பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 219 / 300

அங்கணத்துள் உக்க

அச்சுப் பக்கம் 468469 · ஸ்கேன் 485486 · அதிகாரம் 72 (அவை அறிதல்) — குறள் 720

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

“தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.”

அடடா! புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எத்துணை உணர்ச்சிப் பெருக்குடன் இந்த வரிகளைப் பாடியுள்ளார். தமிழும் உயிரும் ஒன்றாம்! அதற்கு அமிழ்தம் எனப் பெயர் இருந்தாலும்கூட, உயிருக்கு நேராக அல்லவா விளங்குகிறது! அந்த உயிர்த்தமிழைக் காத்திடத்தானே தமிழகம் போர்க்கோலம் பூண்டது! “வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள்கள் எங்கள் வீரத்தோள்கள்” என ஆயிரமாயிரம் தமிழர்கள் குருதி கொட்டினர்; சிறைக்கோட்டம் சென்றனர். எட்டுத் தமிழ்ச் சீயங்கள் எந்த நாட்டிலும் இல்லாத வரலாறு படைத்து, மொழி காக்கத் தீக்குளித்து மடிந்தனர்!

எனவே; தமிழா! ‘கிளம்பிற்றுக்காண் தமிழ்ச் சிங்கக்கூட்டம் - கிழித்தெறியத் தேடுதுகாண் பகைக்கூட்டத்தை!’ எனும் புரட்சிக் கவியைப் போர்ப் பரணியாக்குக! “தமிழன் என்று சொல்லடா - தலைநிமிர்ந்து நில்லடா!” என்ற நாமக்கல் கவிஞரின் வீரங்கொப்பளிக்கும் பாட்டு முழக்கத்தைச் செய்திடுக! “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே!” பாரதியாரின் இந்தப் பாடல்தரும் உணர்ச்சிகளை எதிரொலித்து, எக்காளமிட்டுக் கிளம்புக!

தமிழனின் சீர்த்திக்கொடி பட்டொளி வீசிப் பறந்தது பல நாடுகளில்! அவன் செலுத்திய கலங்கள், கடல் அலைகளைக் கிழித்துக்கொண்டு அயல்நாடுகள்

பலவற்றுடன் வாணிபம் நடத்தியதாக வரலாறு, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உண்டு! அதங்கோட்டு ஆசானின் அறிவுசால் மாணவர் தொல்காப்பியர், நாலாயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழுக்கு இலக்கணம் கண்டார் என்றால்; அதற்கு முன்பு நாலாயிரம் ஆண்டுகளாவது வளர்ந்த மொழியாகத்தானே நம்மொழி - செம்மொழி-தமிழ்மொழி இருந்திருக்கவேண்டும்!

‘கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த குடி நம் தமிழ்க் குடி’யன்றோ! அகமென்றும் புறமென்றும் வாழ்வுக்கு இலக்கியம் வகுத்துக் கொண்ட பெருமைமிகு இனமல்லவா தமிழ் இனம்! கற்கண்டெனும் சொற் கொண்டு கண்ணகியின் கதைக்குச் சிலப்பதிகாரக் காப்பியம் வடித்த இளங்கோவும் அவர் அண்ணன் செங்குட்டுவன் இமயம் வரை படை நடத்திக் குயிலாலுவம் எனும் இடத்தில் கனகவிசயர் தலையில் கல்லேற்றிக்கொணர்ந்து அந்தக் கற்பரசிக்குச் சிலை வடித்த செயலும் - தமிழ் இனத்திற்கு கிடைத்த பெருமைகளன்றோ?

தமிழ் இளைஞன் ஒருவன் இப்படி அவை நடுவே நின்று தன் இனப் பெருமையை உரத்தக் குரலில் அடுக்கிக் கொண்டிருந்தான். நூற்றுக்கணக்கானோர் அந்த அவையில் கூடியிருந்தனர் முதலில்! இளைஞன் பேசப் பேச, அவை இளைக்கத் தொடங்கியது; ஒவ்வொருவராக உதட்டைப் பிதுக்கியவாறும் - நெற்றியைச் சுளித்தவாறும் - விழிகளை அகல விரித்தவாறும் - அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். அவர்களின் வாய்கள் முணுமுணுத்துக் கொண்டும் இருந்தன.

“ஆமாம்! பெரிய இனத்தைக் கண்டான்! தமிழ் இனமாம் தமிழ் இனம்; தகரக்குவளை இனம்! பித்தன் போல் உளறுகிறான்” - இப்படிப் பேசிக்கொண்டும் கேலி புரிந்துகொண்டும் அனைவரும் வெளியேறிவிட்டபோதிலும் ஒரே ஒரு தாடிக்காரப் பெரியவர் அங்கே நின்றுகொண்டிருந்தார். கடல் நுரைபோல் நரைத்த நீண்ட தாடி! பொன்மேனி! சிங்கத்தின் தோற்றம். அவர் அருகே இளைஞன் சோகம் ததும்பிடும் முகத்துடன் சென்றான். “பெரியவரே! நமது தமிழ் இனத்தைப் பற்றிப் பேசுகிறேன். அவையிலிருந்தோர் அனைவரும் போய்விட்டனரே! என்ன காரணம்?” என்று கேட்டான்.

“தம்பி! தூய்மையில்லாமல் அழுக்குப் படிந்திருக்கும் முற்றத்தில் அமிழ்தம் சிந்திவிட்டால் என்ன ஆகுமோ, அதைப்போலத்தான் நம் இனத்தவர் அல்லாத ஒரு கூட்டத்தின்முன் பேசுவது ஆகிவிடும் என்று வள்ளுவர் எழுதியிருக்கிறாரே... அதை மறந்து விட்டாயா?” என்று பதில் சொல்லிவிட்டு இளைஞனைத் தட்டிக் கொடுத்து விடை பெற்றுச் சென்றுவிட்டார்.

“அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர் அல்லார்முன் கோட்டி கொளல்”

அதிகாரம் - 72 - அவை அறிதல்; பாடல் - 720

அங்கணம் = முற்றம்

கணத்தர் = இனத்தவர்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்