி தரும் செய்தியொன்று அவனுக்குக் காத்திருந்தது. பயங்கரக் கொள்ளைக்காரன் ஒருவன், தனது கொள்ளைவெறிப் படையுடன் வந்து, அந்த ஊரில் உள்ள செல்வந்தர் வீடுகளை முற்றுகையிட்டுப்போவதாகவும், முதல் வீடு அவன் வீடுதான் என்பதாகவும் தீப்பொறிபோல் வந்த செய்தி கேட்டுத் திகைத்தான்; திகைத்தான். திரட்டிய திரவிய மூட்டைகளையெல்லாம் பெரும் படகொன்றில் அடுக்கிக்கொண்டு ஆற்றைக் கடந்து அக்கரை சென்று, அங்கிருந்து பொருள் களுடன் பத்திரமாகத் தப்பித்துவிட வேண்டுமென்று திட்டமிட்டான்.

அவ்வாறே படகில் புறப்பட்டான். ஆற்றுப் பெருவெள்ளத்தில் படகு கவிழ்ந்தது. பொருள்கள் அனைத்தும் ஆற்றோடு போயின. அவன் மட்டுமே நீந்திச்சென்று அடுத்த கரையை அடைந்தான்.

பணமலையின்மீது படுத்துறங்கியவன், பசிப்பிணியால் தாக்குண்டு தள்ளாடி நடந்து வந்தான். நெடுந்தொலைவு நடந்த பின்னர் நாவறண்டு, தெருவினிலே ஒரு பெண்ணைப் பார்த்துத் தாகம் தணிக்கத் தண்ணீர் தருக, எனக் கெஞ்சிக் கேட்டான். அவள் சொன்னாள்:

“அய்யா! நான் ஓர் அறிவற்ற பெண்! இந்தப் பகுதியில் தூய்மையான குடிநீர் கிடைக்காது! அதனால் இரண்டு கல் தொலைவு நடந்து சென்று குடிநீர் கொண்டு வந்து பானையில் பாதுகாப்பாக வைத்திருந்தேன். ஆனால் அந்தப்பானை பச்சை மண்ணால் செய்யப்பட்ட பானை! அது நான் சேகரித்து வைத்த தண்ணீரைத் தாங்க முடியவில்லை. தீயவழியில் சம்பாதிப்பவர்களின் செல்வம் எப்படித் திடீரென அழிந்துவிடுமோ - அதைப் போல பச்சை மண்ணால் ஆன பாத்திரத்தில் ஊற்றி வைத்த நீரும் பானை தாங்காமல் உடைந்து கீழே போய்விட்டது.”

இப்படி அந்தப் பாவை பதில் கூறிவிட்டு, அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

அவன் உதடுகள் முணுமுணுத்தன!

“ஆமாம்! வஞ்சனையால் சேர்த்துக் காப்பாற்றப்படும் பொருள்; பச்சை மண்ணாலான பாத்திரத்தில் ஊற்றி வைக்கப்பட்ட நீரைப்போன்றதுதான்.”

ஆற்றோடு போன அவன் பொருளைப் பற்றி எண்ணிப் பெருமூச்சுவிட்டவாறு அந்த இடத்தைக் கடந்து சென்றான்.

“சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமட் கலத்துள் நீர்பெய்திரீஇ யற்று”

அதிகாரம் - 66 - வினைத்தூய்மை; பாடல் - 660

சலம் - வஞ்சனை

ஏமார்த்தல் - பாதுகாப்புச் செய்தல்

பசுமட்கலம் - பச்சை மண்பாண்டம்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்