பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 220 / 300

ஐந்தவித்தான் ஆற்றல்

அச்சுப் பக்கம் 470471 · ஸ்கேன் 487488 · அதிகாரம் 3 (நீத்தார் பெருமை) — குறள் 25

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

பூஞ்சோலையின் நடுவே அமைந்தது அந்தப் பர்ணசாலை. அடர்ந்த காட்டுக்குள்ளே மலைவீழ் அருவியும் மான்களின் துள்ளலும் மலர்களின் மணமும் அந்தப் பர்ணசாலைக்கு இன்பமூட்டிக் கொண்டிருந்தன. அங்குதான் குடத்துக்குள் விளக்கென அந்தக் குடிலுக்குள் வாழ்ந்தாள் அழகின் எல்லை அகலிகை. ஓவியப் பெண்ணுக்குக்கூட ஒரு குறையிருந்திடலாம் - சிற்பச் சிங்காரிக்கும் அழகிலொன்று குறைந்திடலாம்! அகலிகையோ, அவள் பிறந்தபிறகே அழகு எனும் சொல் பிறந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாகப் பிறந்தவள்! வேலனாலும் சேலனாலும் அவள் விழிகளுக்கு எதிர் நிற்கமாட்டா! பூக்காத வாழைப்பூவும் தாமரை மொக்கும் கூட அவள் மார்பகத்திற்கு முன்னால் மண்டியிடும்! அந்த நிலவு இன்னும் உலகில் தோன்றவில்லை, அவள் ஒளி முகத்துடன் ஒப்பிட்டு உவமை கூற! பசலைக்கொடியொன்று பாறையைத் தழுவிக் கிடப்பது கண்டால் அக்கொடிமீது பரிதாபம் ஏற்படுமன்றோ! அப்படித்தான் அவள், முற்றும் துறந்த முனிவருடன் அந்தக் குடிலில் வாழ்க்கை நடத்துவதும் இருந்தது. அந்த அழகின் எல்லையை ஒருநாள் அருவியோரத்தில் கண்டுவிட்டான் இந்திரன்! “மண்ணுலகை மட்டும் ஆள்பவனில்லை நான், விண்ணுலகையும் ஆள்பவன்” என்று தனது ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பரப்பை எண்ணி எண்ணி இறுமாப்புக் கொண்டவன் அவன்! அவளோ அவனை அலட்சியமாகப் பார்த்துவிட்டுக் குடிலுக்குள் மறைந்துவிட்டாள்.

வேட்டைக்கு வந்த வேந்தன், இந்த மானை வேட்டை நடத்தாமல் திரும்பமாட்டேன் எனச் சூளுரைத்துத் தன் தங்குமிடம் சென்றான். விடியற்காலை! முனிவரைப்போல் வேடமிட்டுக் கொண்டான்! முனிவரோ வைகறைக்கு முன்னெழுந்து வைகைநெறி காக்க, ஆற்றில் குளித்தெழுந்து ஆண்டவனை வணங்கச் சென்றிருந்தார். வேடம் குலையாமல், காமவேகம் தணியாமல் இந்திரன் குடிலுக்குள் நுழைந்தான். உறங்கிடும் பேரழகை அள்ளிப் பருகினான்; அணைத்து உருகினான். தனை மணந்த முனிவரேயென எண்ணி நெடுநாளைய தாபத்தைத் தணித்துக் கொண்டாள். இடையிலே அவன் கணவனில்லையெனக் கண்ட பிறகும் புலன் அடக்கும் சக்தியின்றி இன்பப் போதையிலே மயங்கிக் கிடந்தாள்.

பூஜை முடித்துத் திரும்பிய முனிவர், புயலாய்ச் சீறினார்! புலியாய்ப் பாய்ந்தார்! சதிகாரர்களே - சண்டாளர்களே - எனச் சபித்தார். கல்லாக நின்றாள் அகலிகை, கணவனுக்குப் பதில் அளிக்க முடியாமல்! கண்ணெல்லாம் புண்ணாகக் கலங்கியழுதான் இந்திரன், புலன் அடக்க முடியாத தனது தவற்றினை எண்ணி!

இதைத்தான் குறள் குறிப்பிடுகிறது: புலன்களை அடக்க முடியாமல் வழி தவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் இருந்து, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளை அகற்றிடும் மனிதனின் வல்லமையை உலகிற்கு எடுத்துக் காட்டுகிறான் என்று! இதோ அந்தப் பாடல்:

“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலும் கரி”

அதிகாரம் - 3 - நீத்தார் பெருமை; பாடல் - 25

அகல் விசும்புளார் கோமான் = அகன்ற வான் பரப்பில் உள்ளோர்க்கு மன்னன்

சாலுங் கரி = போதுமான சான்று

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்