பொருளடக்கம் 218 / 300
அறிதோறு அறியாமை
அச்சுப் பக்கம் 466–467 · ஸ்கேன் 483–484 · அதிகாரம் 111 (புணர்ச்சி மகிழ்தல்) — குறள் 1110
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
புதிய புதிய நூல்களைப் படித்துக்கொண்டே இருக்கவேண்டும் அவனுக்கு!
பழங்கால இலக்கியங்களைத் திரும்பத் திரும்பப் படித்துச் சுவைப்பான்!
மறுமலர்ச்சி இலக்கியங்கள் எவை வரினும் அவன் கைகளில் ஏறிக் கொள்ளும்! கண்வழி சென்று கருத்தறையில் அமர்ந்துகொள்ளும்!
நில நூலா - வரலாறா - அறிவுத்துறை எதுவா - கட்டுரையா - கவிதைகளா - நவீனங்களா - நாடகங்களா - அனைத்தையும் படித்து முடித்தால்தான் அவன் ஆசையில் ஒரு துளி நிறைவேறும்.
படித்தவை போக எஞ்சியிருப்பவைகளுக்காக ஏங்கிக்கொண்டிருப்பான். அவ்வளவு அறிவுப்பசி அவனுக்கு! இதயத்தில் மூண்டிருந்த அந்தப் பசிக்கு ஈடுகொடுக்க, நூல்நிலையங்களே விருந்து மண்டபங்களாயின.
இரைப்பை இருக்கிறதே; அது உண்டிட உண்டிட ஓய்வு தேவை என்று எச்சரித்துவிடும்!
இதயப்பையோ அறிவுத்தீனி கிடைத்திடக் கிடைத்திட விரிந்து கொடுக்கும்! தின்ற தீனி செரித்துக்கொண்டேயிருக்கும்! புதிய தீனியைத் தேடிக் கொண்டேயிருக்கும்.
நூல்களை நாடிப் பெற்று நூற்பொருளைத் தெளிவாய்க் கற்ற ஒருவன்; தான் - புதிது புதிதாக அறிந்திட - அறிந்திட, தனக்கு ஏற்கெனவே இருந்த அறியாமையை எண்ணிக்கொண்டு வியப்படைகிறானாம்! இன்று ஒரு நூற்பொருளைப் புரிந்துகொண்டு அறிவு நீரோடையில் மூழ்கிடும்போது - நேற்று குளித்தெழுந்த நீரோடை இதனினும் சிறப்புக் குறைந்ததேயென்று முடிவுக்கு வருகிறான்.
இப்படி நூற்பொருளைப் புதிது புதிதாகக் கற்றுணரும்போது அவனுக்கு ஏற்படும் இன்ப உணர்மை, ஏதுடன் ஒப்பிடுவது எனச் சிந்திக்கிறான்.
அவனது அருமைக் காதலியுடன் கூடும்பொழுதெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் இன்பம் புதுமையாக இருந்து - அதற்கு முன் கண்ட சுகம் இதற்கு இரண்டாவதே என எண்ணித்தக்க அளவுக்கு அமைக்கிறதல்லவா - அந்த ஓர் உணர்வுடன் மட்டுமே ஒப்பிட முடியுமென்று முடிவுக்கு வருகிறான்.
“கண்ணின் மணியே! இன்று கண்ட இன்பம் நான் இதுவரையில் கண்டதில்லை!”
“நானும்தான் அத்தான்!”
ஒவ்வொரு முறையும் இப்படியே இன்ப உணர்வில் மயங்கி, இதற்கு முன்பு இதனை அறியாமல் இருந்தோமே என நினைத்திடும் காதலர் நிலைதான், ஒவ்வொரு நூலையும் படித்து அதன் நூற்பொருளை அறிந்துகொள்கிறவருக்கும்! இதுவரை இருந்த அறியாமை, புதிது புதிதாக, அறிந்திட அறிந்திட வெளிப்படுவதுபோல, இதுவரை கற்றிடாத கூடல்சுவையும் புதுப்புது விதமாய்க் கூடி களிக்கும்போது புலப்படுகின்றன போலும்!
“செறிதோறு அணிகலன்களைப் பூண்ட இவளிடம் பொருந்தும்பொழுதெல்லாம் ஏற்படுகின்ற இன்பத்தை உணர்வது, நூற்பொருளை அறிய அறிய முன்னிருந்த அறியாமையை உணர்ந்தாற் போன்றது”
என்றார் திருவள்ளுவர்! என்னே அழகான உவமை! இதோ அந்தக் குறள்:
“அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு”
அதிகாரம் - 111 - புணர்ச்சி மகிழ்தல்; பாடல் - 1110
செறிதோறும் = சேர்ந்து பொருந்தும்போதெல்லாம்
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்